ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றார் துரை வைகோ.!
Seithipunal Tamil April 21, 2025 06:48 AM

தமிழகத்தின் பிரதான கட்சியான மதிமுகவின் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுடனான மோதல் காரணமாக, கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிவித்தார். துரை வைகோவின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில், மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 40 மாவட்டச் செயலாளர்கள் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

மதிமுகவில் அமைப்புரீதியாக மொத்தம் 66 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் 40 மாவட்டச் செயலாளர்கள், துரை வைகோ பொறுப்பில் இருந்து விலகக்கூடாது என்று பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுமாறு ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பேசியுள்ளார். இதையடுத்து தனது ராஜினாமாவை துரை வைகோ திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நிர்வாகிகளின் வலியுறுத்தல் காரணமாக துரை வைகோ ராஜினாமாவை வாபஸ் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக துரை வைகோவின் பதவி விலகலை தலைமை ஏற்காத நிலையில், மதிமுக தீர்மான அறிக்கையில் முதன்மை செயலாளர் துரை வைகோ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.