ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோமாகோபா(19)தன்னுடைய வீட்டின் அருகே வசித்த யாஸ்மதி போபாங்(17) என்ற சிறுமியை சில மாதங்களாக காதலித்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோபா சிறுமியை ஜார்கண்டிலிருந்து குன்றத்தூருக்கு அழைத்து வந்து நந்தம்பாக்கம் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கினார்.
இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர்.இதனையடுத்து கோபா தனது நண்பர்களான சுனில் கோப்(19) மற்றும் பச்சா(19) ஆகிய இருவரையும் அதே வீட்டில் தங்க வைத்தார். இவர்கள் அனைவரும் சிட்கோ பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
சில நாட்களாக சோமாகோபா ஒரு பெண்ணிடம் அதிக நேரம் செல்போனில் பேசி வந்ததால் யாஸ்மதி அவரை கண்டித்துள்ளார். ஆனால் கோபா அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தாததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் சிறுமி கடந்த மாதம் 29 ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இதுகுறித்து தகவல் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது உறுதியானது.
அதன் அடிப்படையில் கோபாவையும் சுனில் கோபையும் போலீசார் பிடித்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது ஆரம்பத்தில் கோபா யாஸ்மதி மீது பாசமாக இருந்துள்ளார்.
அதன்பிறகு வேறொரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமி கோபாவுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்ததார். சம்பவம் நடந்த அன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது கோபா தனது நண்பர்களுடன் சேர்ந்து யாஸ்மதியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கியது போல நாடகமாடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.