மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் உள்ள கோரக்பூர் நகரில் கோல்ட் ஜிம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் 52 வயதான யதீஷ் சிங்கா என்ற நபர் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று காலை வழக்கம் போல யதீஷ் ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்வதற்காக சென்று உள்ளார்.
அங்கு டம்பல் வைத்து உடற்பயிற்சி செய்துவிட்டு, மற்றொரு இயந்திரம் நோக்கி சென்ற போது திடீரென நிலை தடுமாறி தரையில் விழுந்துள்ளார். உடனே ஜிம் பயிற்சியாளர்கள் cpr செய்து உயிரை காப்பாற்ற முயன்று உள்ளனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. அதன் பின்னர் அவரை பண்டாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது யதீஷ் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இச்சம்பவம் காலை 6:45 மணிக்கு நடந்துள்ளது. இதன் முழு காட்சியும் ஜிம்மில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சமீப காலங்களாக உடற்பயிற்சியின் போது மாரடைப்பால் பலர் உயிரிழப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஜிம்மில் பயிற்சி மேற்கொள்வதற்கு முன் தகுந்த மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை இந்த வீடியோ எடுத்துக்காட்டி உள்ளது.