வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இத்தாலியின் கேப்ரி ஐலண்ட் அழகிய சிறு தீவு. அருகிலுள்ள நகரந்தான் சொரண்டோ. சொரண்டோவில் நாம் தங்கியிருந்த வீடு கடலுக்கு மிக அருகில். அந்த வீட்டுக்கு அடுத்தாற்போல் ஒரு வீடு. அதனையொட்டிச் சில ஆரஞ்சு மரங்கள். அடுத்து கடல்தான்!கடலுக்குள்ளே மிதக்கும் பெரும் கப்பலைப் போல்தான் கேப்ரி தீவும்! அந்த வீட்டிலிருந்து பார்க்கும் தொலைவில்தான் அந்தத் தீவு! ‘கேப்மாரி’ தீவு இல்லைங்க! கேப்ரி தீவு!
இரண்டு மூன்று நாட்கள் அந்த வீட்டில் தங்கியிருந்ததால், மாலை அல்லது முன்னிரவில் வீடு திரும்பியதும் கேப்ரி தீவின் விளக்குகள் எங்கள் கவனத்தை ஈர்க்கும்!
வண்ண விளக்குகள் அணி வகுத்து நிற்பதையும், அவை கண் சிமிட்டுவதையும் பார்க்கும்போது, ஏதோ அவை அழைப்பதைப் போல மனதில் ஒரு பிரமை பிறக்கும்!
எனவே கேப்ரி தீவைப் பார்க்கும் எண்ணம் வெகுவாக உள்ளுக்குள்ளே வளர்ந்து விட்டது!
தனியாக வீடு எடுத்துத் தங்குவதில் பல அனுகூலங்களும் உண்டு; சில அவஸ்தைகளும் உண்டு. இது மாதிரியான, நகரின் ஒதுக்குப் புறமான வீடுகளில் தங்கி, இயற்கையை முழுதாக அனுபவிக்க வேண்டுமானால், நம்மிடம் கார் இருக்க வேண்டும்.
நாமே அதனை ஓட்டவும் வேண்டும். உள்ளூர் மொழியை ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்! ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மதிப்பு என்பதெல்லாம் நம் நாட்டில்தான்!ஐரோப்பிய நாடுகளில் அவரவர் தாய் மொழிக்கே தலைமையிடம்!
வீடுகளை செலக்ட் செய்வதிலும் நமக்குத் தேர்ச்சி இருக்க வேண்டும். இவையெல்லாம் இருந்தால் இயற்கை அழகை இம்மியும் பிசகாமல் அனுபவிக்கலாம். இப்படிப்பட்ட வசதிகளை பெருமளவில் டூர் அழைத்துச் செல்லும் நிறுவனங்களிடம் நாம் எதிர்பார்க்க முடியாது.
அவர்கள் அட்டவணைப்படி அழைத்துச் சென்று இடங்களைக் காண்பிப்பார்கள்.
பெரும் ஹோட்டல்களில் தங்க வைப்பார்கள். ஓரிடத்தைப் பார்ப்பதற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை வரையறை செய்து விடுவார்கள்.
நாமாகச் செல்லும்போது நமக்கு விருப்பமான இடத்தில் நம் இஷ்டப்படி இருந்து வரலாம். அதற்காக அந்நிறுவனங்களை நான் குறை கூறவில்லை. அவர்களால் அப்படித்தான் செய்ய இயலும்.
உதாரணமாக, நான் திருச்சி கல்லூரியில் படிக்கும்போதே பழனி மலை சென்று வந்தேன். ஆனால் எனது ம.செ.ஆ.துறையில் பணியாற்றியபோது, ஓர் ஆய்வுக்காகப் பழனிப் பகுதியில் களப்பணி மேற்கொண்ட போதுதான், பழனி மலையின் முழு அழகையும் பலவிதங்களிலும், பல கோணங்களிலும் ரசிக்க முடிந்தது. இரண்டு மூன்று நாட்கள் அங்கு தங்கி களப்பணி மேற்கொண்டதாலேயே இது சாத்தியமாயிற்று. ஓ! கேப்ரி தீவிலிருந்து பழனிக்குத் தாவி விட்டோமோ!
