நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா - ராகுல் மீது குற்றப்பத்திரிகை... காங்கிரஸ் கண்டனம்!
Dinamaalai April 17, 2025 12:48 AM

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஜவஹர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் நிறுவனமான அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சட்டவிரோதமாக ‘யங் இந்தியா' என்ற நிறுவனத்துக்கு மாற்றி உள்ளதாக புகார் எழுந்தது. இந்த ‘யங் இந்தியா' நிறுவனத்தின் பங்கில் 76 சதவீதம் என்பது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் தான் உள்ளது. சோனியா காந்தி 38 சதவீத பங்கையும், ராகுல் காந்தி 38 சதவீத பங்கையும் வைத்துள்ளனர்.

மேலும் ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை வெறும் ரூ.50 லட்சம் செலவில் மாற்றிவிட்டதாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார். வழக்கை விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு சம்மன் வழங்கி விசாரித்தது.

இதையடுத்து இருவருக்கும் தொடர்புடைய ரூ.661 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வரும் 25ம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில் இன்று குற்றப்பத்திரிகை என்பது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் குற்றப்பத்திரிகை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது எக்ஸ் பக்கத்தில் "இந்த குற்றப்பத்திரிகை என்பது பிரதமரின் பழிவாங்கும் நடவடிக்கை. இதனை காங்கிரஸ் மேலிடம் பார்த்து கொண்டு அமைதியாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.