1970-களில் மகாராஷ்டிராவில் அம்பேத்கரியவாதிகள், தலித் சிறுத்தைகள் அமைப்பினர், மற்றும் இதர இயக்கங்களைச் சார்ந்தவர்கள் பல்முனை போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்தினார்கள்.
சமூக நீதிக்காகவும், தலித்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் போராட்டத்தை நடத்தினார்கள்.
அதே சமயத்தில், அம்பேத்கர் எழுதிய படைப்புகளை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து தீவிர சிந்தனையாளர்கள் பலர் பாரிய அளவில் போராட்டங்களை நடத்தினார்கள்.
மாநில அரசுக்கு மனுக்களை அனுப்பினார்கள். அரசியல் கட்சிகள் அம்பேத்கரின் எழுத்துகளை வெளியிட வற்புறுத்துமாறு நீதிமன்றத்தின் கதவுகளையும் அவர்கள் தட்டினார்கள்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு, மகாராஷ்டிரா அரசு அவருடைய எழுத்துகளை, டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் ரைட்டிங்க்ஸ் அண்ட் ஸ்பீச்சஸ் ( Dr Babasaheb Ambedkar Writings and Speeches (BAWS) என்ற தலைப்பில் 1982-ம் ஆண்டில் புத்தகமாக வெளியிட்டது. அவருடைய படைப்புகளை வெளியிட அரசு ஏன் தயக்கம் காட்டியது?
உயர் சாதி இந்துக்களும், சிவசேனா தலைமையில் செயல்பட்ட இந்துத்துவா அமைப்புகளும் அவருடைய சில படைப்புகளுக்கு எதிராக போராட்டம் செய்தது ஏன்? அவருடைய படைப்புகளை பிரசுரிக்க ஏன் போராட்டங்கள் நடைபெற்றன? அவர்கள் யாருக்காக போராட்டங்களை நடத்தினார்கள்? அவருடைய சிலைகள் ஏன் உடைக்கப்பட்டன? அதற்கு பதிலாக ஏன் போராட்டங்கள் வெடித்தன? உடைக்கப்படும் அவருடைய சிலைகள் என்பது தனித்து நிகழும் சம்பவங்கள் அல்ல. அது சாதியத்தால் பிரிந்திருக்கும் நம்முடைய சமூகத்தின் பிரதிபலிப்பு.
இந்திய சமூகத்தையும், ஆதிக்க சாதி சமூக அமைப்பும், புற்றைப் போல படரும் அந்த நோயால் அந்த சமூகமே பாதிக்கப்படுவது குறித்தும் அச்சமின்றி அம்பேத்கர் கேள்விக் எழுப்பிய விதம் தான் அரசு தயக்கம் காட்டியதற்கும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததற்கும் காரணம்.
நிலையான, கடினமான, ஊடுருவ இயலாத அணுக்களைப் போன்று செயல்படும் சாதியால் இந்த சமூகம் துண்டாடப்படுகிறது என்று சாதிய அமைப்பை அவர் குறிப்பிட்டார். அவருடைய இந்த பேச்சு, இந்தியாவின் "வசுதைவ குடும்பகம்" என்ற கருத்தாக்கத்தை கேள்வியால் துளைக்கிறது.
தன்னுடைய சொந்த மக்கள் தொகையில் பெரும்பான்மையான மக்களை தீண்டத்தகாதவர்கள் என்று கூறி அவமதித்து, இழிவுபடுத்தும் இந்தியா எப்படி 'உலகம் ஒரு குடும்பம்' என்று பெருமிதமாக கூற இயலும்?
மகாராஷ்டிராவில் மஹர் எனப்படும் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்திருந்தாலும் கூட, இந்தியாவின் தலைசிறந்த அறிவாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை வழிநடத்தும் உயரத்திற்கு சென்றவர் அம்பேத்கர்.
பம்பாய் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்ற, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மற்றும் முனைவர் பட்டம் பெற்ற, லண்டன் பொருளாதாரப் பள்ளியில் எம்.எஸ்.சி மற்றும் டி.எஸ்.சி பட்டங்களைப் பெற்ற, லண்டனின் கிரேஸ் இன்னில் பாரிஸ்டராக அறிவிக்கப்பட்ட முதல் தலித் ஆவார்.
மூக் நாயக் (1920), பஹிஷ்க்ருத் பாரத் (1927), ஜனதா (1930) மற்றும் பிரபுத பாரத் (1956) என நான்கு மராத்தி பத்திரிக்கைகளை துவங்கினார் அவர். சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல புத்தகங்களை அவர் எழுதினார்.
அரசியல் தளத்தில் பம்பாய் சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டதன் மூலமாகவும், குறிப்பாணைகள் சமர்ப்பிப்பதன் வாயிலாகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்திற்கு குரல் கொடுப்பதன் மூலமாகவும், பிரிட்டிஷ் அரங்காத்தால் நியமிக்கப்பட்ட சைமன் குழு உள்ளிட்ட பல குழுக்களிடம் அவர் தொடர்ச்சியாக பேசியும் ஆளும் அரசுடன் தொடர்பில் இருந்து வந்தார்.
அரசியல் செயல்பாட்டின் ஓரங்கமாக, அவர் சில கோவில் நுழைவு போராட்டங்களை வழி நடத்தினார். பொது குளத்தில் நீரைப் பெறுவதற்கான தலித் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட அவர் 1927-ஆம் ஆண்டு மஹத் சத்தியாகிரகத்தை வழி நடத்தினார்.
மாநில அதிகாரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய அவர் பல்வேறு அரசியல் கட்சிகளை துவங்கினார்.
சமத்துவம் மற்றும் நீதிக் கொள்கைகளை அரசமைப்பில் சேர்க்க, இந்திய அரசமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக மிக முக்கிய பங்காற்றியுள்ளார் அம்பேத்கர். பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றார்.
பெரும்பான்மை மக்களுக்கு, குறிப்பாக தலித் மக்களுக்கு அவர் உத்வேகம் அளிக்கக் கூடிய நபர். அறிவு, நிதி மற்றும் அரசியல்சார் ஆதரவுகளை குறைவாகக் கொண்டிருந்தாலும் கூட, சோர்வடைய வைக்கும் பாதையை அசாத்தியமாக கடந்துள்ளார்.
சாதியை அழிப்பதற்கும், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்காக தியாகம் செய்யப்பட்ட வாழ்க்கை அம்பேத்கரின் வாழ்க்கை. அவரின் அறிவு மற்றும் அரசியல் செயல்பாடுகள் குறித்து சிறப்பாக அறிந்து கொள்ள, சாதி மற்றும் பெண்களின் நிலை குறித்து அவர் எழுப்பிய முக்கிய கேள்விகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தேசம், தேசியம், சமூகம் மற்றும் விடுதலை போன்ற கருத்துகளில் அவருக்கு அதிக நம்பிக்கை இல்லை. கொள்கைகள், அரசியல் கட்சிகள், இயக்கங்களிடம் சாதியை ஒழிப்பதற்கான அவர்களின் முயற்சிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மரியாதை ஆகியவற்றை அவர் சோதித்துக் கொண்டே இருந்தார்.
காந்தியுடனான உரையாடல் ஒன்றில், "எனக்கு தாய் நாடு என்று ஒன்று இல்லை. சுயமரியாதை கொண்ட எந்த ஒரு ஒடுக்கப்பட்ட நபரும், தன்னை நாய்களுக்கும் பூனைகளுக்கும் கேடாக நடத்தும், குடிக்க நீர் கூட கிடைக்காத ஒரு நிலம் குறித்து பெருமைப்படமாட்டார்," என்று கூறினார். அதேபோன்று, ஒரு சமூகத்தில் உள்ள அனைத்துவிதமான வர்க்கத்தினருக்குமான, குறிப்பாக அடிமைகளாக நடத்தப்படும் மக்களின் விடுதலையில் இருந்து விடுதலை என்பதை மதிப்பிட வேண்டும் என்றார் அவர்.
