தூத்துக்குடி: மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற கும்பல்; கண்டித்த கப்பல் மாலுமி கொலை
Vikatan April 21, 2025 05:48 PM

தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் மரடோனா. கப்பல் மாலுமியான  இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கப்பலில் இருந்து விடுமுறைக்காக வந்தவர் வீட்டில் இருந்துள்ளார்.   இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு மரடோனா திரேஸ்புரம் பஜாரில் நின்று கொண்டிருந்த போது அங்கு மது போதையில் அதேபகுதியைச் சேர்ந்த மதன்குமார் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட கும்பல் வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

உயிரிழந்த கப்பல் மாலுமி மரடோனா

இதை மரடோனா தட்டி கேட்டதுடன் மெதுவாகச் செல்லுமாறு அறிவுரை கூறியுள்ளாராம்.  இதனைத்தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் திரேஸ்புரம் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த மரடோனாவை மதன்குமார் தலைமையிலான 3 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் அவருக்கு தலை, கை, கால் மற்றும் தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த மரடோனாவை  மீட்டு அருகில் இருந்தவர்கள் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் விருதுநகர் அருகே வைத்து மரடோனா பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் நடந்த கடற்கரை

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மதன்குமார் உள்ளிட்ட கும்பலை  வடபாகம் காவல்துறையினர் தேடி வருகின்றனர் . தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.