உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த தீ விபத்தில் தொழிற்சாலைகளுக்குள் பல தொழிலாளர்கள் இருந்ததாகவும், சிலர் இன்னும் சிக்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த மீட்பு பணியில் தொழிற்சாலைக்குள் இருந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தொழிற்சாலையில் தீயின் தீவிரம் அதிகமாக இருப்பதால் மீட்பு பணி சவாலாக இருந்தது என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின்னர் தொழிற்சாலையில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொழிற்சாலையில் உள்ள அபாயகரமான பொருட்கள் மற்றும் அடர்ந்த புகை காரணமாக மீட்பு பணிகள் சிக்கலாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.