இந்தியா வழியே வங்கதேச பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி ரத்து - சீனாவை நெருங்கியதே காரணமா?
BBC Tamil April 12, 2025 02:48 PM
Getty Images கோப்புப் படம்

தங்கள் நாட்டு சரக்குகளை இந்திய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் மற்றொரு கப்பல், விமானங்களுக்கு மாற்றி வேறு நாடுகளுக்கு அனுப்ப வங்கதேசத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதைத் தற்போது ரத்து செய்துள்ள இந்தியாவின் முடிவால் வங்கதேசம் அதிர்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்ட இந்த அனுமதி திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்திய நிலப்பரப்பு மூலம் நேபாளம், பூட்டான், மியான்மர் ஆகிய நாடுகளுக்கான வங்கதேசத்தின் ஏற்றுமதியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்த உத்தரவாதம் இருந்தபோதிலும், இது வங்கதேசத்தின் ஏற்றுமதியைப் பாதிக்கும் என்று வங்கதேச வணிக சமூகம் கருதுகிறது.

இது வங்கதேசத்தின் ஏற்றுமதியில் உடனடியாக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்று வங்கதேச சரக்கு அனுப்புநர்கள் சங்கம் (BAFA) கூறியுள்ளது.

''இந்தியாவின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் அதிகரித்த நெரிசல் காரணமாக, வங்கதேச பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியாவுக்கு தாமதம் ஏற்பட்டது. செலவுகளும் அதிகரித்தன. அதன் விளைவாக, இந்த அனுமதி திரும்ப பெறப்பட்டுள்ளது,'' என இந்தியா தெரிவித்துள்ளது

வங்கதேச செய்தித்தாள் டாக்கா ட்ரிப்யூனின், ''இந்தியா வெளியிட்டுள்ள இந்த அறிவிப்போடு சேர்த்து, வங்கதேசத்தின் அனைத்து சரக்குகளையும் இந்தியாவில் இருந்து உடனடியாக வெளியேற்ற இந்தியா உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, செவ்வாய்க்கிழமையன்று வங்கதேச வர்த்தக அமைச்சகம் அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது'' என தெரிவித்துள்ளது.

டாக்காவில் உள்ள முன்னாள் உலக வங்கி பொருளாதார நிபுணர் ஜாஹித் உசேன், இந்தியாவின் முடிவை "துரதிர்ஷ்டவசமானது" மற்றும் "தேவையற்றது" என்று குறிப்பிட்டார்.

இந்த முடிவால் வங்கதேசத்தை விட, இந்தியா அதிகமான இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்று வங்கதேசத்தைச் சேர்ந்த சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

வங்கதேசத்தின் எதிர்வினை என்ன? Getty Images இந்தியாவின் இந்த முடிவு வங்கதேசத்தின் ஏற்றுமதியைப் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியா ஏன் இதைச் செய்கிறது? இதனால் என்ன பலன் கிடைக்கும் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்று என வங்கதேசத்தின் முன்னணி பொருளாதார நிபுணர் ஜாஹித் உசேன் கூறினார்.

வங்கதேசத்தின் ஆங்கில செய்தித்தாளான டெய்லி ஸ்டாரிடம் பேசிய ஜாஹித் உசேன், "சில நெறிமுறைகள் மற்றும் சில ராஜ்ஜீய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு எந்த அறிகுறியும் அளிக்கப்படவில்லை. பிரதமர் மோதியுடன் சமீபத்தில் நடந்த சந்திப்பில் உறவுகள் மேம்பட்டதாக நாங்கள் உணர்ந்தோம். இப்போது அது குறைந்துவிட்டதாக தெரிகிறது" என்றார்.

மேலும், " இந்தியா உட்பட முழு உலகமும் அமெரிக்காவின் வரிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை தேவையற்றது" என்றும் அவர் கூறினார்.

