அரைசதம் அடித்த துபே, அதிரடி காட்டிய அறிமுக வீரர் - வெல்லுமா சிஎஸ்கே?
BBC Tamil April 21, 2025 08:48 PM
Getty Images 15 பந்துகளில் 32 ரன்கள் குவித்த அயூஷின் விக்கெட்டை தீபக் சஹர் வீழ்த்தினார்.

2025 ஐபிஎல்லில் தொடர்ச்சியான தோல்விகளில் இருந்து மீண்ட சென்னை அணி, மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்து 10 ஓவர்களில் 70 ரன்களை கடந்தது.

'ஐபிஎல்-இன் எல் கிளாசிகோ' என்று வர்ணிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான லீக் ஆட்டம் மும்பையில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

துவக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ஷேக் ரஷீத் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய தீபக் சஹர், நான்கு டாட் பந்துகளுடன் இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

நிதானமாக ஆடிய துவக்க ஆட்டக்காரர்கள், மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில்தான் முதல் பவுண்டரியை அடித்தனர். ஆனால் நான்காவது ஓவரின் முதல் பந்திலே சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அஷ்வினி குமார் வீசிய பந்தில், ரச்சின் ரவீந்திரா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிர்ச்சியடைந்த சென்னை ரசிகர்களுக்கு, அடுத்து களமிறங்கிய அயூஷ் மாத்ரே வாணவேடிக்கை காட்டினார். அதே நான்காவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸ் அடித்து அசத்தினார் அயூஷ்.

ஐந்தாவது ஓவரிலும் ஒரு பவுண்டரி அடித்து அதிரடியை தொடர்ந்தார் அவர்.

Getty Images

அயூஷின் இன்றைய ஆட்டம் அசத்தலாக இருக்கப் போகிறது என சென்னை ரசிகர்கள் நம்பும் அளவுக்கு, ஏழாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். ஆனால், அவரது அசத்தலான ஆட்டம் ஏழாவது ஓவரின் கடைசி பந்தில் முடிவுக்கு வந்தது.

15 பந்துகளில் 32 ரன்கள் குவித்த அயூஷின் விக்கெட்டையும் தீபக் சஹர் வீழ்த்தினார்.

மறுபக்கம், தொடக்கம் முதலே பொறுமையாக ஆடிவந்த ஷேக் ரஷீத், எட்டாவது ஓவரில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 20 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து, சான்ட்னரின் பந்தில் ரியான் ரிக்கல்டன் ஸ்டம்பிங் செய்ததால் ஆட்டமிழந்தார்.

இந்த சூழலில் ஷிவம் துபேவும், ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர்.

ஒன்பதாவது ஓவரை அருமையாக வீசிய பும்ரா, பெரிய ஹிட்டர்கள் களத்தில் இருந்தபோதிலும் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பத்தாவது ஓவரிலும் பவுண்டரிகள் எதுவும் சென்னை அணிக்கு கிடைக்காத நிலையில், 70 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலை ஏற்பட்டது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியுஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.