அவரு கிட்ட தப்பா நடந்துக்கிட்டாரு…! “அரசு ஊழியரை வெளியே இழுத்து போட்டு அடித்த மாஜிஸ்திரேட்”… நேரில் சென்று தண்டனையா..? வைரலாகும் வீடியோ..!!
SeithiSolai Tamil April 17, 2025 12:48 AM

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் நகர மாஜிஸ்திரேட் ஒருவர் அரசு ஊழியரை தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. மதுரா நகர மாஜிஸ்திரேட் ராகேஷ் குமார், பொது பணித்துறை (PWD) அலுவலகத்தில் பணியாற்றும் தலைமை உதவியாளர் கோபால் பிரசாத்தை அலுவலகத்திலிருந்து இழுத்து, தாக்கும் காட்சிகள் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளன. இது குறித்து பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டது. இதில், ஹோம் கார்டு ஒருவருடனான வாய் தகராருக்கு பிறகு இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் கோபால் பிரசாத் கூறுகையில், “நான் என் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, நகர மாஜிஸ்திரேட் 10 பேருடன் வந்து என்னை வெளியே இழுத்துச் சென்றார், தவறாக பேசி தாக்கினார். எனது சக ஊழியர்கள் இல்லையென்றால் என்னவாகியிருக்கும் என சொல்ல முடியாது. இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து PWD ஊழியர்கள் அலுவலகத்தை மூடிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகேஷ் குமார் மன்னிப்பு கேட்டால்தான் அலுவலகம் திறக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

இந்நிலையில், மாஜிஸ்திரேட் ராகேஷ் குமார் இத்தனைக்கும் விளக்கம் அளித்து, “இது தவறாக விளக்கப்படுகிறது. என் பகுதியில் பணியாற்றும் ஹோம் கார்டுடன் ஒரு PWD ஊழியர் தவறாக நடந்துகொண்டார் என்பதற்காகவே அலுவலகத்திற்குச் சென்றேன். அவர் அரசு ஊழியரா, தனியார் பணியாளரா என்பதைக் கண்டுபிடிக்கவே சென்றோம். எவ்வித தாக்குதலும் நிகழவில்லை,” என தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சிசிடிவி காட்சிகள் மூலம் உண்மை வெளிவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.