சொரண்டோவில் நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து, தீவுக்குச் செல்லும் ஃபெரி சர்வீஸ் துறைமுகத்திற்கு 20 நிமிடக் கார் பயணந்தான்.
காலையில் வீட்டிலேயே டிபனை முடித்து விட்டுக் கிளம்பி, ஃபெரி துறைமுகத்தை அடைந்தோம். ஏற்கெனவே ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து விட்டதால், அங்கு சென்றதும் எங்கள் கைகளில் ஒரு பச்சை வண்ண பேண்டைக் கட்டி விட்டார்கள்.
பல வண்ணங்களிலும் பேண்ட் வைத்திருந்தார்கள். அந்த வண்ணத்தை வைத்தே நாம் எந்த ஃபெரியில் செல்ல வேண்டுமென்பதை நிர்ணயிக்கிறார்கள். நம்மூரில், கல்யாணத்துக்கு முன்பும்,எங்களூர் திரௌபதியம்மன் கோயிலில் தீ மிதிப்பதற்கு முன்பும் கையில் காப்பு கட்டிக் கொண்டது ஞாபகத்திற்கு வந்தது!
பேண்ட் என்பது காப்புதானே! சில நிமிடங்களிலேயே எங்களையழைத்து ஃபெரியில் ஏறச் செய்தார்கள்.ஒரு ஃபெரிக்கு 15-20 பேர் மட்டுமே. சிலர் ஃபெரியின் முன் பகுதிக்குச் சென்று மேல் தளத்திலேயே அமர்ந்து கொண்டார்கள். நாங்கள் குழந்தையுடன் இருந்ததால் பின்னாலேயே அமர்ந்து கொண்டோம்.
அது புறப்பட்டதும் எல்லோர் முகத்திலும் ஓர் ஆனந்தம்! ஒரு பத்து நிமிடப் பயணத்திற்குள்ளாகவே, முன்பாக அமர்ந்திருந்த பலரும் எழும்பிப் பின்னால் வந்து விட்டார்கள்.
கடல் அலையில் எல்லோரும் தொப்பலாக நனைந்திருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் டைரேனியன் கடல் அலைகளுக்கு ஓர் உற்சாகம் வந்து விட்டது போலும். எனவே மேலெழும்பிக் குத்தாட்டம் போட்டதாகத் தோன்றியது. அன்று அலைகள் சற்று ஆக்ரோஷமாக இருப்பதாகவே படகில் எங்களுடன் பயணஞ்செய்த கைடு கூறினார்.
சூரியனின் ஒளிக் கதிர்கள் நீருக்குள் ஊடுருவி ஜாலம் காட்டுகின்றன! ஆனால் நாங்கள் சென்ற அன்று, கதிரவன் எங்களுக்கு அதிகக் கருணை காட்டவில்லை. சில நிமிடங்களே கருணை நீடித்தது! சிலவற்றுக்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்பார்கள்.
பணி நிமித்தம் பயிற்சிக்காக ஊட்டி சென்றிருந்தபோது, அவர்கள் ஒருநாள் கூடலூர் புலிகள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது எங்களிடம் பேசிய வன அதிகாரி, ’புலிகள் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு வந்து புலியைக் காட்டு’ என்று எங்களை நிர்ப்பந்தம் செய்து விடாதீர்கள். ஏனெனில் இது வண்டலூர் போல அல்ல.’ என்று விளையாட்டாகச் சொன்னார்.
மேலும், ’எங்கள் கண்ணிலேயே எப்போதாவதுதான் படும்’ என்றும் கூறினார். எங்கள் ஜீப் உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே சாலையைக் கடந்து முழு தரிசனம் தந்தது.
புலி! அதனைக் கண்டதும் ஜீப்பை நிறுத்தி விட்டு சிறிது நேரம் அதனையே பார்த்தோம். அது சாவகாசமாக நடந்து சென்று மரங்களுக்குள் மறைந்து போனது! மாலை, மீண்டும் எங்களைச் சந்தித்த வன அதிகாரி, நாங்களெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் என்று புகழ்ந்து தள்ளியது மனதில் நிழலாடியது.
