அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என மதுரை மாநகர அதிமுக மகளிரணி சார்பாக செல்லூர் 60 அடி சாலை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, வளர்மதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, “மக்கள், நீதிமன்றம் கண்டித்த பின்னரும் அமைச்சர் பொன்முடி மீது முதலமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்முடியின் பேச்சை ரசித்து ஆதரிக்கிறார் என நினைக்கிறேன். மன்னிப்பு கேட்டால் போதுமா..? மக்களின் நலன் கருதி அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கி கைது செய்ய வேண்டும்.. இல்லையென்றால் போராட்டம் தொடரும்" என பேசினார்.