கணினி சிப் தயாரிப்பில் ஆதிக்கத்தை நிறுவ முயலும் அமெரிக்கா - ஆசியாவின் சவாலை சமாளிக்குமா?
BBC Tamil April 17, 2025 03:48 AM
BBC நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகும், தொழில்நுட்ப மேலாதிக்கத்துக்காக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உள்ள போட்டியில் சிப்கள் ஒரு முக்கியப் போர்க்களமாகவே உள்ளன.

பல ஆண்டுகளாக அமெரிக்கா சிப் உற்பத்தியை "தவற விட்டுவிட்டது" . இதன் காரணமாக சீனா மற்றும் பிற ஆசிய நாடுகள் வேகமாக முன்னேறத் தொடங்கின.

அப்போது அமெரிக்க வர்த்தகச் செயலாளராக இருந்த ஜினா ரைமண்டோ, 2021 இல் எனக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகும், தொழில்நுட்ப மேலாதிக்கத்துக்காக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உள்ள போட்டியில் சிப்கள் ஒரு முக்கிய போர்க்களமாகவே உள்ளன.

இந்நிலையில், பிற நாடுகள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து, முழுமையாக வெற்றி பெற்ற ஒரு மிக நுட்பமான, சிக்கலான உற்பத்தி முறையை வேகப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

தனது சுங்க வரிக் கொள்கை அமெரிக்கப் பொருளாதாரத்தை விடுவித்து, வேலைவாய்ப்புகளை மீண்டும் அமெரிக்காவுக்குச் சாதகமாக கொண்டு வரும் என டிரம்ப் கூறுகிறார்.

ஆனால், திறமையான தொழிலாளர்கள் கிடைக்காமலும், அமெரிக்க தொழிற்சாலைகளில் உள்ள தரமற்ற உற்பத்தியோடும், சில பெரிய நிறுவனங்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றன.

அப்படியானால், டிரம்ப் வித்தியாசமாக என்ன செய்யப் போகிறார் ?

தைவான் மற்றும் ஆசியாவின் பிற நாடுகள் உயர்தரமான சிப்களை உருவாக்கும் ரகசிய தொழில்நுட்பங்களை வைத்திருக்கும்போது, அமெரிக்காவும் அவற்றை பெரிய அளவில் உற்பத்தி செய்வது உண்மையில் சாத்தியமா?

மைக்ரோசிப்களை உருவாக்குதல்: ரகசிய தொழில்நுட்பம் Getty Images மைக்ரோசிப்கள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் ஆசிய நாடுகள் அதன் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

சலவை இயந்திரங்கள் முதல் ஐஃபோன்கள் வரை, ராணுவ ஜெட் விமானங்கள் முதல் மின்சார வாகனங்கள் வரை அனைத்துப் பொருட்களுக்கும் மின்சாரம் வழங்குவதில் செமிகண்டக்டர்கள் (semiconductors) முக்கிய இடம் வகிக்கின்றன.

சிப்கள் (chips) எனப்படும் இந்த சிறிய சிலிக்கான் தகடுகள் முதலில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால் இன்று, மிகவும் மேம்பட்ட சிப்கள் ஆசியாவில் தான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சிப்களை உருவாக்குவதற்கு அதிகம் செலவாகும். மேலும் தொழில்நுட்ப ரீதியாக சிக்கலான செயல்முறையும் ஆகும்.

உதாரணமாக, அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட தைவான், ஜப்பான் அல்லது தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட, சீனாவில் இருந்து எடுக்கப்படும் அரிய உலோகங்கள் போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிப்களை ஒரு ஐபோன் கொண்டிருக்கலாம்.

அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, அவை வியட்நாமில் பேக்கேஜிங் செய்யப்படுவதற்கும், அதன் பிறகு அவற்றை ஒன்றிணைக்கவும், சோதனை செய்வதற்கும் சீனாவுக்கு அனுப்பப்படலாம். பல ஆண்டுகளாக வளர்ந்து, ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்ட சிப்களை உற்பத்தி செய்யும் அமைப்பாக இது உள்ளது.

