பூமியில் வாழும் உயிரினங்களால் பொதுவாக உற்பத்தி செய்யப்படும் இரண்டு அரியவகை ரசாயனங்களை K2-18b கிரகத்தில் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி என்பது, உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த சுற்றுப்பாதை விண்வெளி தொலைநோக்கி ஆகும். நமது பிரபஞ்சத்தின் ரகசியங்களை அவிழ்க்க உதவும் ஒரு ‘கால இயந்திரம்’ இது என்றால் மிகையில்லை.
இந்த தொலைநோக்கி, சுமார் 100-200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி, 13.5 பில்லியின் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பக்கால பிரபஞ்சத்தில் பிறந்த முதல் விண்மீன் திரள்களைத் திரும்பிப் பார்க்கும் திறன் கொண்டதாகும்.
நட்சத்திரங்கள், வெளிக்கோள்கள் மற்றும் நமது சூரிய மண்டலத்தின் நிலவுகள் மற்றும் கோள்களின் மூலங்களைக் கண்காணிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் இந்த தொலைநோக்கி பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் தான், ஒரு தொலைதூர கிரகத்தில் உயிர் இருக்கலாம் என்று நாசா கண்டு பிடித்துள்ளது. K2-18 b என்னும் கிரகம் நமது பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த கிரகம் 2015 ஆம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப் பட்டது.
K2-18b பூமியை விடப் பெரியதாகவும் ஆனால் நெப்டியூனை விடச் சிறியதாகவும் இருப்பதால் ‘சூப்பர் எர்த்’ என்று அழைக்கப்படுகிறது. சிம்ம நட்சத்திர கூட்டத்தைச் சேர்ந்த இந்த கிரகம், பூமியை விட எட்டு மடங்கு நிறை கொண்டதாகும். மேலும், பூமியின் ஆரத்தை விட 2.6 மடங்கு ஆரம் கொண்டதாகும்.
DMS எனப்படும் டைமெத்தில் சல்பைடு மூலக்கூறை இந்த கிரகத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். DMS பூமியில் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் வேதியல் பொருளாகும்.
K2-18b கிரகத்தின் உட்புறத்தில் உயர் அழுத்தப் பனிக்கட்டி இருக்கலாம் என்றும், மேற்புறத்தில் மெல்லிய ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலம் மற்றும் கடல் இருக்கலாம் என்று உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.
வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் நட்சத்திர ஒளியின் ஒரு பகுதியை உறிஞ்சுகின்றன, ஆனால் ஒவ்வொன்றும் ஒளியின் நிறமாலையில் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை விட்டுச் செல்கின்றன. அதன் மூலமே விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலமும் நீர் பெருங்கடல்களும் கொண்ட ஒரு பாறை கிரகத்தை ‘ஹைசியன்’ உலகம் என்று விஞ்ஞானிகள் சொல்வார்கள். பொதுவாக, ஹைசியன் உலகங்கள் தண்ணீரால் மூடப்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள போதிலும், புதிய கிரகம் வெப்பமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, 2019 ஆம் ஆண்டில், ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் நீராவியைக் கண்டறிந்ததது. அப்போதே இது நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே மனிதர்கள் வாழக் கூடிய உலகம் இருப்பதாக உறுதிப் படுத்தபட்டது.
2023ம் ஆண்டில், இதே தொலைதூர கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு CO2 இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டது.
K2-18b கிரகத்தில் DMS இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், அதன் இருப்பை உறுதிப்படுத்தக் கூடுதல் தரவுகள் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. அந்த முடிவுகள் இன்னும் 12 மாதங்களுக்குள் இது உறுதி செய்யப்படும் என்றும் நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தொலைதூர நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஒரு கோளில், DMS அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.