சிங்கப்பூரில் மே 3ம் தேதி பொதுத்தேர்தல்... 30 புதுமுகங்களை களமிறக்க முடிவு!
Dinamaalai April 16, 2025 12:48 AM

 


சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. சிங்கப்பூர்  சுதந்திரம் பெற்றதில் இருந்து இதே கட்சி ஆட்சி அதிகாரத்தில் உள்ள நிலையில் 2020ல் மீண்டும் தனது மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தம் உள்ள 93 தொகுதிகளில் 83 தொகுதிகளில் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்றிருந்தது. 

ஆனால் எதிர்க்கட்சி முன்பைவிட கூடுதல் இடங்களை பிடித்தது. எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 லிருந்து 10 ஆக உயர்ந்தது. ஆளுங்கட்சியான மக்கள் செயல் கட்சியின் வாக்கு வங்கியும் 61 சதவீதமாக சரிந்தது.  இந்நிலையில், சிங்கப்பூரில் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது. மே மாதம் 3ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும்  வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 23ம் தேதி தொடங்கும் எனவும்  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தல், சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின் நடைபெறும் 14 வது பொதுத்தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த தேர்தலிலும் ஆளும் மக்கள் செயல் கட்சியே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 

ஆனால் கடந்த தேர்தலில் வாக்காளர்களின் அதிருப்தியால் சற்று பின்னடைவைச் சந்தித்ததால், அதை சரிசெய்து வலுவான வெற்றியைப் பெற தற்போதைய பிரதமரும் கட்சியின் தலைவருமான லாரன்ஸ் வோங் திட்டமிட்டுள்ளார். அதிருப்தி அடைந்த இளம் வாக்காளர்களிடையே கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை கொண்டு செல்ல வியூகம் வகுத்துள்ளார். இனி வரும் தேர்தலில் சுமார் 30 புதுமுகங்களை களமிறக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.