அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரிவிதிப்புகளால் உலக நாடுகள் தொடர்ந்து தடுமாறி வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் சரிவைச் சந்திக்கின்றன.
இது தங்களுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று பலர் யோசிக்கிறார்கள்.
திங்களன்று, ஷாங்காயில் இருந்து டோக்கியோ மற்றும் சிட்னியில் இருந்து ஹாங்காங் வரை ஆசிய பங்குகள் பல தசாப்தங்களில் கண்டிராத அளவில் சரிந்தன.
ஐரோப்பிய சந்தைகளும் வீழ்ச்சியடைந்தன, வங்கிகள், நிதி பாண்டுகள் மிகப்பெரிய சரிவைக் கண்டன. அதே நேரத்தில் அமெரிக்க சந்தைகள் 2020-ல் கொரோனா தொற்றுநோய் தொடங்கியதற்குப் பின்னதாக ஒரே நாளில் மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டன.
பெரும்பாலான நாடுகளுக்கு 10% முதல் 46% வரை புதிய வரிவிதிப்புகளை அதிபர் டிரம்ப் புதன்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
தற்போதைய பங்குச் சந்தை குழப்பங்கள் மக்களின் வாழ்க்கையையும் நிதியையும் பல வழிகளில் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வேலை இழப்புகள் ஏற்படுமா?பங்கு விலைகள் நீண்ட காலத்துக்கு வீழ்ச்சியை சந்தித்தால் அது வேலைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஒருவர் அதிலிருந்து லாபத்தை எதிர்பார்ப்பார்.
நிறுவனத்தின் பங்குகள் சில காலத்துக்கு வீழ்ச்சியடைந்து வந்தால், அதை தடுப்பதற்கு நிறுவனம் ஏதாவது செய்ய வேண்டும் என்று முதலீட்டாளர் எதிர்பார்ப்பார்.
உதாரணமாக வேலைகளை குறைப்பதன் மூலம் செலவுகளை குறைக்கலாம்.
ஆனால், லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பொருளாதார பேராசிரியராக இருக்கும் மார்டன் ராவ்ன் "தற்போது" ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப, நிறுவனங்கள் தயங்குவார்கள் என்று கூறுகிறார்.
"இது இன்னும் மோசமடையும், இந்த வரி விதிப்புகள் திரும்ப பெறப்பட மாட்டாது என்று கருதினால் ஒழிய" வேலை இழப்புகள் இருக்காது என்கிறார்.
ஆனால் நீண்ட காலத்தில் "வேலை குறைப்பு குறித்து ஒரு முடிவு விரைவில் எடுக்க வேண்டியிருக்கும்" என்கிறார்.
பங்குச் சந்தைகளின் தற்போதைய வீழ்ச்சி மக்கள் செலுத்தும் வரிகள், கடன்கள், அடமானங்கள் மற்றும் சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெரியவில்லை.
ஆனால் அவை அனைத்தும் பாதிக்கப்படலாம் என்று ராவ்ன் கூறுகிறார்.
சந்தை குழப்பங்கள் அரசாங்கங்களின் நிதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் விளக்குகிறார், அதாவது அவர்கள் செலவுகளைக் குறைப்பதையும் வரிகளை அதிகரிப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும்.
வட்டி விகிதங்களும் பாதிக்கப்படலாம், அவற்றில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.
"இது எந்த வழியிலும் செல்லலாம்," என்று அவர் கூறுகிறார். அமெரிக்க வரி விதிப்புக்கு நாடுகள் எவ்வாறு பதிலடி கொடுக்கின்றன என்பது உட்பட பல காரணிகளைப் பொறுத்து விகிதங்கள் உயரலாம் அல்லது குறையலாம்.
உதாரணமாக, ஒரு நாட்டின் மத்திய வங்கி, வட்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்தால், அது சில வகையான அடமானங்களை மலிவானதாக மாற்றக்கூடும் - இருப்பினும் பண சேமிப்பாளர்கள் தங்கள் சேமிப்புகளில் குறைந்த வருமானத்தைப் பெறுவார்கள்.
மாறாக, வட்டி விகிதங்களின் அதிகரிப்பு கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கச் செய்யும், ஆனால் சேமிப்பாளர்களுக்கு சிறந்த வருமானத்தைக் கொண்டுவரும்.
சிலர் நேரடியாக பங்குகளை வைத்திருந்தாலும், பலருக்கு பங்குச் சந்தையுடனான தொடர்பு ஓய்வூதிய திட்டங்கள் மூலம் வருகிறது.
சில வகையான ஓய்வூதிய பங்களிப்புகள் பங்குச் சந்தைகளில் உள்ளன.
இந்தப் பங்குகளின் மதிப்பு குறைந்தால், மக்களின் ஓய்வூதிய தொகுப்பின் மதிப்பு பாதிக்கப்படலாம் என்று ராவ்ன் விளக்குகிறார்.
ஆனால் சில ஓய்வூதிய பங்களிப்புகள் அரசாங்க பத்திரங்கள் போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் உள்ளன. பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையும் போது இவற்றின் மதிப்பு அதிகரிக்கும், ஏனெனில் அவை தங்கம் போன்ற பிற சொத்துக்களுடன் "பாதுகாப்பான புகலிடமாக" பார்க்கப்படுகின்றன.
எனவே, அரசாங்க பத்திரங்களின் மதிப்பு உயர்ந்தால், பங்குகளின் சில அல்லது எல்லா வீழ்ச்சியையும் ஈடுசெய்ய முடியும். ஆனால் அவை மக்களின் ஓய்வூதிய சேமிப்புகள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தது.
ஓய்வு பெறும் வயதை நெருங்க நெருங்க, மக்களின் ஓய்வூதிய தொகுப்பில் அதிக சதவீதம் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட வாய்ப்புள்ளது, ஏனென்றால் அவர்கள் குறைவாக பாதிக்கப்படுவார்கள்.
மந்தநிலை என்பது ஒரு நாட்டில் உள்ள நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் மக்களின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இரண்டு மூன்று மாத காலங்களுக்கு சுருங்குவதாகும்.
உலகம் பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்படுமா என்பதை விரைவில் கூற முடியாது என்று ராவ்ன் கூறுகிறார்.
"அடுத்த வாரம் அல்லது இரண்டு நாட்களில் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு முழு அளவிலான வர்த்தகப் போராக அதிகரித்து, மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி கொடுத்தால் நான் கவலைப்படுவேன்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
பங்குச் சந்தைகளின் தற்போதைய நிலைமை உலகளாவிய மந்தநிலைக்கு வழிவகுத்தால், வேலை இழப்புகள் "மிகவும் சாத்தியம்" என்று அவர் கூறுகிறார்.
ஒரு மந்தநிலை மக்களுக்கும் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் பல விளைவுகளை ஏற்படுத்தும்.
உதாரணமாக, சிலர் வேலை இழக்கக்கூடும், வேலையின்மை உயரக்கூடும். மற்றவர்களுக்கு பதவி உயர்வு பெறுவது கடினமாக இருக்கலாம், அல்லது விலைவாசி உயர்வுக்கு ஈடுகொடுக்க போதுமான சம்பள உயர்வு பெறுவது கடினமாக இருக்கலாம்.
இருப்பினும், மந்தநிலையின் வலி பொதுவாக சமூகம் முழுவதும் சமமாக உணரப்படுவதில்லை, இதனால் சமத்துவமின்மை அதிகரிக்கக்கூடும்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு