ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் விட்டுச் சென்ற பல லட்சம் ஆயுதங்களை தாலிபன் என்ன செய்தது?
BBC Tamil April 08, 2025 01:48 PM
Getty Images தாலிபனுக்கு எதிராக ஆப்கானிய பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவளிக்க ஹெராட்டில் ஆயுதங்களுடன் நிற்கும் ஆப்கானிய போராளிகள்.

ஆப்கானிஸ்தானில் இருந்து ஐந்து லட்சம் ஆயுதங்கள் காணாமல் போயுள்ளன. அவை விற்கப்பட்டிருக்கலாம் அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என பிபிசியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆயுதங்களில் சில அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் கைகளுக்கும் சென்றுவிட்டன என்று ஐக்கிய நாடுகள் சபை நம்புகிறது.

2021 ஆம் ஆண்டில் தாலிபன் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய போது, சுமார் 10 லட்சம் ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் இருந்ததைக் கண்டுபிடித்ததாக பெயர் வெளியிட விரும்பாத ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவின் நிதி உதவியுடன் வாங்கப்பட்டவை. அவற்றில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 மற்றும் எம்16 ரக துப்பாக்கிகளும் அடங்கும்.

ஆயுதங்களைக் கைவிட்டு தப்பி ஓடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் Getty Images தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் (ஆகஸ்ட் 2024) காபூலில் உள்ள முன்னாள் அமெரிக்க தூதரகத்தின் முன் ராணுவ அணிவகுப்பை நடத்தினர்.

2021-ஆம் ஆண்டு தாலிபன் முன்னேறிய வேளையில், ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிலர் சரணடைந்தனர். மற்றவர்கள் தங்கள் ஆயுதங்கள் மற்றும் வாகனங்களுடன் தப்பிச் சென்றனர்.

அதேபோல், ஆப்கனை விட்டு வெளியேறிய அமெரிக்க ராணுவமும் சில உபகரணங்களை அங்கேயே விட்டுச் சென்றது.

கடந்த ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடைகள் குழு கூட்டத்தில், ராணுவ உபகரணங்கள் மற்றும் பாதி ஆயுதங்கள் காணாமல் போயுள்ளதாக தாலிபன் ஒப்புக்கொண்டதாக வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளன.

ஐநா குழுவைச் சேர்ந்த ஒருவர், பல்வேறு ஆதாரங்களின் மூலம் இதனை உறுதிப்படுத்தியதாகவும், சுமார் ஐந்து லட்சம் ஆயுதங்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறினார்.

அல்-கொய்தா தொடர்புடைய அமைப்புகளுக்கு அமெரிக்க ஆயுதங்கள் கிடைத்ததா? Getty Images 2021 ஆம் ஆண்டு தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியபோது, அவர்களிடம் சுமார் 1 மில்லியன் ராணுவ ஆயுதங்கள் இருந்தன

அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அமைப்புகள் இந்த ஆயுதங்களை கள்ளச் சந்தையில் இருந்து வாங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை பிப்ரவரியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் மற்றும் ஏமனின் அன்சாருல்லா இயக்கம் ஆகியவை அடங்கும்.

"நாங்கள் மிகுந்த கவனத்துடன் ஆயுதங்களை பாதுகாக்கிறோம்," என்று தாலிபன் அரசாங்கத்தின் துணை செய்தித் தொடர்பாளர் ஹமீதுல்லா ஃபித்ரத் பிபிசியிடம் தெரிவித்தார்.

"ஆயுதங்கள் கடத்தப்படுவது அல்லது அவை காணாமல் போவது பற்றிய பேச்சு தவறானது. அனைத்து இலகுரக மற்றும் கனரக ஆயுதங்களும் முற்றிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.

வாட்ஸ்அப்பில் ஆயுதங்கள் விற்பனை Getty Images ஆப்கானிஸ்தானில் ஒரு பகுதியைக் கைப்பற்றிய பிறகு தாலிபன் ஆயுதக்குழுவினர்

2023-ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, தாலிபன் கைப்பற்றிய அமெரிக்க ஆயுதங்களில் 20 சதவீதத்தை உள்ளூர் தளபதிகளுக்குக் வழங்கியதாக அறியப்படுகின்றது.

இந்த தளபதிகள் தங்களது பகுதிகளில் சுதந்திரமாக இயங்கி வருகிறார்கள்.

இதுவே ஆயுதங்கள் கள்ளச் சந்தையில் புழங்கி வருவதற்கான முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

"உள்ளூர் தளபதிகள் மற்றும் குழுவினரிடையே அதிகாரத்தை பலப்படுத்த ஆயுதங்கள் பெரிய அளவில் பரிசாக வழங்கப்படுகின்றன. இது இந்த ஆயுதங்களின் முக்கிய ஆதாரமாக உள்ளது" என்று ஐ.நா. கூறியது.

காந்தஹாரில் உள்ள ஒரு முன்னாள் பத்திரிகையாளர் பிபிசியிடம் பேசுகையில், "தாலிபன் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்கு, திறந்த ஆயுத சந்தை இருந்தது. ஆனால் இப்போது அது வாட்ஸ்அப் மூலம் நடத்தப்படுகின்றது" என்றார்.

உள்ளூர் தளபதிகளும் செல்வந்தர்களும் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க ஆயுதங்களையும், ராணுவ உபகரணங்களையும் வர்த்தகம் செய்ய இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த ஆயுதங்களில் பெரும்பாலானவை ஆப்கன் ராணுவத்தால் விட்டுச் செல்லப்பட்டவை.

ஐ.நா.வால் கூட சரியான தரவுகளைச் சேகரிக்க முடியவில்லை Getty Images ஆயுதங்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக ஒரு அறிக்கை கூறியது.

