'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள்
BBC Tamil April 08, 2025 11:48 PM
oxford

முகலாய பேரரசர்கள் பலரும் இறைச்சி மீது நாட்டம் கொண்டவர்கள் என்ற பொதுவான எண்ணம் இருக்கிறது.

முகலாய உணவுகள் குறித்த பேச்சு அடிபடும் போதெல்லாம், சிக்கன், மட்டன், மீன் என்று பல வகையான அசைவ உணவுகளின் பெயர்களே குறிப்பிடப்படுகிறது.

ஆனால் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், ஒரே ஒரு விசயம் தான் நினைவுக்கு வருகிறது: முகலாய பேரரசர்கள் அக்பர், ஜஹாங்கீர், ஔரங்கசீப் ஆகியோர் காய்கறிகள், பழங்களை அதிகமாக விரும்பி உட்கொண்டனர்.

அக்பர் வேட்டையாடுவதில் வல்லவராக இருந்த போதும், அவர் அசைவ உணவில் அதிகம் நாட்டம் கொள்ளவில்லை. ஆனால் ஒரு மிகப்பெரிய பேரரசை வழி நடத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் அவர் இறைச்சியை உணவில் எப்போதும் சேர்த்துக் கொண்டார்.

PENGUIN INDIA அக்பர் ஆட்சிகாலத்தின் துவக்கத்தில் வெள்ளிக் கிழமைகளில் அசைவ உணவு உண்பதை தவிர்த்து வந்தார்.

அவருடைய ஆட்சிகாலத்தின் துவக்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் அசைவ உணவு உண்பதை தவிர்த்து வந்தார். பின்னர் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அசைவ உணவு உண்பதை தவிர்க்கத் துவங்கினார்.

அது மட்டுமின்றி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும், மார்ச் மாத பௌர்ணமி தினத்தன்றும், அவருடைய பிறந்த நாள் மாதமான அக்டோபரிலும் அசைவ உணவை உட்கொள்வதைத் தவிர்த்தார்.

தயிர் சாதத்தில் இருந்து தான் விருந்து ஆரம்பமாகும்.

அக்பரின் நவரத்தினங்களில் ஒருவரான அபுல் ஃபசல் எழுதிய ஐனே - இ - அக்பரி என்ற புத்தகத்தில், பேரரசர் அக்பரின் சமையலறையில் இடம் பெற்றிருந்த மூன்று விதமான உணவுகளை குறிப்பிட்டிருக்கிறார்.

முதல் உணவு இறைச்சி ஏதும் இல்லாமல் சமைக்கப்படுவது. அது 'சூஃபி கானா' என்று அழைக்கப்படுகிறது. மற்றொரு உணவானது இறைச்சியையும் அரிசியையும் கொண்டு சமைக்கப்படுவது. மூன்றாவது வகை உணவானது, நெய் மற்றும் மசாலாப் பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் அசைவ உணவு.

இந்த கூற்றின் படி, அக்பர் தானியம் மற்றும் காய்கறிகள் அடங்கிய உணவுக்கே முன்னுரிமை அளித்தார் என்பது தெளிவாகிறது.

PENGUIN INDIA ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழுக்க சைவ உணவை உட்கொண்டார் ஜஹாங்கீர் சைவ உணவு மீது நாட்டம் கொண்ட ஜஹாங்கீர்

பேரரசர் அக்பரைப் போன்றே, ஜஹாங்கீரும் அசைவ உணவின் மீது அதிக நாட்டம் செலுத்தவில்லை.

ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சைவ உணவு மட்டுமே அவர் உட்கொண்டார்.

சைவ உணவு உட்கொள்வது மட்டுமின்றி, அந்த இரண்டு நாட்களில் உணவுக்காக விலங்குகளைக் கொல்வதும் தடை செய்யப்பட்டிருந்தது.