சிப் துறையை டிரம்ப் பாராட்டியுள்ளார், ஆனால் அதற்கு வரி விதிக்கப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் தொழிற்சாலைகளை கட்டவில்லை என்றால் 100 சதவிகித வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று தொழில்துறையின் முன்னணி நிறுவனமான தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனத்திடம் (TSMC) அவர் கூறியுள்ளார்.

இவ்வளவு சிக்கலான உற்பத்தி அமைப்பும் கடுமையான போட்டியும் உள்ள நிலையில், நிறுவனங்கள் அதிக செலவுகள் மற்றும் நீண்ட கால முதலீடுகளைச் செய்ய திட்டமிட வேண்டும், அது டிரம்ப் ஆட்சியில் இருக்கப்போகும் காலத்துக்குப் பிறகும் தொடர வேண்டும். கொள்கைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களும் அதற்கு உதவவில்லை.

இதுவரை, சில நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்ய விருப்பம் காட்டியுள்ளன.

சீனா, தைவான், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் சிப்களை உருவாக்கும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கிய குறிப்பிடத்தக்க மானியங்கள் அவற்றின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளன.

2022 ஆம் ஆண்டு அதிபர் ஜோ பைடனின் கீழ் சட்டமாக மாறிய அமெரிக்க சிப்கள் மற்றும் அறிவியல் சட்டத்தின் பின்னணியில் இருந்த சிந்தனையும் அதுதான் .

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மானியங்கள், வரிச் சலுகைகள் மற்றும் மானியங்களை ஒதுக்குவதன் மூலம் சிப்களின் உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவுக்குக் கொண்டு வரவும், விநியோகச் சங்கிலிகளை பன்முகப்படுத்தவும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

Getty Images அமெரிக்காவில் தொழிற்சாலைகளை கட்டாவிட்டால் TSMC-க்கு 100 சதவிகித வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பாளரான தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (TSMC) மற்றும் உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பாளரான சாம்சங் (Samsung) போன்ற சில நிறுவனங்கள் இந்தச் சட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளன.

தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (TSMC) அரிசோனாவில் ஆலைகளை கட்டுவதற்காக 6.6 பில்லியன் டாலர் மானியங்கள் மற்றும் கடன்களைப் பெற்றுள்ளது, மேலும் சாம்சங் டெக்சாஸின் டெய்லரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்காக சுமார் 6 பில்லியன் டாலர் பெறுகிறது.

மூன்று ஆலைகளுக்கு 65 பில்லியன் டாலர் முதலீடு உறுதி செய்த தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம், அமெரிக்காவில் மேலும் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

சீனா தைவானை கட்டுப்படுத்துவதாக தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், சிப் உற்பத்திப் பணிகளை பன்முகப்படுத்துவது தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனத்துக்கும் பயனளிக்கக்கூடும்.

ஆனால், தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் மற்றும் சாம்சங் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களுடைய முதலீடுகளில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன, அதிகரித்து வரும் செலவுகள், திறமையான தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதில் ஏற்படும் சிரமங்கள், கட்டுமான தாமதங்கள் மற்றும் உள்ளூர் சங்கங்களின் எதிர்ப்புகள் ஆகியவை அதில் அடங்கும். "இது வெறும் பெட்டிகளை உருவாக்கும் தொழிற்சாலை அல்ல," என்கிறார் சந்தை நுண்ணறிவு நிறுவனமான கவுண்டர்பாயிண்டின் ஆராய்ச்சி இயக்குனர் மார்க் ஐன்ஸ்டீன். "சிப்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் மிகவும் உயர் தொழில்நுட்பம் கொண்ட, மிகவும் சிக்கலான சூழல்களில் கட்டப்படுகின்றன, அவற்றைக் கட்டுவதற்கு பல ஆண்டுகள் ஆகும்."

