உங்க கையில் இருக்கும் ரூ.500 நோட்டு நல்ல நோட்டா..கள்ள நோட்டா.. கண்டுபிடிக்க ஈசி வழி இதோ..!
Newstm Tamil April 22, 2025 01:48 PM

ரூபாய் நோட்டுகளைப் பொறுத்தவரையில், கள்ள நோட்டுப் புழக்கம் இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக உயர் மதிப்பு கொண்ட நோட்டுகள் தான் அதிகளவில் கள்ள நோட்டுகளாக புழக்கத்தில் விடப்படுகின்றன. அவற்றுக்கு எதிராக இந்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து நவடிக்கை எடுத்து வருகின்றன. கள்ள நோட்டுகளைக் கண்டுபிடிப்பது எப்படி என்ற வழிமுறையையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. போலி நோட்டுகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, சந்தையில் சுற்றி வரும் போலி 500 ரூபாய் நோட்டுகள் கண்டுகொள்ளப்படாமல் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களைச் சென்றடைகின்றன. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் கூட இந்த போலி நோட்டுகளை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சாமானிய மக்கள் இந்த போலி நோட்டுகளை எப்படி அடையாளம் கண்டுகொள்வது? எனவே, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றி கள்ள நோட்டுகளைக் கண்டுபிடித்துவிடலாம்.

போலி நோட்டை அடையாளம் காண உண்மையான நோட்டின் அம்சங்களைப் பற்றிய சரியான தகவல்களை வைத்திருப்பது முக்கியம்.ரூபாய் நோட்டில் உள்ள 500 என்ற எண் வெளிப்படையானது.

ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டில் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட எண் "500" இருக்கும்.

நோட்டின் பின்புறத்தில் வரலாற்று நினைவுச்சின்னமான செங்கோட்டை அச்சிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கீழே ஸ்வச் பாரத் அபியானின் லோகோ இருக்கும்.

ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்து இருக்கும்.

இந்தியில் பாரத் என்றும் ஆங்கிலத்தில் இந்தியா என்றும் எழுதப்பட்டிருக்கும்.

காந்தியின் உருவம், ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னம், ரிசர்வ் வங்கி ஆளுனரின் கையெழுத்து ஆகியவை இடம் பெற்றிருக்கும். அவற்றை தடவி பார்த்தால் உணரும் வகையில் இருக்கும். அதோடு காந்தியின் உருவப்படம் வலது பக்க மையத்தில் இருக்கும். 500 ரூபாய் நோட்டினை மடித்தால் அது பச்சை நிறத்தில் இருந்து இன்டிகோ கலராக மாறும்.

இதேபோல 500 ரூபாய் என்று எழுத்தால் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களும் பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறும். ரூபாய் தாளின் வலது பக்கத்தில் அரை வட்டமான இடத்தில் 500 ரூபாய் என்று எழுதப்பட்டிருக்கும். ரூபாய் தாளின் வலது பக்கத்தில் அசோகத் தூண் இருக்கும்.

மேலும் ரூபாய் நோட்டின் மையப்பகுதியில் 500 ரூபாய் என்று இருக்கும். இதனை வெளிச்சத்தில் காணலாம். இது ஒளிபுகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டின் வலது கீழ் பகுதியில் எண்கள் இருக்கும். இது சிறியதில் இருந்து பெரியதாக செல்லும். அதே போல மையப்பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் படத்தின் அருகில் மிகச் சிறிய எழுத்துகளில் ஆர்பிஐ மற்றும் 500 போன்றவை உள்ளன. மகாத்மா காந்தியின் புகைப்படம் மற்றும் 500 என்பது வாட்டர் மார்க்கும் அச்சிடப்பட்டுள்ளது.

கண் பார்வை திறன் குறைவாக இருப்பவர்களுக்கு ஏற்ப, ரூபாய் நோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் ஐந்து கோடுகளும், வலது புறத்தில் கிடைமட்ட செவ்வகமாக 500 ரூபாய் எனவும் இருக்கும். இந்த நோட்டின் அளவு 66mm *150 mm - ல் இருக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்களில் சிறிய வித்தியாசம் இருந்தாலும், அந்த நோட்டு உண்மையானது அல்ல என்பதை அடையாளம் காணுமாறு பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.