அமெரிக்கா - இரான் சமாதானத்தால் இஸ்ரேலுக்கு என்ன கவலை? -மோதல் நிகழ்ந்தால் யாருக்கு இழப்பு?
BBC Tamil April 16, 2025 05:48 AM
AP

இரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டம் தொடர்பாக புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அமெரிக்காவும் இரானும் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 19) முதல் பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளன.

2018 ஆம் ஆண்டு இரான் மற்றும் உலக வல்லரசு நாடுகள் இடையிலான முந்தைய அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் டொனால்ட் டிரம்ப். மேலும் அந்நாடுகள் மீது பொருளாதார தடைகளை அமல்படுத்தினார். இது இரானை கோபப்படுத்தியது.

இந்த பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை என்றால் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க ஏன் அனுமதியில்லை?

இரான் தனது அணுசக்தி திட்டங்கள் சிவில் நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறுகிறது.

அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிக்கவில்லை என்று அந்நாடு கூறுகிறது. ஆனால் பல்வேறு நாடுகளும் உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி ஏஜென்சியும் (IAEA) இதில் உறுதியாக இல்லை.

2002 ஆம் ஆண்டு இரானில் ரகசிய அணுசக்தி நிலையங்கள் இருப்பது கண்டறியப்பட்டபோது, அந்நாட்டின் நோக்கங்கள் குறித்த சந்தேகங்கள் எழுந்தன.

இதன் மூலம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை (NPT) இரான் மீறியது. இந்த ஒப்பந்தத்தில் இரான் உள்பட பல உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

இந்த அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் மூலம் உலக நாடுகள் மருத்துவம், விவசாயம் மற்றும் எரிசக்தி போன்ற ராணுவம் அல்லாத தேவைக்காக அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது. ஆனால், இந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்களை உருவாக்குவதை அனுமதிக்காது.

BBC இரானின் அணுசக்தி திட்டம் எவ்வாறு மேம்பட்டது?

2018 ஆம் ஆண்டில் கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) என்று அழைக்கப்படும் தற்போதைய அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதிலிருந்து, மீண்டும் பொருளாதாரத் தடைகளை அறிமுகப்படுத்துவதற்கான முடிவிற்கு பழிவாங்கும் விதமாக இரான் முக்கிய வாக்குறுதிகளை மீறியுள்ளது.

யுரேனியத்தை செறிவூட்ட ஆயிரக்கணக்கான மேம்பட்ட சென்ட்ரிஃபூக்ஸ் எனப்படும் சுத்திகரிப்பு இயந்திரங்களை இரான் நிறுவியுள்ளது. இவை கூட்டு விரிவான செயல் திட்டத்தால் தடை செய்யப்பட்டவை.

"அணு ஆயுதங்களுக்கு 90% தூய்மைப்படுத்தப்பட்ட யுரேனியம் தேவைப்படுகிறது. கூட்டு விரிவான செயல் திட்டத்தின்படி, இரான் 3.67% வரை தூய்மைப்படுத்தப்பட்ட 300 கிலோ யுரேனியத்தை மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது. இது பொது அணுசக்தி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்கு போதுமானது, இந்த அளவு அணு ஆயுதங்கள் தயாரிக்க போதுமானதல்ல

ஆனால் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இரானிடம் சுமார் 275 கிலோகிராம் யுரேனியத்தை 60% தூய்மைக்கு செறிவூட்டியுள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சி தெரிவித்தது. இரான் இன்னும் அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டினால், கோட்பாட்டளவில் சுமார் அரை டஜன் ஆயுதங்களை உருவாக்க இது போதுமானது

Getty Images அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஏன் வெளியேறியது?

2010 ஆம் ஆண்டு முதல் இரான் தனது அணுசக்தி திட்டத்தை ஒரு அணுகுண்டை உருவாக்கும் நோக்கத்திற்காக பயன்படுத்துவதாக சந்தேகித்ததால், அந்நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இந்த பொருளாதார தடைகளால் இரான் சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விற்பனை செய்வது நின்றது. அத்துடன் அந்நாட்டின் 100 பில்லியன் டாலர் வெளிநாட்டு சொத்துகள் முடங்கி போயின. இதனால் இரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இரான் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது, இது பணவீக்கம் அதிகரிக்க வழிவகுத்தது.

2015 ஆம் ஆண்டில் இரான் மற்றும் உலகின் ஆறு வல்லரசு நாடுகள் (அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரிட்டன்) பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) எனப்படும் ஒரு உடன்பாட்டிற்கு வந்தன.

இரானின் அணுசக்தி திட்டத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன், சர்வதேச அணுசக்தி ஏஜென்சிக்கு இரானின் அனைத்து அணுசக்தி நிலையங்களை அணுகவும், சந்தேகத்திற்குரிய இடங்களை ஆய்வு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்குப் பதிலாக, இரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்க ஒப்புக்கொண்டன. இந்த கூட்டு விரிவான செயல் திட்டம் உடன்படிக்கை 15 ஆண்டுகள் வரை நீடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டது, அதன் பிறகு இந்த கட்டுப்பாடுகள் காலாவதியாகிவிடும்.

2018 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபோது, ஒப்பந்தத்தின் முக்கிய தூணாக இருந்த அமெரிக்காவை ஒப்பந்தத்திலிருந்து விலக்கினார்.

அவர் இந்த ஒப்பந்தத்தை மோசமான ஒன்று என்று கூறினார். ஏனெனில் அது நிரந்தரமானது அல்ல, மேலும் இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் உள்ளிட்ட பிற விஷயங்களை அது கருத்தில் கொள்ளவில்லை.

புதிய மற்றும் விரிவான ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த இரானை கட்டாயப்படுத்தும் "அதிகபட்ச அழுத்த" பிரசாரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கத் தடைகளை டிரம்ப் மீண்டும் விதித்தார்.

இஸ்ரேல் போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகள் இந்த ஒப்பந்தத்தை விரும்பவில்லை, அதனால் டிரம்ப் இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

இரான் ரகசிய ஆயுதத் திட்டத்தை இன்னும் தொடர்கிறது என்றும், பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் பில்லியன் கணக்கான டாலர்களை இரான் தனது ராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்த பயன்படுத்தும் என்றும் இஸ்ரேல் எச்சரித்தது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தற்போது விரும்புவதென்ன?

இரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த டிரம்பின் அறிவிப்பு இஸ்ரேலை ஆச்சரியப்படுத்தியது. கூட்டு விரிவான செயல் திட்டத்தை விட "சிறந்த" ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போவதாக அவர் நீண்ட காலமாக கூறி வந்தார். இருப்பினும் இதுவரை இரான் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதை நிராகரித்துள்ளது.

இரான் ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படியவில்லை என்றால் அந்நாட்டின் மீது குண்டு வீசப்படும் என்று டிரம்ப் முன்னர் எச்சரித்திருந்தார்.

இரானின் அணுசக்தி திட்டத்தை "முழுமையாகக் கலைக்க" டிரம்ப் விரும்புவதாக அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் கூறியுள்ளார். இரானின் அணு செறிவூட்டல் என்பதை ஆயுதமயமாக்கல் மற்றும் மூலோபாய ஏவுகணைத் திட்டம் என்று கருத வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

டொனால்ட் டிரம்ப் "நேரடி பேச்சுவார்த்தைகள்" நடைபெறும் என்று கூறியிருந்தாலும், இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி ஓமனில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மறைமுகமாகவே இருக்கும் என்று கூறினார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த இரான் தயாராக இருப்பதாகவும், ஆனால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படாது என்பதை டிரம்ப் முதலில் உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை முழுமையாகக் கைவிடும் ஒப்பந்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று கூறினார்.

"நாங்கள் உள்ளே நுழைந்து, அமெரிக்காவின் மேற்பார்வை மற்றும் செயல்பாட்டின் கீழ், அணு உலைகளை வெடித்து, அனைத்து உபகரணங்களையும் அழிப்போம்", என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் மிகப்பெரிய அச்சம் என்னவென்றால், டிரம்ப் ஈரான் முழுமையாக சரணடைவதற்கு குறைவான ஒரு சமரசத்தை ஏற்றுக்கொண்டு, அதை ஒரு இராஜதந்திர வெற்றியாக முன்வைக்கக்கூடும்.

இஸ்ரேலின் மிகப்பெரிய கவலை என்னவென்றால், ஈரானின் முழுமையான சரணடைதல் இல்லாமல் டிரம்ப் ஒரு சமரசத்தை ஏற்றுக்கொள்வார், அதை அவர் ஒரு ராஜதந்திர வெற்றியாக சித்தரிக்க முடியும் என்பதுதான்.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடாத இஸ்ரேல், அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக கருதப்படுகிறது. இதனை இஸ்ரேல் உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக்கொள்ளாத அணு ஆயுதம் வைத்திருக்கும் இரான் இஸ்ரேலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று இஸ்ரேல் நம்புகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானை தாக்க முடியுமா?

அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானின் அணுசக்தி உட்கட்டமைப்பைத் தாக்கும் ராணுவத் திறன்களை வைத்துள்ளன. ஆனால் அத்தகைய நடவடிக்கை சிக்கலானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும், நிச்சயமற்ற விளைவைக் கொண்டிருக்கும்.

முக்கிய அணுசக்தி தளங்கள் ஆழமாக நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளன, இவற்றை மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளால் தகர்த்து மட்டுமே அணுக முடியும். அமெரிக்கா இந்த வெடிகுண்டுகளை வைத்திருந்தாலும், இஸ்ரேலிடம் இந்த குண்டுகள் இருப்பதாக தெரியவில்லை.

இரான் தன்னை நிச்சயமாக தற்காத்துக் கொள்ளும், இதில் அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க சொத்துக்களை தாக்குவதும், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவதும் அடங்கும்.

இத்தகைய நடவடிக்கைகளை சமாளிக்க, அமெரிக்கா வளைகுடாவில் உள்ள தனது தளங்களையும், விமானம் தாங்கும் போர்க் கப்பல்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

"ஆனால் கத்தார் போன்ற நாடுகளில், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படைத் தளம் இருந்தாலும், அந்நாடுகளால் பதிலடி தாக்குதல்களுக்கு பயந்து இரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு உதவ வராமல் போகலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.