ஆப்கானிஸ்தான் மறுசீரமைப்புக்கான அமெரிக்க சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் (SIGAR) பதிவு செய்யப்பட்டுள்ள ஆயுதங்களின் எண்ணிக்கை, அனைத்து ஆதாரங்களில் இருந்தும் பெறப்பட்ட தகவல்களை விடக் குறைவு என்று ஐ.நா. தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஐ.நா.வும் 2022-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில் துல்லியமான தரவுகளைச் சேகரிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக, பல்வேறு அமெரிக்கத் துறைகளும் அமைப்புகளும் ஆப்கானிஸ்தானுக்கு ராணுவ உபகரணங்களை வழங்கி வருகின்றன.

"கைவிடப்பட்ட ஆயுதங்கள் மற்றும் நிதிகளின் அளவு குறித்து வெளியுறவுத்துறை எங்களுக்கு வரையறுக்கப்பட்ட மற்றும் தவறான தகவல்களை வழங்கியது" என்று கூறி, ஆப்கானிஸ்தான் மறுசீரமைப்புக்கான அமெரிக்க சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அமைப்பு, அமெரிக்க வெளியுறவுத் துறையை விமர்சித்தது.

இருப்பினும், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

'ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ஆயுதங்கள் திரும்பப் பெறப்படும்' Getty Images ஆப்கானிஸ்தானில் 85 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதி நவீன ஆயுதங்கள் எஞ்சியுள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இது அமெரிக்காவில் ஒரு முக்கிய அரசியல் பிரச்னையாக உள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதங்களை திரும்பப் பெறுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை கூறியுள்ளார்.

மேலும், 85 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்கள் அங்கேயே விடப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

"உலகிலேயே ராணுவ உபகரணங்களை அதிகம் விற்பனை செய்யும் நாடுகளில் ஆப்கானிஸ்தான் ஒன்றாகும், ஏன் தெரியுமா? நாங்கள் விட்டுச் சென்ற ஆயுதங்களை அவர்கள் விற்கிறார்கள்," என்று டிரம்ப் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் போது தெரிவித்தார்.

"எனது கவனம் இதில் தான் உள்ளது. ராணுவ உபகரணங்களுக்கு ஈடாக, நாங்கள் பணம் செலுத்த வேண்டியிருந்தாலும் கூட, எங்களது ராணுவ உபகரணங்களை நாங்கள் திரும்பப் பெற விரும்புகிறோம், " என்றும் அவர் கூறினார்.

"டிரம்ப் குறிப்பிட்ட எண்ணிக்கை சந்தேகத்திற்குரியது" Getty Images தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், இந்த ஆயுதங்களை தாலிபன் முந்தைய அரசாங்கத்திடமிருந்து கைப்பற்றியுள்ளனர், மேலும் அவை நாட்டைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும்.

ஆப்கானிஸ்தானில் செலவிடப்பட்ட தொகையில் பயிற்சி மற்றும் ஊதியச் செலவுகள் உள்ளிட்டவையும் அடங்கும் என்பதால், டிரம்ப் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் கேள்விக்குறியவையாகவே உள்ளன.

கடந்த ஆண்டு, ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் முதல் 25 ஏற்றுமதியாளர்களின் பட்டியலைத் தொகுத்தது .

இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் சேர்க்கப்படவில்லை.

டிரம்பிற்கு பதிலளித்த தாலிபனின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்,

"முந்தைய அரசாங்கத்திடமிருந்து இந்த ஆயுதங்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். அவை நாட்டின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும்" என்று ஆப்கான் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

அமெரிக்க ஆயுதங்களால் வலுப்பெற்ற தாலிபன் Getty Images பாக்ராம் விமான நிலையத்தில் அமெரிக்க சினூக் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தாலிபன்கள் தங்களது வெற்றியின் அடையாளமாக, அமெரிக்க-நேட்டோவின் முக்கியத் தளமாக இருந்த பாக்ராம் விமானப்படைத் தளம் மற்றும் அமெரிக்க ஆயுதங்களை தொடர்ந்து காட்சிப்படுத்தி வருகிறது.

2021-இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு, விட்டுச் சென்ற ராணுவ உபகரணங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகக் பென்டகன் கூறியது.

இருப்பினும், கைவிடப்பட்ட அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி தாலிபன் ஒரு வலுவான படையை உருவாக்கியுள்ளது.

அமெரிக்க ஆயுதங்களின் உதவியுடன் தான் தாலிபன்கள் ஆப்கனில் தங்களுக்கு எதிரான ஆயுதக்குழுக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானிடம் உள்ள பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் Getty Images காந்தஹாரில் இன்னும் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் உள்ளன, ஆனால் அவற்றை இயக்க தாலிபனிடம் பயிற்சி பெற்ற விமானிகள் இல்லை.

"நூற்றுக்கணக்கான" உயர் வகை பல்நோக்கு சக்கர வாகனங்கள் (HMMWVs), கண்ணிவெடிகளின் தாக்கத்தைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு வாகனங்கள் (MRAPs), மற்றும் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் தற்போது வரை கந்தஹாரில் உள்ள கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தாலிபன் தாங்கள் கைப்பற்றிய சில ராணுவ உபகரணங்களை பிரசார வீடியோக்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் அவர்களிடம் இல்லை.

பல்வேறு சிறப்புத்தன்மையுடன் கூடிய அமெரிக்க ராணுவ உபகரணங்கள் இன்றும் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

ஹம்வீஸ் மற்றும் சிறிய ஆயுதங்கள் போன்ற எளிதாக இயக்கக்கூடிய உபகரணங்களை, தாலிபன்கள் தங்கள் நடவடிக்கைகளில் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.