அவர் அனைத்து மத தத்துவங்கள், சமூகம் மற்றும் அரசியல் ஸ்தாபகங்களான காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபா, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸுக்கு வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் ஆதரவு உள்ளிட்ட பலவற்றையும், சாதி அமைப்பை ஒழிப்பதற்கான அவர்களின் நிலைப்பாடு மற்றும் தீவிர அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், விமர்சன ரீதியில் மதிப்பாய்வு செய்தார் அம்பேத்கர்.
அதனால் தான் சில அரசியல் கட்சிகள் அவருடைய பார்வையை கடுமையாக எதிர்த்தன. சிலர் அவருடைய எழுத்துகளில் அக்கறை காட்டவில்லை. மோசமான இத்தகைய சூழலால் பாதிக்கப்படாமல், சாதியற்ற சமூகம் என்ற ஒற்றை தொலை நோக்குப்பார்வையில் அவர் உறுதியாக இருந்தார்.
1916-ஆம் ஆண்டு, அவருடைய 25-வது வயதில், "இந்தியாவில் சாதி" என்ற தலைப்பில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
சாதி அமைப்பின் தொடக்கத்தை ஆய்வு செய்யும் போது அவர், அதனை "மூடப்பட்ட வர்க்கம்" என்று குறிப்பிடுகிறார். அவரின் அந்த அறிக்கை சாதிய அமைப்பின் துவக்கம் மற்றும் அது இந்தியாவில் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்கான பல்வேறு முக்கிய தகவல்களை வழங்கியது.
உலகின் மற்றெந்த சமூகத்தைப் போன்றும் இந்தியாவும் தொழில் சார்ந்த சமூகப் பிரிவுகளின் அடிப்படையில் பிரிந்து இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் ஒரு சில குழுவினர் மற்ற சமூகத்தினருடனான உறவை குறைத்துக் கொள்வதன் மூலம் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான அணுகலை நிறுத்த முடிவு செய்தது.
சில குழுக்கள் அவ்வாறு தங்களின் கதவுகளை மூடவும் செய்தனர். அவர்கள் பிறகு தங்களை உயர்ந்தவர்கள் என்று கூறினார்கள். அவர்கள் பின்னாட்களில் "உயர் சாதியினராயினர்." யாருக்கு எதிராக அவர்கள் தங்களின் கதவுகளை மூடினார்களோ அவர்கள் தீண்டத்தகாதவர்கள் ஆகினார்கள். இதன் முதல் கட்டமாக அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து அமர்ந்து உண்பதை நிறுத்திக் கொண்டார்கள்.
ஆனால் இந்த சாதிய அமைப்பு, சொந்த சாதிக்குள் திருமணம் செய்து கொள்வதன் மூலம் உறுதியாக்கப்பட்டது. தன்னுடைய குலத்தொழில் குழுவுக்கு வெளியே திருமணம் செய்வது தடை செய்யப்பட்டது. இந்த பழக்கம், காலப்போக்கில் மற்ற குழுக்களிடம் பரவி தனித்தனி சாதியக் குழுக்களாக மாற்றியது.
இதற்கு தீர்வாக அம்பேத்கர் முன்வைத்தது, மற்ற சாதிக்குழுக்களுடன் அமர்ந்து உணவு உண்பதும், சாதிவிட்டு சாதி திருமணம் செய்து கொள்வதும் தான். வேறுபட்ட சாதிக்குழுக்களுக்கு இடையே உள்ள உறவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட சொந்த சாதிக்குள் திருமணம் செய்து கொள்வது இன்னும் நடைமுறையில் உள்ளது. இது தலைமுறை தாண்டியும் சாதி அமைப்பை உறுதி செய்கிறது. பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமண மரபு, சாதிய அமைப்பைக் கட்டிக்காக்கும் பாதுகாவலர்களில் ஒன்றாக இன்றும் நீடிக்கிறது.
திருமணம் தொடர்பாக விரிவான விதிகளைக் கொண்ட, சொந்த சாதிக்கு வெளியே திருமணம் செய்வதை தடை செய்த முக்கியமான நூல் மனுஸ்மிருதியாகும்.
இருப்பினும், திருமண வயது வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே சமநிலையை பேணி பாதுகாத்தால் மட்டுமே இந்த பழக்கம் உயிர்ப்போடு இருக்கும். இல்லையென்றால் 'அதிகப்படியான' ஆண்களும் பெண்களும் சொந்த சாதிக்கு வெளியே இணை தேடும் நிலை உருவாகும். இதை செயற்கையான முறையில் சமப்படுத்த, ஆணாதிக்கம் கொண்ட சமூகத்தில் பெண்கள் பல விதமான ஒடுக்குமுறைகளை சந்திக்க நேரிட்டது.
கைம்பெண் மறுமணத்திற்கு தடை விதிப்பதன் மூலம், நிரந்தரமாக அந்த வாழ்க்கையை வாழ நிர்பந்தித்ததன் மூலமாக இந்த 'கூடுதலான' பெண்கள் சமூகத்தில் இருந்து அகற்றப்பட்டனர்.
இந்த சமநிலையை பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட பழக்கங்களில் மற்றொன்று உடன்கட்டை ஏறுதல். இறந்து போன கணவனுடன் சிதையில் ஏறுவதால் அந்த பெண்ணும் இந்த சமூகத்தில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் ஆண்களுக்கு அந்த நிலை ஏற்படவில்லை. இந்த 'கூடுதலான' ஆண்கள் அல்லது மனைவியை இழந்தவர்கள் துறவியானார்கள் அல்லது சிறு பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொண்டனர்.
பெண்களின் உடல் மற்றும் பால்சார் விருப்பங்களை முழுமையாக கட்டுக்குள் வைப்பதன் மூலம் வர்க்கம் அல்லது குலத்தொழில் செய்யும் குழுக்கள் சாதிகளாக உருமாற்றம் அடைந்தன.
இந்தப் பழக்கவழக்கங்கள் பிராமணர்களால் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் தீவிரமாக பரப்பப்பட்டன. சாதிப் படிநிலையில் கீழே உள்ள பிரிவினர் மத்தியில் இந்த பழக்கவழக்கங்களை பின்பற்றும் போக்கு குறைவாக உள்ளது என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
1927-ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பங்கேற்ற அம்பேத்கர் நூற்றுக்கணக்கான அறிவார்ந்த மக்களுடன் ஒன்று சேர்ந்து மனுஸ்மிருதி புத்தகத்தின் நகலை எரித்தார். அந்த நாள் மனுஸ்மிருதி எரிப்பு நாள் என்றும் இந்திய பெண்களின் விடுதலை நாள் என்றும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த மனிதாபிமானமற்ற சாதிய அமைப்பு என்பதே மனிதர்களால் உருவாக்கப்பட்டது இன்றி வேறொன்றும் இல்லை என்பதை சுட்டிக்காட்டவே மனுஸ்மிருதிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இது பல நூற்றாண்டுகளாக 'கீழ்' சாதியினர் மற்றும் பெண்கள் மீது வன்முறை ஒடுக்குமுறையின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது என்ற உண்மையை முன்னிலைப்படுத்தியது இப்போராட்டம்.
பெண்களின் விடுதலைக்காக அம்பேத்கரால் கொண்டுவரப்பட்ட இந்துச் சட்ட மசோதா 1951 (Hindu Code Bill) மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சொத்துரிமை, விவாகரத்து, குழந்தையை தத்தெடுத்தல், பலதார மணங்களை ஒழித்தல் போன்ற முக்கிய விவகாரங்களில் பெண்களுக்கு சம உரிமையை வழங்கும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சமத்துவம் மற்றும் சமூக நீதி தொடர்பான அம்பேத்கரின் பரந்துபட்ட பார்வையின் பின்னணியில் இந்த மசோதா மிகவும் தீவிரமான ஒன்றாக பார்க்கப்பட்டது.
வேறுபட்ட வர்க்கம் மற்றும் பாலினத்தவர்களுக்கு இடையே இருக்கும் வேரூன்றிய சமத்துவமின்மையை நிவர்த்தி செய்யாமல் பொருளாதாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சட்டமியற்றுவது பயனற்றது என்று அம்பேத்கருக்கு தோன்றியது.
சமூக சமத்துவமின்மையை கேள்விக்குட்படுத்தாமல் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது என்பது நமது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கி சாணக் குவியல் மீது அரண்மனை கட்டுவதைப் போன்றது என்று வாதிட்டார் அம்பேத்கர்.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் போகவே தன்னுடைய சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அம்பேத்கர்.
70 ஆண்டுகள் கழித்து இன்றும் கூட, அரசமைப்பால் ஓரளவுக்கு பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சமமான சமூகத்திற்கான கனவுகளுக்கும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் சமத்துவமின்மையை போதிக்கும் மனுஸ்மிருதிக்கும் இடையேயான போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்திய வரலாற்றில் மௌரிய சாம்ராஜ்ஜியத்தை பிராமண அரசர் புஷ்யமித்ரா வெற்றி கொண்ட தருணம் மிகவும் முக்கியமானது என்று வாதிட்டார் அம்பேத்கர். ஆட்சி மாற்றத்தை மட்டும் இது குறிக்கவில்லை. இது மௌரிய அரசர்களால், குறிப்பாக பேரரசர் அசோகரால் பரப்பப்பட்ட சமத்துவக் கொள்கைகளைக் கொண்ட பௌத்தத்தின் தத்துவத்தை பார்ப்பனிய தத்துவங்கள் வெற்றி கொண்டதை குறிப்பிடும் வெற்றியாக அமைந்தது. பார்ப்பனியத்தின் வெற்றி என்ற புத்தகத்தில் அம்பேத்கர், மனுஸ்மிருதி, "புதிய அரசின் புதிய சட்டமாக" உருவாகி வருகிறது என்று குறிப்பிட்டார்.
ராஜ்ஜியத்தில் ஏற்பட்ட மாற்றம் நடத்தை விதிகளை தீவிரமாக திணிப்பதில் வன்முறையை ஏற்படுத்தியது. இந்த நடத்தை விதிகள் சமத்துவமின்மை, தூய்மைவாதம், தீட்டு மற்றும் தீண்டாமை போன்ற பார்ப்பனிய கொள்கைகளின் அடிப்படையில் உருவானது.
இந்திய சமூகத்தின் சமூக கட்டமைப்பில் இஸ்லாமிய அரசர்கள் கூட இப்படியாக ஊடுருவி, தனி மனிதர்கள் மற்றும் குழுக்களுக்கு இடையேயான உறவில் மாற்றத்தை ஏற்படுத்தியதில்லை என்று அம்பேத்கர் கூறினார்.
அவரைப் பொருத்தவரை இந்திய வரலாறு என்பது, குறிப்பாக பண்டைய வரலாறு, என்பது பௌத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையே நடைபெற்ற தார்மீக மோதல். அரசியல் மற்றும் பொருளாதார மாற்றம் தொடர்பான வழக்கமான கண்ணோட்டத்தை கேள்வி எழுப்புவதாலும், மனித வரலாற்றில் தார்மீகம் மற்றும் நெறிமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களை ஆய்வு செய்ய வலியுறுத்துவதாலும் இது ஒரு ஆர்வம் கொண்ட அம்சமாக பார்க்கப்படுகிறது.
உயர் வர்க்கத்தினருக்கு சேவை செய்யும் இந்திய ஜனநாயகம்ஆளும் வர்க்கமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் தன்னுடைய அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் பிராமணர்கள் இதர சாதி குழுக்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டனர் என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
பண்டைய மற்றும் இடைக்கால வரலாற்றில் அவர்கள் சத்திரியர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டனர். ஏன் என்றால் ஆட்சி செய்வதற்கு ராணுவ வலிமை தேவை.
நவீன காலத்தில் அவர்கள் பனியாக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். தேர்தல் ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளை இயக்க வர்த்தகமும் செல்வமும் முக்கியமானதாக மாறியது.
