மாநில ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விவாதங்களுக்கு மத்தியில், முக்கியமான ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது "சட்டவிரோதம்" என்று இன்று (ஏப். 08) தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், மாநில அரசின் ஆலோசனைக்கு ஏற்ப ஆளுநர் நடக்க வேண்டும் என்றும் அதன் செயல்பாடுகளுக்கு "முட்டுக்கட்டையாக" இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடுவும் விதித்துள்ளது.
இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் என்ன, அதன் தாக்கம் என்ன என்பது குறித்து இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்கள் தொடர்பான 12 மசோதாக்களை (பெரும்பாலும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாகவே இந்த மசோதாக்கள் உள்ளன) இயற்றி ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2023 வரை ஆளுநருக்கு அனுப்பியது. இந்த மசோதாக்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முடிவெடுக்காத நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நவம்பர், 2023ல் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.
இதையடுத்து, இரண்டு மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர். இதன்பின், மீண்டும் மீதமுள்ள 10 மசோதாக்களையும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரில் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு. அப்போதும் 10 மசோதாக்களையும் ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பினார். இதில் குடியரசு தலைவர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதலும் 7 மசோதாக்களை நிராகரித்தும் இரண்டு மசோதாக்கள் மீது முடிவெடுக்காமலும் இருந்ததாக, 'தி இந்து' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தான் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கியது.
"ஆளுநர் அரசியல்வாதி அல்ல"தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது "சட்டவிரோதம்" எனக்கூறி, சட்டப்பிரிவு 142-ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
"உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களும் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது என்று அறிவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை." என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் நலன் மற்றும் ஜனநாயகத்துக்கு "மதிப்பளிக்க" வேண்டும் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் ஆளுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்த தீர்ப்பை வழங்கியபோது, "நாங்கள் ஆளுநர் பொறுப்பை குறைத்து மதிப்பிடவில்லை. மாறாக, ஆளுநர் ஜனநாயகத்துக்கும் மக்களின் நலன் மற்றும் அம்மக்களுக்கு பொறுப்பான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றே கூறுகிறோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அந்த தீர்ப்பில், "ஆளுநர் ஒரு நண்பராகவும், தத்துவவாதியாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டும், மாறாக அரசியல்வாதியாக அல்ல. அரசியல் சூழலுக்கு ஏற்ப செயல்படாமல், அவர் எடுத்துக்கொண்ட அரசியலமைப்பு உறுதிமொழியின் புனிதத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும். அரசியல் பதற்றம் ஏற்படும் சூழல்களில் ஆளுநர் ஒருமித்த கருத்து மற்றும் தீர்மானத்துடன் செயல்பட்டு, மாநில அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், தடையாக அல்ல." என குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஆளுநர் என்பவர் மாற்றத்தை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும், தடையை ஏற்படுத்துபவராக இருக்கக் கூடாது," என தீர்ப்பில் பல இடங்களில் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர் நீதிபதிகள்.
தீர்ப்பை வழங்கிய போது நீதிபதி பர்டிவாலா கூறுகையில், "தன்னிச்சையான அதிகாரம் (absolute veto) என்ற கருத்துக்கு அரசியலமைப்பில் இடமில்லை. ஆளுநருக்கு மசோதா அனுப்பப்படும் போது, அரசியலமைப்புப் பிரிவு 200-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும்." என தெரிவித்தார்.
"மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் எளிமையாக நிறுத்தி வைப்பதற்கு ஆளுநருக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. பிரிவு 200-ன் கீழ் தன்னிச்சையான அதிகாரம் என்பது அனுமதிக்கப்பட முடியாதது." என்றும் அவர் கூறினார்.
"மாநில சட்டமன்றத்தால் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் போது அந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியாது என்பது பொது விதியாக உள்ளது." என்றும் அவர் தெரிவித்தார்.
"இரண்டாவதாக அனுப்பப்பட்ட மசோதா, முதலில் அனுப்பப்பட்ட மசோதாவிலிருந்து வேறுபடும் போதுதான் இதற்கு விதிவிலக்கு உள்ளது."
"(இந்த விவகாரத்தில்) ஆளுநர் நேர்மையுடன் செயல்படவில்லை. மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்." என நீதிபதி பர்டிவாலா தெரிவித்தார்.
"ஆளுநர் ஒரு மாநில அரசின் நலன் மற்றும் ஆலோசனைப் படியே செயல்பட வேண்டும் என்பது பொது விதியாக உள்ளது."
"சட்டப்பிரிவு 200-ன் படி ஆளுநருக்கு எவ்வித விருப்புரிமையும் இல்லை." என அவர் தெரிவித்தார்.
1. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கும் போதோ அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பும் போதோ ஆளுநர் அம்மசோதா மீது ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்.
2. மசோதாக்களை நிறுத்தி வைப்பது அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்புவது என்பது, மாநில அரசின் முடிவுக்கு முரணானதாக இருந்தால், ஆளுநர் அதுகுறித்து அதிகபட்சம் மூன்று மாத காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்.
3. மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டு, மாநில சட்டமன்றம் மீண்டும் அம்மசோதாவை நிறைவேற்றி அனுப்பும்பட்சத்தில் இம்முறை ஆளுநர் ஒருமாத காலத்துக்குள் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.
10 மசோதாக்கள் என்னென்ன?தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தீர்ப்பின் தாக்கம் என்னவாக இருக்கும்?இந்த தீர்ப்பின் தாக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பியும் தமிழகத்தின் முன்னாள் கூடுதல் அரசுத் தலைமை வழக்கறிஞருமான பி.வில்சன், "மாநில அரசு மசோதா அனுப்பினால் ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது. குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என முடிவெடுத்தால், மூன்று மாத காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளது. எந்தெந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டுமோ, அந்த மசோதாக்களை மட்டுமே அவருக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்." என்றார்.
வில்சன் கூறுகையில், "ஆளுநர் கிட்டத்தட்ட 2-3 ஆண்டுகள் மசோதாக்களை கிடப்பில் போட்டதை தீர்ப்பில் நீதிபதிகள் கண்டித்துள்ளனர். இரண்டாவது முறை மசோதாவை அனுப்பினால் நிச்சயமாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதைத் தவிர அவருக்கு வேறு வாய்ப்பில்லை." என கூறினார்.
இந்த 10 மசோதாக்களில் ஆளுநரை வேந்தர் பதவியிலிருந்து நீக்குவதற்கான மசோதாவும் உள்ளது என்றும் கூறினார் அவர்.
உச்ச நீதிமன்றமே அந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து இன்று முதல் நடைமுறைக்கு வரும்படியாக உத்தரவிட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
"ஒரு மாநில அரசின் அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் நடக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுகள் சட்ட ரீதியாக செயல்பட்டு, அதற்கு ஆளுநர்கள் இடையூறாக இருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம் என்ற தீர்ப்பு கிடைத்துள்ளது." என்றார் வில்சன்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் இந்த தீர்ப்பின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் எனக்கூறிய அவர், இதுதொடர்பாக முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்றார்.
மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்திருப்பது தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல. கேரளா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கும் அம்மாநில அரசுகளுக்கும் இடையே பனிப்போர் அவ்வப்போது நிலவிக்கொண்டு தான் இருக்கிறது.
கேரள (முன்னாள்) ஆளுநர் ஆரிப் கான், மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய இரு மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தெலங்கானாவில் 10க்கும் மேற்பட்ட முக்கியமான மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக (முன்னாள்) ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை கேரள சட்டத்துறை அமைச்சர் பி. ராஜீவ் வரவேற்றுள்ளதாக, மாத்ருபூமி ஊடகம் கூறுகிறது.
"கேரளாவிலும் சில மசோதாக்கள் 13, 16, 18 மாதங்கள் கூட நிலுவையில் உள்ளன. இது ஜனநாயக விரோதமானது என உச்ச நீதிமன்றம் இப்போது கூறியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஏற்ப ஆளுநர் நடக்க வேண்டும் என கூறியுள்ளது." என தெரிவித்தார்.
இதுபோன்ற மற்ற வழக்குகளுக்கும் பொருந்துமா?"இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும். தமிழ்நாடு ஆளுநருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தும். வரும் காலத்தில் மசோதாக்கள் மீது முடிவெடுப்பது குறித்து ஆளுநர் காலம் தாழ்த்த முடியாது." என பி.வில்சன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதே கருத்தை ஆமோதித்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன், "வருங்காலத்தில் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் ஆளுநர்கள் காலம் தாழ்த்த முடியாது என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது. என்றாலும், ஆளுநர்கள் முற்றிலுமாக மாறிவிடுவார்கள் என சொல்ல முடியாது. எனினும், இந்த தீர்ப்பு ஆளுநரின் அதிகாரங்கள் மீதான கட்டுப்பாடுகளை தெளிவுபடுத்தியுள்ளது" என பிபிசியிடம் கூறினார்.
தீர்ப்பு குறித்து தலைவர்கள் கூறியது என்ன?தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசுகையில், "வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல முக்கிய சட்ட முன்முடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தரராமல் திருப்பி அனுப்பினார்.
இரண்டாவது முறை அனுப்பியபோதும், சட்டத்துக்கு ஏற்ப ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதோடு, அதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார். இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசின் நியாயமான வாதத்தினை ஏற்று ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்ட விரோதமானது என்றும் அந்த சட்ட முன்முடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கருதப்பட வேண்டும் என்றும் தெரிவித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இது, தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவின் அமைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்." என தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு வந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
"அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகக் குற்றம் இழைத்த ஆளுநர் அந்த பொறுப்பில் நீடிக்க அனுமதிப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதாகும் என்பதால் ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவர் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்." என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "தீர்ப்பு குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை, நான் சட்டத்தை மதிக்கிறேன். நீட் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏன் முதலமைச்சர் மதிக்கவில்லை. இந்த தீர்ப்பை மதிக்கிறீர்கள் என்றால், நீட் தொடர்பான தீர்ப்பை ஏன் மதிக்கவில்லை" என தெரிவித்ததாக தி இந்து ஊடகம் தெரிவிக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் பக்கத்தில், "அன்றே சொன்னார் அண்ணா!! ஆட்டுக்கு தாடியும்…நாட்டுக்கு ஆளுநர் பதவியும்… தேவையில்லை என்று…" என பதிவிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு