'கரகாட்டக்காரன்' கார் போல் அரசு பேருந்து சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் அதிர்ச்சி..!

ராமராஜன் நடித்த 'கரகாட்டக்காரன்' என்ற திரைப்படத்தில் காரின் சக்கரம் கழண்டு சாலையில் ஓடுவது போல், அரசு பேருந்தின் சக்கரம் கழன்று தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய சம்பவம், கள்ளக்குறிச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் இருந்து நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று 22 பயணிகளுடன் கடலூர் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை தனசேகரன் என்ற டிரைவர் ஓட்டி சென்றார்.
இந்த நிலையில், பேருந்து ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென பஸ்ஸின் முன்பக்க சக்கரம் கழண்டு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். ஆனால் பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்து, தரையில் தேய்ந்த படி ஓடி நின்றது.
கழன்று ஓடிய சக்கரம் சுமார் 100 அடி தூரத்தில் சாலை பள்ளத்தில் விழுந்தது. அந்த நேரத்தில் சாலையில் யாரும் இல்லை என்பதால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனை அடுத்து, பயணிகள் அனைவரையும் வேறு ஒரு பேருந்தில் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran