சுற்றுலாவில் சோகம்... தங்கும் விடுதி மாடியிலிருந்து விழுந்து தம்பதியர் உயிரிழப்பு!
Dinamaalai April 17, 2025 12:48 AM

கன்னியாகுமரி மாவட்டத்தில்  தங்கும் விடுதியின் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குஜராத்தை சேர்ந்த தம்பதியர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 29 பேர் கொண்ட குழுவினர் ரயில் மூலம் ராமேஸ்வரம் சுற்றுலா வந்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வேன் மூலம் கன்னியாகுமரிக்கு நேற்று சென்றனர். கன்னியாகுமரி மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து இடங்களைப்  பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

இந்த குழுவில் வந்த குஜராத்தின் குன்காவாவ் மாவட்டம் அம்ரேலி அபாசாரா சேரி பகுதியை சேர்ந்த பாபாரியா ஹரிலால் லால்ஜி(72), அவரது மனைவி பாபாரியா சாப்ரஜின்(64) ஆகியோர் 3வது மாடியில் உள்ள அறையில் தங்கி இருந்தனர். 

இந்நிலையில் இன்று காலை அவர்கள் அறையின் முன்பக்க கதவை திறக்க முயன்றபோது அது திறக்காத நிலையில் கதவின் சாவியும் முன்பக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே சாவியை எடுக்க பின்பக்க சன்ஷைடு வழியாக பாபாரியா ஹரிலால் சென்றுள்ளார். அவருக்கு மனைவி சாப்ரஜின் உதவி செய்துள்ளார்.

அப்போது பாபாரியா ஹரிலால் எதிர்பாராத விதமாக சன்சைடில் இருந்து கீழே விழுந்துள்ளார். கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் தவறி 3வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளளார். இதனால் தங்கும் விடுதி முன்பு பரபரப்பு ஏற்பட்டது. 

விடுதி ஊழியர்களும், அவருடன் வந்த சுற்றுலா குழுவினரும் விடுதியின் முன்பு வந்து பார்த்தனர். அங்கு கணவன் மனைவி இருவரும் தலையில் ரத்தக் காயத்துடன் விழுந்து கிடந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். 

அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது கன்னியாகுமரி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா வந்த குஜராத் தம்பதியர், விடுதி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் அதிச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.