ஆனால் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினர் சேவை செய்யும் வர்க்கத்தினராகவே தொடர்ந்து வருகின்றனர். இந்தியாவில் வர்க்கங்கள் சாதிகளாக தனிமைப்படுத்தப்பட்டதாலும், தனி நபர்களின் சமூக இயக்கத்தை தடை செய்ததாலும், முதலில் கூறப்பட்டவர்களை 'பரம்பரை' என்ற பதத்துடன் தகுதியுடையவர்களாக மாறியுள்ளனர். 'பரம்பரை வகுப்பினர்' என்பது சாதி மற்றும் வர்க்கத்திற்கு இடையே உள்ள சிக்கலான கருத்தாக்கங்களை விவரிக்கிறது.
இரண்டு உலகப் போர்களுக்கு நடுவே மேற்கு ஐரோப்பியாவில் உருவான அரசாங்கங்கள் மற்றும் இந்திய மாகாணங்களில் 1937-ஆம் ஆண்டு தேர்தல் முடிந்த பிறகும் கற்றுக் கொண்ட பாடங்களை அடிப்படையாக கொண்டு, 1943-ஆம் ஆண்டு தன்னுடைய உரை ஒன்றில் அம்பேத்கர், "இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்," என்று குறிப்பிட்டார்.
பாரிய மக்கள் தொகையினரின் விடுதலை, சொத்துரிமை மற்றும் மகிழ்ச்சியை அடைவதற்கான உரிமைகளை உறுதி செய்வதில் தோல்வி அடைந்துவிட்டதால், "நன்றாக இருப்பதைப் போன்று தோற்றமளிக்கும்" இந்த ஜனநாயகம் உண்மையில் நல்லதாக இல்லை என்று குறிப்பிட்டார்.
அதன் பொருள், தேர்தல் மற்றும் வயது வந்தோருக்கு வாக்களிக்கும் உரிமை போன்றவை பெரும்பான்மை சமூகத்தினருக்கு ஆதரவான மாற்றத்தை வழங்கவில்லை என்பதாகும்.
பரம்பரை பரம்பரையாக ஆளும் வர்க்கத்தினாரால் தேர்தல்கள் மூலம் இந்தியா ஆளப்பட்டு வருவதால் மக்களால் அவர்களை ஆள முடியவில்லை. அதனால் அவர்கள் அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, ஆட்சிப் பொறுப்பை அவர்களிடம் அளித்துவிட்டனர் என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
விடுதலை, சமத்துவம் மற்றும் தோழமை போன்றவை ஜனநாயகத்திற்கு தேவையான அடிப்படை அம்சங்கள். விடுதலை என்பது சமமான வாய்ப்புகளை அனைவரும் பெறுவதற்கான ஓர் உரிமை. சாதிய கட்டமைப்பின் தடைகள் ஏதுமின்றி ஒருவர் தனக்கு பிடித்த பணியை தேர்வு செய்வதற்கான சுதந்திரம் உள்ளிட்ட பல இதில் அடங்கும்.
படி நிலைகள், சமத்துவமின்மை, தீண்டாமை போன்றவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அனைத்து அம்சங்களையும் ஒழிப்பதை கோருவது சமத்துவம்.
அம்பேத்கரின் முக்கியமான கொள்கைகளில் ஒன்று தோழமை. சக மனிதனுக்கு மரியாதையை தரும் மனப்பான்மை இது. சாதி, வர்க்கம், பாலினம், மதம் போன்ற பிரிவுகளைக் கடந்து ஒன்றாக இருப்பதன் உணர்வே தோழமை. அம்பேத்கரைப் பொருத்தவரை 'சகோதரத்துவம் என்பது ஜனநாயகத்தின் மற்றொரு பெயர்'.
பெரும்பான்மை மக்களை சமத்துவம் மற்றும் விடுதலையை பின்பற்ற எந்த ஒரு சட்டத்தாலும் கட்டாயப்படுத்த இயலாது என்பது அவரின் உறுதியான கருத்து.
தோழமை போன்ற சக மனிதர்களிடம் காட்டப்பட்டும் உணர்வு மூலமே இது சாத்தியமாகும். சாதி போன்ற படிநிலை ஜனநாயகத்தின் இந்த அம்சங்களை மறுக்கும் கருத்தாக்கமாகும். எனவே சாதியம் என்பது இயற்கையாகவே ஜனநாயகத்திற்கு எதிரானது.
