இந்தியாவில் பராசிடமால் மருந்து மிகவும் பரவலாகக் கிடைக்கிறது.சிறு வெப்பம் அல்லது உடல்நலக் குறைபாடுகளுக்கே கூட பலர் உடனே இந்த மருந்தை உட்கொள்கிறார்கள். இந்த மருந்துகளின் பல பிராண்டுகளுள், ‘டோலோ 650’ (Dolo-650) கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பிரபலமானதாக மாறியுள்ளது. இந்த மருந்தின் அதிகபட்ச பயன்பாட்டை குறித்து ஜீரண உறுப்பியல் நிபுணரும், சுகாதார கல்வியாளருமான பழனியப்பன் மணிக்கம், “இந்தியர்கள் டோலோ 650-ஐ கேட்பரி ஜெம்ஸ் மாதிரி எடுத்துக்கிறார்கள்” என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தார்.
டோலோ 650 ஒரு பராசிடமால் அடிப்படையிலான மருந்தாகும். இது தலைவலி, உடல்வலி, வீக்கம் மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க மருத்தவர்கள் பரிந்துரைக்கும் மருந்தாக இருக்கிறது. குறிப்பாக கோவிட்-19 காலத்தில், தடுப்பூசி எடுத்தபின் ஏற்படும் பக்கவிளைவுகளை கட்டுப்படுத்தும் வகையில் பராசிடமால் மருந்துகளை பரிந்துரைத்ததையடுத்து, டோலோ 650-க்கு மக்களிடையே பெரும் தேவை ஏற்பட்டது. ஆனால் எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் அதிகம் பயன்படுத்தினால் உடலுக்கு, குறிப்பாக கல்லீரலுக்கு தீங்கு ஏற்படலாம் என்பது நினைவில் வைக்கப்படவேண்டும்.
Forbes இதழ் வெளியிட்ட தகவலின்படி, கோவிட் பரவலுக்குப் பிறகு மைக்ரோ லாப்ஸ் நிறுவனம் டோலோ 650 மருந்தின் 350 கோடி மாத்திரைகளை விற்றுள்ளது. 2020–ம் ஆண்டு மட்டும் இந்த மருந்து விற்பனையால் 400 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. கோவிட் முன்னர் ஆண்டுக்கு 7.5 கோடி ஸ்ட்ரிப்புகள் விற்கப்பட்டிருந்த நிலையில், 2021 முடியும்வரை ஆண்டுக்கு 14.5 கோடி ஸ்ட்ரிப்புகள் விற்கப்பட்டுள்ளதாக IQVIA என்ற சந்தை ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. இது 2019ம் ஆண்டை விட இரட்டிப்பு அளவு அதிகரித்துள்ள நிலைமையை குறிக்கிறது.