அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம், பரஸ்பர வரியிலிருந்து ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் சில மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இந்த விலக்கு 125% வரி விதிக்கப்பட்ட சீன இறக்குமதிகளுக்கும் பொருந்தும்.
பெரும்பாலான நாடுகளுக்கு டிரம்ப் விதித்த 10% இறக்குமதி வரியிலிருந்தும், சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட அதிகளவிலான வரியிலிருந்தும் இந்த பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுங்கத் துறை மற்றும் எல்லைக் காவல் ஏஜென்சியின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகளில் இருந்து முதல் தளர்வை இது குறிக்கிறது. இதனை "முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வு" என வர்த்தக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சனிக்கிழமை இரவு மியாமிக்கு செல்லும் போது, விலக்கு குறித்த கூடுதல் தகவல்களை அடுத்த வார தொடக்கத்தில் தருவதாக டிரம்ப் கூறினார்.
ஸ்மார்ட்போன்கள், கணினிகள் போன்ற பெரும்பாலான மின்னணு பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்படுவதால், அவற்றின் விலை பல மடங்கு உயரலாம் என அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் கவலையடைந்த சூழலில் இந்த முடிவு வெளியானது.
கடந்த ஏப்ரல் 5 முதல் பொருந்தும் இந்த வரி விலக்கில், செமிகண்டக்டர்கள், சோலார் செல்கள் மற்றும் மெமரி கார்டுகள் ஆகியவையும் அடங்கும்.
"தொழில்நுட்ப முதலீட்டாளர்களின் கனவு நனவாகியுள்ளது" என வெட்பஷ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான உலகளாவிய தலைவரான டான் ஐவ்ஸ், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "சீன இறக்குமதி வரியிலிருந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் சிப்களுக்கு விலக்கு அளித்திருப்பது, மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம்" என்றும் அவர் கூறினார்.
ஆப்பிள், என்விடியா, மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும், தொழில்நுட்பத் துறையும் இந்த வார இறுதியில் நிம்மதிப் பெருமூச்சு விடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்களது உற்பத்தியை அமெரிக்காவுக்கு நகர்த்தும் நிறுவனங்களுக்கு போதுமான நேரத்தை வழங்க இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
"செமிகண்டக்டர்கள், சிப்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் போன்ற முக்கியமான தொழில்நுட்ப பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அமெரிக்கா சீனாவை நம்பியிருக்க கூடாது" என்பதை அதிபர் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
"அதிபரின் வழிகாட்டுதலின்படி, இந்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அமெரிக்காவுக்கு நகர்த்த வேகமாக பணியாற்றி வருகின்றன" என்றும் அவர் கூறினார்.
தனது புளோரிடா வீட்டில் வார இறுதியை கழித்த டிரம்ப், சீனாவிற்கு விதிக்கப்பட்ட அதிக வரிகள் குறித்து "தான் கவலைப்படவில்லை" என வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் தனக்கு உள்ள உறவைப் பற்றி பெருமையாக பேசிய டிரம்ப், "அதிலிருந்து சாதகமான ஒரு விஷயம் வரும் என்று நினைக்கிறேன்" என்றார்.
ஃபென்டனில் தொடர்பாக சீனாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 20% வரிகள் இந்த மின்னணு பொருட்களுக்கு பொருந்தும் என, வெள்ளை மாளிகையின் கொள்கைப் பிரிவின் துணை மூத்த பணியாளரான ஸ்டீபன் மில்லர், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வரி செலவுகள் பயனாளர்களுக்கு மாற்றப்படுமானால், அமெரிக்காவில் ஐபோன் விலைகள் மூன்று மடங்காக அதிகரிக்கலாம் என்று சில மதிப்பீடுகள் கூறுகின்றன.
அமெரிக்கா, ஐபோனுக்கான முக்கிய சந்தையாகும். மேலும், கடந்த ஆண்டு ஆப்பிள் விற்பனை செய்த ஐபோன்களில் பாதி அமெரிக்காவில் விற்கப்பட்டதாக கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்களில் 80% சீனாவில் தயாரிக்கப்பட்டவை மற்றும் மீதமுள்ள 20% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை எனவும் அது கூறுகிறது.
தனது சக தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனமான சாம்சங் போல, சீனாவை அதிகம் நம்பாமல் தனது உற்பத்தியை பரவலாக்க ஆப்பிள் முயற்சிக்கிறது.
கூடுதல் உற்பத்தி மையங்களுக்கான போட்டியில் இந்தியாவும் வியட்நாமும் முன்னணியில் உள்ளன.
வரி அமலுக்கு பிறகு, இந்தியாவில் உற்பத்தியை விரைவுபடுத்தவும் அதிகரிக்கவும் ஆப்பிள் சமீப நாட்களில் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
டிரம்ப், இந்த வாரம் உலகின் பல நாடுகளுக்கு கடுமையான வரிகளை அமல்படுத்த திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அதிக வரிக்கு உள்ளான நாடுகளுக்கு வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தும் என்று கடந்த புதன்கிழமை டிரம்ப் அறிவித்தார். ஆனால் இது சீனாவுக்கு பொருந்தாது. அந்த நாட்டுக்கு எதிராக அவர் வரியை 145% ஆக உயர்த்தினார்.
சீனாவால் எதிர்வரி விதிக்கப்பட்டதால் அதற்கான வரியை உயர்த்தியதாகவும், மற்ற நாடுகள் எதிர்வரி விதிக்கவில்லை என்பதால் ஜூலை வரை அவர்கள் 10% அடிப்படை வரியை மட்டுமே சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு