சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இடம்பெற்ற திருட்டு முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வீட்டில் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை கண்டு சத்தம் போட்டனர். பயந்த திருடன் உடனடியாக கதவை உள்ளிருந்து தாழ்பாள் போட்டுவிட்டு முடங்கி விட்டார்.
உடனடியாக இந்த தகவல் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டைச் சுற்றி பாதுகாப்பு ஏற்படுத்தினர்.
வீட்டின் கதவை உடைக்க தீயணைப்புத்துறையினர் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கதவை உடைத்து உள்ளே நுழைந்த காவலர்கள், கட்டிலுக்கடியில் மறைந்திருந்த திருடனை பிடித்து கைது செய்தனர்.
பொதுமக்கள் முன்பு கைதான அந்த நபர் பாலமுருகன் என அடையாளம் காணப்பட்டார். அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.