வக்ஃப் வழக்கில் இடைக்கால தீர்ப்பு? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் எழுப்பிய 5 கேள்விகள்
BBC Tamil April 17, 2025 12:48 AM
Getty Images

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையில், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நிலையில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் தொடர் வேண்டுகோளுக்கு ஏற்ப நாளை வரை அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 2 மணிக்கு இவ்வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளன.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் முன்பு இன்று (ஏப். 16) விசாரணைக்கு வந்தது.

மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ராஜீவ் தவன், ஏ.எம். சிங்வி, சி.யு. சிங் ஆகியோர் மனுதாரர்கள் சார்பாக ஆஜராகினர்.

நீதிமன்றம் கூறியது என்ன?

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பியதாக 'லைவ் லா' செய்தி கூறுகிறது.

அதன்படி,

1. பயன்பாட்டின் அடிப்படையிலான வக்ஃப் ( waqf-by-user) சொத்துக்கள், இனி வக்ஃபாக அங்கீகரிக்கப்படாதா?

2. பல நூற்றாண்டாக பயன்பாட்டின் படி வக்ஃபாக ( waqf-by-user) உள்ளவற்றை, பதிவு செய்ய வேண்டுமா?

3. சச்சரவு உள்ள பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற அதிகாரி விசாரணையை முடிக்கும் வரை அவை வக்ஃப் சொத்து அல்ல எனக்கூறுவது நியாயமா?

4. வக்ஃப் என நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டதை பிரிவு 2A எப்படி மீற முடியும்?

5. புதிய திருத்தங்களுக்குப் பிறகும் மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருப்பார்களா?

ஆகிய கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியதாக லைவ் லா செய்தி குறிப்பிடுகிறது.

நீதிமன்றம் பரிந்துரைக்கும் இடைக்கால உத்தரவு என்ன? Getty Images வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த போராட்டம்

இந்த கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் கீழ்க்கண்ட இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என கூறியதாக லைவ் லா கூறுகிறது.

1. நீதிமன்றத்தால் வக்ஃப் என உத்தரவிடப்பட்ட சொத்துக்களை ரத்து செய்யக் கூடாது, அது பயன்பாட்டின் அடிப்படையிலான வக்ஃப் (waqf-by-user) ஆக இருந்தாலும் சரி ஒப்பந்தத்தின் அடிப்படையிலான வக்ஃப் (waqf by deed) ஆக இருந்தாலும் சரி.

2. மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தும் காலக்கட்டத்தில் குறிப்பிட்ட பகுதி வக்ஃப் சொத்தாக கருதப்படாது என்ற திருத்தச் சட்டத்தின் பிரிவு அமலுக்கு வராது.

3. மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களின் அனைத்து உறுப்பினர்களும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும், (அலுவல் ரீதியான உறுப்பினர்களை தவிர)

இந்த இடைக்கால உத்தரவுகளை தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணா பிறப்பிக்கும் சமயத்தில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் மற்ற பதில் மனுதாரர்களின் தொடர் வேண்டுகோளுக்கு ஏற்ப அவற்றை நாளை வரை நிறுத்தி வைப்பதாகவும் நாளை (ஏப். 17) மதியம் 2 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு ஏன்?

வக்ஃப் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியதையடுத்து சட்டமானது.

ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி எம்.பி. அசாதுதீன் ஓவைசி, காங்கிரஸ் எம்.பி முகமது ஜாவத், ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி மனோஜ் குமார் ஜா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த், திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சமஸ்தா கேரளா ஜாமியத் உலமா, டெல்லி எம்.எல்.ஏ அமனதுல்லா கான், சமாஜ்வாதி கட்சி எம்.பி ஸியா உர் ரெஹ்மான், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் என பல்வேறு தரப்பினரும் மனு தாக்கல் செய்தனர்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி குறிப்பிடப்பட்டிருக்கும் 'நோக்கங்கள் மற்றும் காரணங்களின்படி, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக இஸ்லாத்தை பின்பற்றும் மற்றும் சம்பந்தப்பட்ட நிலத்தில் உரிமையுள்ள எந்தவொரு நபரும் வக்ஃபுக்கு தனது சொத்தை நன்கொடையாக அளிக்கலாம்.

மேலும், வக்ஃப் நிலத்தை அளவீடு செய்யும் கூடுதல் ஆணையரின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டு, அதற்குப் பதிலாக இந்தப் பொறுப்பு தற்போது மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம், "அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் மத சுதந்திரம், சிறுபான்மையினர் நலனுக்கு எதிரானது" என்றும் எதிர்தரப்பினர் கூறுகின்றனர்.

அதேசமயம், இந்த திருத்தங்கள் மூலம், அரசு எந்தவொரு மதம் சார்ந்த நிறுவனம் மீதோ அல்லது மத செயல்பாடுகளின் மீதோ தலையிடாது என்றும் வக்ஃப் வாரியம் எந்தவொரு மத நிறுவனத்தின் நிர்வாகத்திலும் தலையிடாது என்றும் மத்திய அரசு தெரிவிக்கிறது.

வக்ஃப் வாரியத்தின் சொத்துக்களை சிறப்பாக நிர்வகிப்பதற்கான நடவடிக்கையே இது என்கிறது மத்திய அரசு.

Getty Images வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன வக்ஃப் என்றால் என்ன?

வக்ஃப் என்பது இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட எவராலும் அல்லாவின் பெயரால் அல்லது மத நோக்கங்களுக்காக அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்படும் அசையும் அல்லது அசையாச் சொத்துகள்.

இந்தச் சொத்து இஸ்லாமிய சமூகத்தின் நன்மைக்காக சமூகத்தின் ஓர் அங்கமாகிறது. அல்லாவை தவிர வேறு யாரும் அதன் உரிமையாளராக இருக்க முடியாது.

வக்ஃப் வாரியத் தலைவர் ஜாவேத் அகமது கூறுகையில், "வக்ஃப் என்பது ஒரு அரபு வார்த்தை. இதன் பொருள் தங்குதல். அல்லாவின் பெயரால் ஒரு சொத்து வக்ஃப் செய்யப்படும்போது, அது என்றென்றும் அல்லாவின் பெயரிலேயே இருக்கும். பின்னர் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது."

இந்திய உச்சநீதிமன்றம் 1998 ஜனவரியில் வழங்கப்பட்ட அதன் தீர்ப்பில் 'ஒரு சொத்து வக்ஃப் ஆனவுடன், அது என்றென்றும் வக்ஃப் ஆகவே இருக்கும்' என்று கூறியது. வக்ஃப் சொத்துகளை வாங்கவோ விற்கவோ அல்லது யாருக்கும் மாற்றவோ முடியாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.