குகைகளைப் பார்த்து விட்டுக் கொஞ்ச நேரம் பயணம் செய்ததும், ஓரிடத்தில் ஃபெரியை நிறுத்தி, ’விருப்பப் பட்டவர்கள் கடலில் நீந்தலாம்-15 நிமிடங்களுக்கு’ என்றார்கள். அந்த இடத்தில் கடல்,ஏரியைப்போல் அமைதி காத்தது, அதிக அலைகளின்றி.
இதற்கெனவே தயாராக ‘ஸ்விம் சூட்’ டில் இருந்த இரண்டு, மூன்று பெண்கள் கடலில் குதித்து நீந்த ஆரம்பித்து விட்டார்கள். மற்றவர்கள்,அவர்களையும், கடலையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.
மீண்டும் தொடர்ந்த பயணம், பாறைகளால் அமைக்கப்பட்ட பாலம் போல் இருந்த இடைவெளியில் புகுந்து சென்றது! நம்மூரில், படகுகள் அங்குள்ள உயர்ந்த பாலங்களுக்கு அடியில் செல்வதைப் போல இருந்தாலும், இதில் ஒரு ‘த்ரில்’ இருந்தது.
அப்படியே மெல்ல வலதில் திரும்பி பயணிக்க, தீவின் மேலே உள்ள கட்டடங்களையும், ஆங்காங்கே நிமிர்ந்து நிற்கும் பாறைகளையும் ரசித்தபடி சென்றோம்.
தீவின் முடிவு நெருங்க, மீண்டும் வலதில் திரும்பிப் பயணிக்க, இந்தப் பகுதியில் பாறைகள் ஏதுமின்றி கடல் அலைகளுடன் ஆட்டம் போட, இறுதியாக, தீவின் முகப்புப் பகுதிக்கு வந்தோம். இயற்கைதான் எவ்வளவு சித்து விளையாட்டு காட்டுகிறது!
அப்பப்பா! படகுகளில் இத்தனை வகைகளா? என்று நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் வண்ணம், பெரிதும்- சிறிதுமாய், நீளமும் அகலமுமாய், கூரைகளுடனும் கூரைகள் இல்லாததுமாய் அத்தனை விதங்கள்! அவ்வளவு ரகங்கள்! அவற்றைக் கடந்து நம் ஃபெரி கரையை அடைய, அனைவரும் சிரமமின்றி இறங்க உதவிய ஃபெரிகாரர்கள் மாலை 5 மணிக்குள் மீண்டும் வந்து விட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொண்டார்கள்.
ஒரு புது உலகத்துக்குள் வந்து விட்டது போன்ற உணர்வு மேலோங்கியது.
கடற்கரையிலேயே பேரூந்துகள், டாக்சி என்று களைகட்ட, சாலைகள் மெல்ல மேலே செல்கின்றன. மேலே நகருக்குள் செல்ல இருந்த சுரங்கப்பாதை, அன்று ‘மெயின்டனன்ஸ்’ கருதி மூடப்பட்டிருந்தது.
எல்லாம் நம்ம ராசி! உள்ளே, முக்கிய இடத்தில் பேரூந்து ‘டெர்மினஸ்’ இருக்கிறது. பேரூந்துகள் அனைத்தும் நம் மினி பேரூந்துகள் சைஸில்தான். சுற்றிலும் கடைகளும், உணவகங்களும் நிறைய உள்ளன.
தீவிலேயே நிரந்தரமாக வசிப்பவர்களுக்கான வீடுகளும், அவர்களின் குழந்தைகளுக்கான கல்விக் கூடங்களும் உள்ளன.
ஒரு டாக்சியில் ஏறி, நகரை ரசித்தபடியே,’விஞ்ச்’ செயல்படும் பகுதிக்குச் சென்றோம்.
டிக்கெட் வாங்கிக் கொண்டு ஒரு ப்ளாட் பாரம் போன்ற பகுதிக்குச் சென்றோம். தனியான ‘சேர்’ போன்ற சீட்டில் அமர வைத்து, ஒரு பெல்டையும் போட்டு விடுகிறார்கள். அப்படியே நாம் அமர்ந்திருக்கும் சீட்மெல்ல மேலுள்ள கம்பியில் நகர்ந்து செல்கிறது. சில நிமிடங்களுக்கு உள்ளுக்குள் பயம் இருந்தாலும், அப்புறம் பழகி விடுகிறது.
சுற்றிலும் உள்ள கட்டடங்களையும், மரங்களையும் ரசித்தபடி மெல்ல மேலே ஏறுகிறது நமது சீட். உயரம் கூடக்கூட, தீவும், சுற்றியுள்ள கடலும் நம் கண்களுக்கு விருந்தாகின்றன. நம்மைப் பொறுத்தவரை, அவ்வாறு மேலே சென்ற போது பக்கவாட்டில் தெரிந்த கல்லறைப் பகுதி மிகுதியும் கவர்ந்தது.
ஒவ்வொருவரின் கல்லறை மேலும் வைக்கப்பட்டிருந்த வண்ண மலர்கள், மேலிருந்து பார்க்கையில் மிகவும் ரம்மியமாகக் காட்சி தந்தன. அங்குள்ள சீதோஷ்ண நிலையும் அதற்கு முக்கியக் காரணமென்பது புரிந்தது. ஐரோப்பிய நாடுகளில், பறிக்கப்பட்ட மலர்கள் நான்கைந்து நாட்களான பிறகும் கூட அன்று பூத்த பூக்களாகவே காட்சியளிக்கின்றன.
கைகேயியின் சூழ்ச்சியால் ராமன் கானகம் செல்ல நேரிட, அதனை அவளே, தயரதச்சக்கரவர்த்தி கூறியதாகக் கூறியபோது,’ அப்பா சொல்லணுமா? நீங்க சொன்னாலே போதுமே சித்தி! இதோ இப்பொழுதே கிளம்புகிறேன்!’ என்று கூறி ராமன் கிளம்பியபோது, அவரின் முகம் அன்றலர்ந்த தாமரை மலரை ஒத்திருந்தது என்று கம்பர் கூறியது சிந்தனையில் நிழலாடியது.
அந்த தனி நபர் விஞ்ச் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேலாக ஓடிக் கொண்டேயிருக்க, நாம் தீவின் உச்சிக்கும், ஓர் ஓரத்திற்கும் வந்து விடுகிறோம்.
அங்கு இறங்கி, மேலுள்ள அகண்ட பரப்பில் அங்குமிங்கும் நடந்து, சுற்றியிருக்கும் கடலைக் கண்டு மகிழ்கிறோம். பக்கத்திலேயே ரெஸ்டாரெண்ட் ஒன்று இயங்குகிறது, படிகளில் கீழே இறங்கினால் ஆண்களுக்கும், பெண்களுக்குமான தனித்தனி கழிவறைகள் உள்ளன. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இயற்கை உபாதைகளைக் கழிக்க எப்பொழுதும் சிரமமே கிடையாது.
தூய்மையை விரும்பும் நாம் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
போதுமான கழிவறைகளை மக்கள் கூடும் இடங்களில் அமைத்து அவற்றை ஒழுங்காகப் பராமரித்தலே நாட்டைத் தூயமையாக்கும் பணியாகும். ஆள்பவர்கள் இதில் அதிகச் சிரத்தை காட்ட வேண்டும்.
நாங்களும் பர்கரும், ட்ரிங்க்சும் வாங்கிக் கொண்டு, ஒரு பெஞ்சில் அமர்ந்து வானத்தையும் வண்ணக் கடலையும், தீவைச் சுற்றி வரும் படகுகளையும் கண்டு களித்தபடி அவற்றைச் சுவைத்தோம். அந்தப் பகுதியில் நாம் இருக்க எந்தக் கட்டுப்பாடும், கால அளவும் நிர்ணயிக்கப்படவில்லை. மாலை விஞ்ச் சர்வீஸ் நிறுத்தப் படுவதற்கு முன்னால் இறங்கினாலே போதுமானது. அது வரை சர்வீஸ் தொடர்ந்து கொண்டே இருந்தது.
தூரத்தில் தெரியும் சொரண்டோவையும், நாங்கள் தங்கியிருந்த வீட்டுப் பகுதியையும் மீண்டும் ஒரு முறை கூர்ந்து நோக்கி விட்டு, அங்கிருந்து கிளம்பத் தயாரானோம். விஞ்ச் நிற்கும் பகுதிக்கு வந்து, கியூவில் சில நிமிடங்கள் நின்ற பிறகு, கிளம்பிய விஞ்ச் மெல்ல, மெல்ல உயரத்தைக் குறைத்துக் கொண்டே வந்தது. வரும் வழியில் கீழே பூனையொன்று நடந்து போய்க் கொண்டிருந்தது, எனது பேரன் வித்யூத் சொல்வதைப் போல, மைன்ட் போட்டோவாகி விட்டது.
அங்கிருந்து கிளம்பி டெர்மினஸ் வந்து, அங்குள்ள கடைகளில் ஏறி இறங்கினோம். ஆடைகள், கைப் பைகள் என்று எங்கும் உள்ளதைப் போல் அங்கும் கடைகளில் நிறையவே இருந்தன. சிறியவர்களுக்கான ‘ டாய்ஸ்’ நிறைய உண்டு.
ஒன்றிரண்டு வாங்கிய பிறகு ஃபெரி துறைமுகம் திரும்பினோம். எங்கள் ஃபெரி புறப்படத் தயாராக இருந்தது.
எங்களுக்காக வெயிட் செய்ததாக கைடு கூறிக் கொண்டே, நாங்கள் உள்ளே வர உதவினார்.
ஃபெரி, துறைமுகத்தைத் தாண்டி வேகமெடுத்தது. அடுத்த அரை மணி நேரத்தில், சொரண்டோவில் நாங்கள் காலையில் ஏறிய இடத்திலேயே கொண்டு வந்து இறக்கி விட்டார்கள்.
அங்கிருந்து கிளம்பி வீட்டை அடைந்து, மிளகு ரசம், சாதம் செய்து, சிப்ஸ் சகிதம் இரவு உணவை முடித்தோம். குளிருக்கு மிளகு ரசமும், சிப்ஸும், சூடான சாதமும் தந்த திருப்தியே அலாதி!
கேப்ரி தீவில் தங்குவதற்கு ஸ்டார் ஹோட்டல்கள் உண்டென்றாலும், அவை அதிகக் கட்டணமுள்ளவை. நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்குக் கட்டுபடி ஆவது கடினம்.
மேலும், தீவின் உள்ளே உள்ளதைக் காட்டிலும், தீவைச் சுற்றியுள்ள பாறைகளும், குகைகளுந்தான் பயணிகளை அதிகமாகக் கவர்பவை. எனவே,சொரண்டோவில் தங்கி ஃபெரியில் பயணித்துச் சென்று வருவதே சிக்கனமாகும்.
தனி ஃபெரியை வாடகைக்கு எடுத்துக் கொண்டும் செல்லலாம். அதுவும் அதிகச் செலவுக்கே வழி வகுக்கும். குறைவான செலவில் அதிகமான இடங்களைப் பார்ப்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும். அவ்வாறு செய்ய வேண்டுமானால் கூடுமானவரை பொது போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்வதும், நமது பொருளாதாரத்திற்கு ஏற்ற ஹோட்டல்களையும், உணவகங்களையும் தேர்ந்து கொள்வதுமே சிறப்பாகும்.
எங்கள் பயணங்களில் கூடுமானவரை இவற்றைக் கடைப் பிடிக்கிறோம்.
சுற்றுலா செல்லுங்கள்! சுகத்தை அனுபவியுங்கள்! இயற்கை, கடல்களிலும், மலைகளிலும்,தீவுகளிலும் பேரழகை அள்ளித் தெளித்து வைத்திருக்கிறது. இப்பொழுதுள்ள விஞ்ஞான முன்னேற்றங்கள் அவற்றைக்கண்டு களிக்கும் வரப்பிரசாதத்தை நமக்கு வழங்கி இருக்கின்றன. புதுப் புது இடங்களைக் காண்கையில் நமக்கு உற்சாகமும் உள்ள எழுச்சியும் ஏற்படுகின்றன. உற்சாகமும் அமைதியுந்தானே வாழ்வின் முக்கியக் குறிக்கோள்!
-பெருமழை விஜய்,
கூடுவாஞ்சேரி
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரைஇனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.