இன்றைய (18/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி இருப்பதாக ஒருவர் வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரபலமாகி பணம் சம்பாதிப்பதற்காகப் பலரும் வெவ்வேறு வழிகளில் முயல்கின்றனர். அந்த வரிசையில் பெங்களூரை சேர்ந்த ஒருவர் ரூ.50 கோடி மதிப்புள்ள நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கியிருப்பதாகவும், அது ஓநாய்க்கும், காக்கேஷியன் ஷெப்பர்ட் நாய்க்கும் பிறந்தது என்றும் கூறி ஒரு நாயின் படத்தைப் பதிவிட்டார். உலகிலேயே மிகவும் விலை மதிப்புள்ள நாய்க்கு சொந்தக்காரர் என்றும் தன்னைக் கூறிக் கொண்டார்," என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "அவர் எதிர்பார்த்தது போலவே அந்த 'ரூ.50 கோடி நாய்' சமூக ஊடகங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டது. இதன் மூலம் அவர் எதிர்பார்த்த பிரபலமும் கிடைத்தது. இந்த 'ரூ.50 கோடி நாய்' பதிவைக் கேள்விப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு இதில் அந்நியச் செலாவணி விதிகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, 'ரூ.50 கோடி நாயின்' உரிமையாளர் வீட்டுக்கு அதிரடியாக ஆய்வுக்குச் சென்றனர்" என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.
"திடீரென தனது வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்ததைத் தொடர்ந்து அந்த நபர் திகைப்படைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் ரூ.50 கோடிக்கு நாய் வாங்கும் அளவுக்கு வசதியானவர் இல்லை என்பதும் புகைப்படத்தில் இருந்த நாயின் மதிப்பும் ரூ.1 லட்சம்கூட இல்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அமலாக்கத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்" அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பில் கலை மற்றும் வணிகப் பிரிவுகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விரைவில் இந்தியாவில் கமர்ஷியல் விமானங்களுக்கான விமானிகளாகப் பணியாற்ற அனுமதிக்கப்படலாம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
"கமர்ஷியல் விமானி உரிமம் (CPL) பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் படித்திருக்க வேண்டும் என்ற தற்போதைய தகுதித் தேவையை நீக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) பரிசீலித்து வருகிறது. ஆனால் மருத்துவத் தகுதிக் கூறுகள் அனைவருக்கும் பொருந்தும்" என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த வகைப் பணியானது 1990களின் நடுப்பகுதி முதல் அறிவியல் மற்றும் கணிதம் படித்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன்பு, இந்த உரிமத்தைப் பெறுவதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வித் தேவையாக இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த மாற்றம் குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது.
"இந்த முடிவு இறுதியான பிறகு, இந்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அவர்கள் அதை அங்கீகரித்தவுடன் அனைத்துப் பிரிவுகளிலும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கமர்ஷியல் விமானி உரிமத்திற்கான பயிற்சி திறக்கப்படும்" என்று அதிகாரிகள் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கின்றது.
"சிபிஎல் பயிற்சிக்குத் தகுதி அளவுகோலாக 12ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் தேவை என்ற நிபந்தனையை இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் கொண்டிருக்கவில்லை. இது ஒரு பழமையான தேவை. 12ஆம் வகுப்பில் கற்பிக்கப்படும் இயற்பியல் மற்றும் கணிதம் விமானிகளுக்குத் தேவையில்லை. அவர்கள் ஏற்கெனவே உள்ள வகுப்புகளில் படித்தவற்றிலிருந்து இந்தப் பாடங்களைப் பற்றிய தேவையான புரிதலைக் கொண்டிருக்கலாம்" என்று இண்டிகோ விமான செயல்பாடுகளின் துணைத் தலைவராகவும், அதற்கு முன்பு அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த விமானி, கேப்டன் சக்தி லும்பா கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஏனென்றால், வணிக ரீதியான விமானிகள் ஆக விரும்பும் கலை மற்றும் வணிகவியல் மாணவர்களுக்கு இந்த விதி ஒரு தடையாக இருந்து வந்துள்ளது. அத்தகைய மாணவர்கள் பயிற்சி வகுப்பில் சேர்வதற்குத் தகுதி பெற ஓப்பன் ஸ்கூலில் இயற்பியல் மற்றும் கணிதத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுத வேண்டியுள்ளது" என்றும் சக்தி லும்பா கூறியதாக அந்தச் செய்தி குறிப்பிட்டுள்ளது.
"இந்தியாவில் வளர்ந்து வரும் விமானத் தொழிலின் மனிதவளத் தேவையைப் பூர்த்தி செய்ய விமானிக்கான பயிற்சியை ஒழுங்குபடுத்த பல்வேறு பரிந்துரைகளை விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது. பாதுகாப்பு மற்றும் வணிக விமானி உரிமம் (CPL) பயிற்சியை முடிக்க ஆகும் நேரம் போன்ற பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள பயிற்சிப் பள்ளிகளுக்கு தரவரிசை வழங்க விமானப் போக்குவரத்து இயக்குநரகம் செயல்பட்டு வருகிறது.
இதுவரை, முக்கியமாக இந்த இரண்டு விஷயங்களில் இருந்த கவலைகள் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் தங்கள் சிபிஎல் பயிற்சிக்கு வெளிநாடு செல்கின்றனர்" என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கூறுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விண்வெளித் தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து, 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசின் புதிய விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
"தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும் என்ற வகையில் புதிய தொழில் பிரிவுகளில் நமது வளர்ச்சி இருக்க வேண்டும். குறிப்பாக, விண்வெளி சார்ந்த தொழில் நுட்பங்களில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நாம் செல்ல வேண்டும். இதையொட்டி 'தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை - 2025'க்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது" என்று தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜா, "அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளித் துறையில் ரூ.10 ஆயிரம் கோடிக்கான முதலீடுகளை ஈர்ப்பது இதன் முக்கிய இலக்கு. அதே போல, குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், விண்வெளித் துறைக்கான தொழில்நுட்பத்தில் தகுதியான, திறமையான நபர்களை உருவாக்குவதும் இதன் இலக்கு" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதில் முக்கிய அம்சமாக ரூ.25 கோடி முதலீடு கொண்ட சிறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் ஊக்கம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், "தற்போது உலகில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களும் தமிழகத்தில் கிடைக்கின்றன. அமெரிக்காவில் ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குப் போட்டியாக சென்னையில் ஒரு நிறுவனம் மிகச் சிறப்பான பணிகளைச் செய்து வருகிறது. அப்படிப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காப்புரிமை பெறுவதற்கும் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். ரூ.300 கோடிக்கு மேலான முதலீடுகளுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும்", என்று அமைச்சர் ராஜா பேசியதாக இந்து தமிழின் செய்தி கூறுகிறது.
அதோடு, "தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 'ஸ்பேஸ்-பே' என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் முதலீடுகள் வரும் பட்சத்தில் அதற்கும் சிறப்பு சலுகைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஊதிய மானியமாக முதல் ஆண்டு 30 சதவீதம், இரண்டாம் ஆண்டு 20 சதவீதம், மூன்றாம் ஆண்டு 10 சதவீதம் போன்ற ஊக்கங்களை இந்தக் கொள்கை வழங்குகிறது" என்றும் அவர் கூறியதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உலக அளவில் இருக்கும் தொழில்முனைவோரும் இனி தமிழகத்தை நோக்கி வருவார்கள். விண்வெளித் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள் தமிழகத்தை நோக்கி அதிக அளவில் படையெடுக்கும். குறிப்பாக குலசேகரப்பட்டினம் போன்ற தென் தமிழகத்தைச் சேர்ந்த பகுதிகளுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்" என்றும் அமைச்சர் இந்த திட்டம் குறித்து விவரித்ததாக இந்து தமிழ் திசை குறிப்பிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தின் தோகைமலை அருகே பிளஸ் 2 மாணவர், சக மாணவியை திருமணம் செய்ய கடந்த வியாழக்கிழமை காரில் சென்றபோது, காரை மறித்த மாணவியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தி அவரை மீட்டதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கழுகூர் உடையாபட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவி, திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். அதே வகுப்பில் இனாம்குளத்தூர் சமத்துவபுர காலனியைச் சேர்ந்த ஒரு மாணவரும் படித்து வருகிறார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு முடிந்து அவரவர் ஊரில் இருந்தனர். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்ய கடந்த புதன்கிழமை அன்று முடிவெவிடுத்தனர்" என்று தினமணியின் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
தொடர்ந்து அதில், "இதையடுத்து மாணவர், குளித்தலையை அடுத்த அய்யர்மலையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு மாணவியை புதன்கிழமை அழைத்துள்ளார். இதன்படி மாணவியும் சென்றுள்ளார். இதனிடையே மாணவியை வீட்டில் காணாததால் அவரது பெற்றோர் தோகைமலை காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"அப்போது, மாணவிக்கும், மாணவருக்கும் திருமணம் செய்து வைக்க, வியாழக்கிழமை காலை காரில் மாணவரின் பெற்றோர் தோகைமலை காவல் நிலையத்துக்கு அழைத்து வரவுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் உறவினர்கள் குளித்தலை-மணப்பாறை சாலையில், அக்காண்டிமேடு என்ற இடத்தில் மாணவர், மாணவி சென்ற காரை மடக்கினர்.
பின்னர், காரில் இருந்த மாணவரையும், அவரது பெற்றோரையும் தாக்கிவிட்டு, காரையும் சேதப்படுத்தியதோடு, மாணவியை அழைத்துக் கொண்டு கழுகூர், உடையாப்பட்டிக்குச் சென்றுவிட்டனர். தாக்குதல் சம்பவம் குறித்து, தோகைமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்" என்று தினமணியின் அந்தச் செய்தி கூறுகிறது.
சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் "சிறி தலதா வழிபாடு" 18ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு, 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொள்ள உள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
அந்தச் செய்தியின்படி, "வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள எதிர்பார்ப்பதோடு, அவர்கள் கொழும்பில் இருந்து சிறப்புப் புகையிரதம் மூலம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி தேரர்களின் அனுசாசனையுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட 'சிறி தலதா வழிபாடு' நாளை முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும்."
மேலும், ஆரம்ப நாளான 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, பக்தர்களுக்கு "தலதா" புனித தந்த தாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், 19ஆம் தேதி சனிக்கிழமை முதல் தினசரி பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு