கர்நாடக மாநிலம் கே.ஜி.எஃப் பகுதியை சேர்ந்த சேதன் குமார் என்பவர் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 2-ம் தேதி சென்னைக்கு வந்த இவர் சுமார் 3.2 கோடி மதிப்பிலான 3.5 கிலோ எடையுள்ள 5 தங்க கட்டிகளை வாங்கியுள்ளார். பின்பு காரில் கே.ஜி.எப் நோக்கி சென்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் நாயகனேரி வனப்பகுதி அருகே சென்ற போது திடீரென வந்த மர்ம நபர்கள் சேதன்குமாரை வழிமறித்தனர். அவர் கீழே இறங்கியவுடன் மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி தங்கக் கட்டிகளை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து சேதன் குமார் ஆந்திர மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கர்நாடக மாநிலம் கே.ஜி.எஃப் நகரத்தின் நான்காவது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ஜெயபால்(67) மற்றும் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து தங்க கட்டிகளை திருடியது தெரியவந்தது.
இதனால் போலீசார் அவர்களிடம் இருந்த 3.5 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்து அதனை சேதன் குமாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.