முகலாய மன்னர்களில் மத சகிப்புத்தன்மையை மேற்கோள்காட்டுகிறது இந்த நடவடிக்கைகள். முகலாய அரசர்களின் விருப்பதற்கு ஏற்ற வகையில் காய்கறிகளைக் கொண்டு பலவிதமான உணவுகள் சமைத்து பரிமாறப்பட்டது.

விதவிதமான பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஔரங்கசீப்பும் அவருடைய முன்னோர்களின் வழியைப் பின்பற்றி சைவ உணவுக்கு முன்னுரிமை வழங்கினார். சிறுவயதில் அவர் கோழி மற்றும் இதர அசைவ உணவுகளை விரும்பி உட்கொண்டார்.

PENGUIN INDIA அரியணை ஏறிய பிறகு போர்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பின் அருமையான, ருசியான உணவுகளை ஔரங்கசீப் மறந்தேவிட்டார் ஔரங்கசீப் எனும் உணவுப் பிரியர்

ஔரங்கசீப் ஒரு நல்ல உணவுப் பிரியர். தன்னுடைய மகனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அவர், "உன்னுடைய வீட்டில் உண்ட கிச்சடி மற்றும் பிரியாணியின் சுவை இன்னும் என் நாவில் ஒட்டிக் கொண்டுள்ளது. அங்கே பிரியாணி செய்யும் சுலைமானை இங்கே அனுப்பி வைக்குமாறு நான் உன்னிடம் ஏற்கனவே கேட்டிருந்தேன். ஆனால் இந்த அரசு சமையலறையில் சமைக்க நீ அவரை அனுமதிக்கவில்லை. அவரைப் போன்று நன்றாக சமைக்கத் தெரிந்த நபர் இருந்தால் அவரை இங்கே அனுப்பி வைக்கவும். ருசியான உணவுகள் எனக்கு இப்போதும் பிடிக்கும்," என்று எழுதியிருந்தார்.

இருப்பினும், அரியணை ஏறிய பிறகு போர்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பின் அருமையான, ருசியான உணவுகளை அவர் மறந்துவிட்டார்.

ஆனால், இறைச்சியில் இருந்து விலகி இருக்கும் பழக்கத்தை வாழ்நாளின் இறுதி வரை பின்பற்றினார். அவருடைய உணவு மேஜை எளிமையான சைவ உணவுகளால் நிரம்பியிருக்கும். பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு விதவிதமான உணவுகளை சமையற்கலைஞர்கள் அவருக்காக சமைத்துக் கொடுத்தனர்.

அவருக்கு பழங்கள் மிகவும் பிடிக்கும். மாம்பழம் அவருக்கு விருப்பமான ஒன்று.

இந்தியாவின் பலம் கொண்ட பேரரசர்களில் அவரும் ஒருவர். காஷ்மீரில் துவங்கி தென்னிந்தியா வரையும், கிழக்கில் சிட்டகாங்கில் துவங்கி மேற்கில் காபூல் வரை அவருடைய சாம்ராஜ்ஜியம் விரிந்திருந்தது.

முகலாயர்களின் வீரத்தையும் தைரியத்தையும் அவர் கொண்டிருந்தார். இளமை காலங்களில் அவர் வேட்டைக்கு செல்வார். ஆனால் பின்னாளில் "சோம்பேறிகளுக்கான பொழுதுபோக்கு அம்சம் அது," என்று வேட்டையாடுவதைக் குறிப்பிட்டார்.

இறைச்சி மீது நாட்டம் கொள்ளாத அரசரைப் பார்த்தால் உண்மையில் ஆச்சர்யமாக தான் உள்ளது. கோதுமையில் செய்த 'கபாப்'பையும் கொண்டைக்கடலை கொண்டு சமைக்கப்பட்ட புலாவையும் அவர் விரும்பி உட்கொண்டார்.

பன்னீர் கோஃப்தாக்களும், பழங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட உணவு வகைகளும் உண்மையில் ஔரங்கசீப்பால் வழங்கப்பட்ட பரிசுகள் என்று தான் கூற வேண்டும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.