ஹிந்து சம்பிரதாயத்தில், கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்தும் வழக்கம் உள்ளது. கர்நாடக மாநிலம், ஹாசனில் வசிக்கும் தொழிலதிபர் தினேஷ்.இவர் வளர்ப்பு பிராணிகள் மீது, அதிக அன்பு கொண்டவர். தன் இல்லத்தில் பசுக்கள், காளைகள் வளர்க்கிறார்.
பெங்களூரின், பிடதி அருகில் உள்ள கிராமத்தில் இருந்து, ஹள்ளிகார் இனத்தைச் சேர்ந்த நான்கு மாத பெண் கன்றுக்குட்டியை சில ஆண்டுகளுக்கு முன் வாங்கி வந்தார். இதற்கு, 'கவுரி' என, பெயர் சூட்டி வளர்க்கிறார்.தற்போது கர்ப்பமாக உள்ள கவுரி பசுவுக்கு, வளைகாப்பு நடத்த முடிவு செய்தார்.
சென்னராயபட்டணாவில் உள்ள திருமண மண்டபத்தில், பசுவுக்கு நேற்று ஹிந்து சம்பிரதாயப்படி வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பெண்களுக்கு நடப்பது போன்று அனைத்து சடங்குகளும் நடந்தன.கவுரி பசுவை அலங்கரித்து, பூ மாலைகள் அணிவித்தனர். வெற்றிலை, பச்சை நிற வளையல்கள், அட்சதை, தேங்காய், பழங்கள் வைத்து ஆரத்தி எடுத்தனர்.
வளைகாப்பு நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு ஐந்து விதமான சாதம் உட்பட, பிரமாண்டமான விருந்து பரிமாறப்பட்டன.பசுவின் கர்ப்ப காலம் ஒன்பது மாதங்கள். இன்னும் ஒரு வாரத்தில் கவுரிக்கு பிரசவமாக உள்ளது. இதனால், தினேஷ் பல லட்சம் ரூபாய் செலவிட்டு, வளைகாப்பு நடத்தியுள்ளார்.
தொழிலதிபர் தினேஷ் கூறியதாவது: ஹள்ளிகார் இன பசுக்கள், உள்நாட்டு இனமாகும். தற்போது இந்த இனம் அழிவின் விளிம்பில் உள்ளது. இதை காப்பாற்றி பாதுகாப்பது நம் கடமை. எனவே, இந்த இன பசுவை வாங்கி வளர்க்கிறேன்.கர்ப்பம் தரித்துள்ள கவுரிக்கு வளைகாப்பு நடத்தியதன் வாயிலாக பசுக்களை பாதுகாக்கும்படி, விவசாயிகள், கால்நடை பிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். வெறும் வியாபார நோக்கில் பசுக்களை வளர்க்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.