திருச்சி மாநகரம் தில்லைநகர் 5வது குறுக்குத் தெருவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வசித்து வருகிறார். இவரது வீடு அருகே 10-வது குறுக்குத் தெருவில் மறைந்த அவரது சகோதரர் கே.என்.ராமஜெயத்தின் வீடு உள்ளது.
இந்நிலையில் இன்று காலை, 7 மணியளவில் கோவையில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கே.என்.நேரு வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல, கே.என்.ராமஜெயம் வீட்டில், மதுரையில் இருந்து வந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு இடங்களிலும் அமலாக்கத்துறையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சென்னையில் உள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், நேருவின் மகன் அருண் நேரு எம்பி ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.