அமெரிக்க முதலீடு இருந்தபோதிலும், குறிப்பாக மிகவும் மேம்பட்ட கணினி சிப்கள் உட்பட, அதன் பெரும்பகுதி உற்பத்தி தைவானில் தான் இருக்கும் என்று தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் கூறியுள்ளது.

தைவானின் வலிமையை சீனா திருட முயன்றதா?

இன்று, அரிசோனாவில் உள்ள தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவன ஆலைகள் உயர்தர சிப்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால் "சிப் வார்: தி ஃபைட் ஃபார் தி வேர்ல்ட்ஸ் மோஸ்ட் கிரிட்டிகல் டெக்னாலஜி" என்ற புத்தகத்தின் ஆசிரியரான கிறிஸ் மில்லர், "தைவானில் அவர்கள் ஒரு தலைமுறைக்குப் பின்னால் உள்ளனர்" என்கிறார்.

"உற்பத்தி அளவு என்பது, அமெரிக்கா மற்றும் தைவானில் எவ்வளவு முதலீடு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தது. இன்று, தைவான் அதிக உற்பத்தி திறனைக் கொண்டுள்ளது." என்று அவர் கூறுகிறார்.

உண்மை என்னவென்றால், தைவான் அந்த திறனை வளர்த்துக் கொள்ள பல ஆண்டு காலம் ஆனது, மேலும் இந்தத் துறையில் தைவானின் வலிமையைத் திருட சீனா பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடும் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், அது தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

Getty Images தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் அமெரிக்காவில் சிப் தயாரிப்பில் முதலீடு செய்துள்ளது.

தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் தான் "ஃபவுண்டரி மாடலின்" முன்னோடியாக இருந்தது, இதில் சிப் தயாரிப்பாளர்கள், அமெரிக்க நிறுவனங்களின் வடிவமைப்புகளை எடுத்து, அந்த நிறுவனங்களுக்காக சிப்களை உற்பத்தி செய்தனர்.

ஆப்பிள், குவால்காம் மற்றும் இன்டெல் போன்ற சிலிக்கான் வேலியைச் சார்ந்த தொடக்கநிலை நிறுவனங்களின் எழுச்சியைக் கடந்து வந்த தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம், சிறந்த பொறியாளர்கள், மிகவும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் அறிவைப் பகிரும் சூழலுடன், அமெரிக்கா மற்றும் ஜப்பானிய தொலைநோக்குப் பார்வை கொண்ட நிறுவனங்களுடன் போட்டியிட முடிந்தது.

"அமெரிக்காவால் சிப்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியுமா?" என்றால், "நிச்சயமாக முடியும். ஆனால் அவர்கள் சிப்களை ஒரு நானோமீட்டர் அளவு வரை குறைத்து தயாரிக்கப் போகிறார்களா? அநேகமாக இல்லை." என்கிறார் ஐன்ஸ்டீன்.

டிரம்பின் குடியேற்றக் கொள்கை இதற்கு ஒரு காரணமாக உள்ளது.

இந்தக் கொள்கையினால், சீனா மற்றும் இந்தியாவிலிருந்து திறமையான பணியாளர்கள் அமெரிக்காவுக்கு வருவதை கட்டுப்படுத்தும் அபாயம் உள்ளது.

அமெரிக்காவுக்கு திறமையான தொழிலாளர்களைக் கொண்டுவரும் அமெரிக்காவின் H-1B விசா திட்டத்துக்கு மஸ்க் அளித்த ஆதரவைக் குறிப்பிட்டு, "டெஸ்லாவுக்கான பொறியாளர்களைப் பெற்றுக்கொள்வதில், ஈலோன் மஸ்க் கூட குடியேற்றச் சிக்கல்களை எதிர்கொண்டார்," என்று ஐன்ஸ்டீன் கூறுகிறார்.

"அது ஒரு பெரிய தடையாக இருக்கிறது. குடியேற்றம் தொடர்பான தங்களின் நிலைப்பாட்டை முழுமையாக மாற்றாவிட்டால், அவர்களால் அதை சமாளிக்க முடியாது. ஏதாவது மாயாஜாலம் செய்வது போல் திடீரென்று திறமையான தொழிலாளர்களை உருவாக்க முடியாது" என்கிறார் ஐன்ஸ்டீன் .

உலகளாவிய தாக்கம்

அப்படியிருந்தும், டிரம்ப் சுங்க வரிகளை இரட்டிப்பாக்கியுள்ளார், செமிகண்டக்டர் துறையில் தேசிய பாதுகாப்பு வர்த்தக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

"இது முறையாக இயங்கிக் கொண்டிருந்த அமைப்பில் ஒரு பெரிய தடையாக மாறிவிட்டது," என்கிறார் ஐன்ஸ்டீன்.

"உதாரணத்துக்கு, ஜப்பான் தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க செமி கண்டக்டர்களை முக்கிய அடிப்படையாக எடுத்திருந்தது. ஆனால் சுங்க வரிகள் போன்றவை அந்த வணிகத் திட்டத்தில் இடம் பெற்றவை அல்ல."

மில்லரின் கருத்துப்படி, இந்தத் தொழில்துறையின் நீண்டகால விளைவாக உலகின் முக்கிய பொருளாதாரங்களான சீனா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்நாட்டு உற்பத்தி மீதான கவனம் அதிகரிக்கும்.

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவே, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளை எதிர்கொண்டு, ஐரோப்பா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), சவுதி அரேபியா, மலேசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் தனது சந்தை விரிவாக்கத்தை முன்னெடுத்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் லாப வரம்புகள் குறைவாக இருப்பினும், சில நிறுவனங்கள் புதிய சந்தைகளை தேடுகின்றன.

"சீனா இறுதியில் வெற்றி பெற விரும்புகிறது. அதற்காகவே, அது புதிய கண்டுபிடிப்புகளிலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீட்டிலும் தீவிரமாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. டீப்சீக் (Deepseek) விஷயத்தில் அது என்ன செய்தது என்பதையே பாருங்கள்," என்று சீனாவில் உருவாக்கப்பட்ட ஏஐ சாட்போட்டை குறிப்பிடுகிறார் ஐன்ஸ்டீன்.

"அவர்கள் இன்னும் சிறந்த சிப்களை உருவாக்கினால், அனைவரும் அவர்களையே நாடுவார்கள். குறைந்த செலவில் அதிக திறன் கொண்ட சிப்களை தற்போது அவர்களால் உருவாக்க முடியாது. அதி உயர் தொழில்நுட்ப உற்பத்தித் திறனைப் பெறுவதே எதிர்கால நோக்கமும் ஆகும்"

Getty Images தனது சுங்க வரிக் கொள்கை அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை மீண்டும் நாட்டுக்கே கொண்டு வரும் என டிரம்ப் கூறுகிறார்.

இதற்கிடையில், புதிய உற்பத்தி மையங்கள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. நிபுணர்கள் கூறுகையில், இந்தியா சிப் விநியோகச் சங்கிலியில் அமெரிக்காவை விட சிறப்பாக ஒருங்கிணைக்கப்படுவதற்கு சாத்தியமுள்ள நாடாக உள்ளது. சிப்களை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இந்தியா நிலவியல் ரீதியாக நெருக்கமாக உள்ளதும், தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்குதலும், மேம்பட்ட கல்வி தரமும் இதற்கு காரணமாக உள்ளது.

இந்தியா சிப் உற்பத்திக்குத் தயாராக இருப்பதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், அது சில முக்கியமான சவால்களை எதிர்கொள்கிறது. இதில் தொழிற்சாலைகளுக்கான நிலத்தை கையகப்படுத்துதல் மற்றும் தேவையான தண்ணீர் கிடைப்பது முக்கியமானவை. சிப் உற்பத்திக்கு உயர்தரமான மற்றும் அதிகமான தண்ணீர் தேவைப்படும்.