வங்கதேசத்தின் மற்றொரு செய்தித்தாளான தி பிசினஸ் ஸ்டாண்டர்டுக்கு அளித்த பேட்டியில், வங்கதேச சரக்குகளை இந்தியாவில் இருந்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வசதியை திரும்பப் பெறுவதன் மூலம், இந்தியா சுங்க கட்டணங்களை இழக்க நேரிடும் என்று சில நிபுணர்கள் தெரிவித்தனர்.

வங்கதேச ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் முன்னாள் மூத்த துணைத் தலைவர் அப்துல்லா ஹில் ரகிப் இதுகுறித்து கூறுகையில், "இது எங்களது வணிகத்தைப் பாதிக்காது என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியா வருவாயில் இழப்பைச் சந்திக்கும்" என்றார்.

"எங்களது உபரி சரக்குகள் இந்திய விமான நிலையங்கள் வழியாக அனுப்பப்பட்டதால், ஆரம்பத்தில் இது அழுத்தத்தை உருவாக்கும். இருப்பினும், உள்நாட்டு விமான நிலையங்களில் இதை நிர்வகிக்க முடியும்," என்று வங்கதேச சரக்கு அனுப்புநர்கள் சங்கத்தின் (BAFA) தலைவர் கபீர் அகமது கூறினார்.

தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் விமான நிலையத்தின் திறனை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும், தேவைப்பட்டால் இலங்கை மற்றும் மாலத்தீவில் உள்ள விமான நிலையங்களையும் பயன்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகளின் மூலம், இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களில் இருந்து வங்கதேசத்தை காப்பாற்ற முடியும் என்று கபீர் அகமது கூறுகிறார்.

வங்கதேசம் பதிலடி கொடுக்குமா? Getty Images வங்கதேசத்தின் பொருளாதாரத்தில் ஆடைத் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதுகுறித்து வங்கதேச அரசிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் இதுவரை வரவில்லை என்றாலும், வங்கதேச அரசியல் வட்டாரங்களில் இந்தியாவின் முடிவு குறித்து விவாதம் நடந்து வருகிறது.

இந்தியாவின் திடீர் முடிவு எதிர்மறையான செய்தி என்று முன்னாள் மூத்த வங்கதேச தூதரக அதிகாரி எம். ஹுமாயூன் கபீர் கூறுகிறார்.

"பதிலடி நடவடிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை. சூழலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப முடிவுகளை எடுப்போம்" என்று அவர் கூறினார் .

ஏற்றுமதிகளில் பாதிப்பு Getty Images

இந்தியாவின் முன்னணி ஆங்கில செய்தித்தாளான டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின்படி, வங்கதேசத்தின் சரக்குகள் இந்திய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி செய்யப்படுவதை ரத்து செய்ய வேண்டுமென்று, இந்திய ஆடைத் துறையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வங்கதேச செய்தித்தாளான டாக்கா ட்ரிப்யூனின் கூற்றுப்படி, இந்தியாவின் இந்த முடிவு, குறிப்பாக டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து செய்யப்படும் ஏற்றுமதியைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கிறது.

சீனாவுடன் வங்கதேசம் நெருங்கியதே இந்தியாவின் முடிவுக்கு காரணமா?

சில நாட்களுக்கு முன்பு வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை மேற்கோள் காட்டி, சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த வேண்டுமென கூறியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களை நிலத்தால் முற்றிலும் சூழப்பட்ட பகுதிகளாக விவரித்த முகமது யூனுஸ், இந்த பிராந்தியத்தில் உள்ள கடல் பகுதியின் ஒரே பாதுகாவலர் வங்கதேசம் என்றார்.

இந்த நிலையில், இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில், சீனா தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக முகமது யூனுஸின் இந்த அழைப்பை இந்தியா கருதியது.

பிரதமர் மோதிக்கும் முகமது யூனுஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது, 'பதற்றத்தை உருவாக்கும் பேச்சை தவிர்க்க' இந்தியா கூறியிருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.