சாதியத்தின் அடிப்படை அம்சம் என்பது சமத்துவமின்மையே. இது சம உரிமைகள் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமைக்கு எதிரான கருத்தாக்கம்.
மிகவும் பிளவுபட்டிருக்கும் ஒரு நாட்டில் அனைவருக்கும் சம உரிமையை எவ்வாறு நிலை நாட்ட இயலும்? சாதி, ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கு பதிலாக மக்களை பிரிக்கிறது. இது தேசியத்திற்கு எதிரான செயலும் கூட. சாதி மற்றும் சமயத்தால் ஆழமாக பிளவுபட்டிருக்கும் நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பத்தில் அம்பேத்கரின் தோழமை சார்ந்த கருத்துகள் மிகவும் முக்கியமானவை. சாதிய மற்றும் சமய வெறுப்பானது ஜனநாயக கூறுகளை பலவீனமாக்கியுள்ளது. இதனை தோழமை மூலமாகவே சீராக்க இயலும்.
இந்த மூன்று சக்திகளும் இல்லாத எந்த ஒரு சமூகமும் அரசியலில் தனிநபர் வழிபாட்டிற்கு வழிவகை செய்யும். இது சீரழிவுக்கும் இறுதியில் சர்வாதிகாரத்திற்கும் வழிவகை செய்யும் என்று அம்பேத்கர் கூறியுள்ளார்.
சாதிய அமைப்பு என்பது பல்வேறு சாதிகளை சமமற்ற முறையில் வரிசைப்படித்தியிருக்கும் ஓர் அமைப்பாகும். இந்த படி நிலையில் கீழே செல்ல செல்ல வளங்களின் மீதான உரிமை, உண்மையான அரசியல் அதிகாரம், நிர்வாகம் மற்றும் நிறுவன கட்டுப்பாடு போன்றவை குறைந்து கொண்டே செல்லும்.
சாதி அடிப்படையில் உயர்மட்ட நிர்வாகக் கட்டமைப்பில் உள்ள வேலைகள் மற்றும் வருமானம் ஆகியவற்றின் புள்ளி விபரத்தைப் பார்த்தாலும் கூட இன்றைய எதார்த்த நிலை தெரிந்துவிடும்.
சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மை காரணமாக தேர்தல் ஜனநாயகம் அதன் மதிப்பை இழந்துவிட்டது. 80 வருடங்களுக்கு முன்பு, 'முரண்பாடு மிக்க வாழ்க்கையில்' நுழைவது குறித்து எச்சரித்தார் அம்பேத்கர்.
"அரசியலில் நம் அனைவருக்கும் சமமாக ஒரே ஒரு வாக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சமூக, பொருளாதார வாழ்வு சமமற்றதாக இருக்கும்," என்றார் அவர். இன்றும் கூட ஜனநாயக அமைப்புகள் மற்றும் மதிப்புகளுக்கு எதிரான, ஆழமாக வேரூன்றிய சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வெறுப்பு போன்ற சவால்கள் நம்மை உற்று நோக்குகின்றன.
சி.ஏ.ஏ. - என்.ஆர்.சிக்கான எதிர்ப்பு, தலித் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாகுபாடான கொள்கைகளுக்கு எதிரான மாணவர்கள் பிரசாரங்கள் என பல இயக்கங்களில் எதிர்ப்பின் அடையாளமாக அம்பேத்கர் திகழ இதுவே காரணம்.
நாடு முழுவதும் தலித் மற்றும் தலித் அல்லாதோர் நடத்தும் போராட்டங்களில் அவருடைய புகைப்படங்கள் தூக்கிக் காட்டப்படுகின்றன. போராட்டக் களங்களில் ஜெய்பீம் என்ற முழக்கம் மிகவும் சத்தமாகவும் தெளிவாகவும் கேட்கிறது. அம்பேத்கரின் சமத்துவம் மற்றும் சமூக நீதி பற்றிய தொலைநோக்குப் பார்வையின் வெளிச்சத்தில் நாம் நம்முடைய ஜனநாயகத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு