மத்திய பிரதேசத்தின் குவாலியோரில் உள்ள 49 வயது மருத்துவ கடை உரிமையாளர் ஒருவர், தனது மகள் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததை காரணமாகக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக புகார்செய்யப்பட்டுள்ளது. அதாவது அந்த நபர் தன் வீட்டின் படுக்கையறையில் துப்பாக்கிச்சத்துடன் உயிரிழந்த நிலையில் சத்தம் கேட்டுவிட்டு அறைக்குள் சென்று பார்த்தபோது, குடும்பத்தினார் அதிர்ச்சியடைந்தனர்.
மரணமடைந்தவரின் மகள், 15 நாட்களுக்கு முன் அவர்கள் வீட்டின் அருகிலுள்ள மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தார். பின்னர் அவர் இந்தூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, அவர் சட்டப்படி ஆர்ய சமாஜ் முறைப்படி திருமணம் செய்ததாக கூறி, தனது கணவனுடனே போவதென தெரிவித்துள்ளார். தந்தை தற்கொலை செய்யும் முன், மகளின் ஆதார் அட்டை பிரிண்ட் பக்கத்தில் எழுதிய கடிதத்தில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “நீ செய்தது தவறு… நான் போகிறேன். உங்களை இருவரையும் கொல்லலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனா என் மகளை எப்படி கொல்வேன்?” என அவர் எழுதியிருந்தார். மேலும், “சில ரூபாய்க்காக ஒரு வழக்கறிஞர் முழு குடும்பத்தை அழிக்கிறார். அவருக்கும் மகள்கள் இருக்கிறதே? ஒரு அப்பாவின் வேதனை அவருக்குத் தெரியாதா?” என வேதனையுடன் எழுதியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர், மரணமடைந்தவரின் உறவினர்கள் அந்த இளைஞரின் தந்தையை வீடிலிருந்து இழுத்து வெளியேற்றிக் கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த நபரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.