பேரம் பேசும் சிப்கள்

சிப் நிறுவனங்கள் முற்றிலும் சுங்க வரிகளின் கட்டுப்பாட்டில் இல்லை.

மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், சிஸ்கோ போன்ற முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் சிப்களை அதிகம் சார்ந்துள்ளன.

இந்நிலையில், இத்துறையில் வரிகள் விதிக்கப்பட்டால் அவற்றை மாற்ற வேண்டும் என டிரம்புக்கு அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் மேற்கொண்ட செய்த தீவிர முயற்சியின் விளைவாகவே, ஸ்மார்ட்போன், மடிக்கணினி மற்றும் மின்னணு உற்பத்திகளுக்கான சுங்க வரிகளில் விலக்கு கிடைத்ததாக சிலர் நம்புகின்றன.

மேலும் இதன் விளைவாகவே , சீனாவுக்கு என்விடியா விற்கும் சிப்களில் இருந்த தடையை, டிரம்ப் நீக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திங்களன்று அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் ஆப்பிள் தயாரிக்கும் பொருட்கள் குறித்து கேட்டபோது, "நான் நெகிழ்வான தன்மை கொண்டவர்" என்று பதிலளித்தார் டிரம்ப். மேலும், "சில விஷயங்கள் வரக்கூடும், நான் டிம் குக்குடன் பேசுகிறேன், சமீபத்தில் டிம் குக்குக்கு உதவினேன்" என்றும் கூறினார்.

Getty Images சீனாவுக்கு சிப் விற்பனை செய்வதற்கான தடையை டிரம்ப் நீக்க வேண்டும் என்று என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் விரும்பினார்.

இவை அனைத்தும் டிரம்ப் இறுதியில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பதால் தான் நடக்கிறது எனக் கருதுகிறார் ஐன்ஸ்டீன். உள்கட்டமைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு சிப்களை உருவாக்க முடியாது என்பதை டிரம்ப் நிர்வாகம் புரிந்துகொண்டுள்ளது.

"டிக் டாக்கின் உரிமையாளர் பைட் டான்ஸுக்குச் செய்ததைத்தான் டிரம்ப் நிர்வாகம் செய்ய முயற்சிக்கிறது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஆரக்கிள் அல்லது வேறு அமெரிக்க நிறுவனத்துக்கு ஒரு பங்கைக் கொடுக்காவிட்டால், இனி உங்களை அமெரிக்காவில் செயல்பட விடமாட்டேன் என்று அவர் கூறுகிறார்," என்கிறார் ஐன்ஸ்டீன்.

தொடர்ந்து பேசிய அவர், "அவர்கள் இங்கேயும் இதேபோன்ற ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் எங்கும் செல்லவில்லை, இன்டெலுடன் ஒப்பந்தம் செய்து, லாபத்தைப் பகிர்ந்துகொள்ள அவர்களை கட்டாயப்படுத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.

ஆசிய செமிகண்டக்டர் சிப் உற்பத்தி அமைப்பு, ஒரு முக்கிய பாடத்தை வழங்குகிறது.

அதாவது, எந்த ஒரு நாடும் தனியாக சிப் தொழிற்சங்கத்தை இயக்க முடியாது, மேலும் மேம்பட்ட செமிகண்டக்டர்களை திறமையாகவும் பெரும்பான்மையாகவும் உருவாக்க விரும்பினால், அதற்கு நேரம் வேண்டும்.

ஆசியா முழுவதும் சிப் தொழில்நுட்பம் உருவாக அனுமதித்தது உலகளாவிய ஒத்துழைப்பினால் நடந்தது எனினும், பொருளாதாரத்தை பாதுகப்பதற்காகவும் மற்ற நாடுகளுடன் அமெரிக்காவுக்கு உள்ள தொடர்பைக் குறைப்பது போன்ற முயற்சிகளின் மூலமாகவும் டிரம்ப், சிப் தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.