மும்பை: நீதிமன்ற உத்தரவுக்கு முன் ஜெயின் கோயிலை இடித்த மாநகராட்சி; மக்கள் போராட்டம்; பின்னணி என்ன?
Vikatan April 22, 2025 11:48 PM

மும்பை விலே பார்லே பகுதியில் கடந்த வாரம் 35 ஆண்டு பழமையான ஜெயின் கோயிலை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது.

அதுவும் அக்கோயில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இல்லை. 90 ஆண்டு பழமையான பங்களாவிற்குள் இருந்தது.

மும்பை மாநகராட்சி சட்டப்படி 1962ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டப்பூர்வமானவையாகும்.

இந்த ஜெயின் கோயிலைச் சட்டப்பூர்வமானதாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து கோயிலை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது. மாநகராட்சியின் இடிப்பு நடவடிக்கையை எதிர்த்து ஜெயின் கோயில் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

பொதுமக்கள் போராட்டம்

2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி முதல் முறையாக மாநகராட்சி நிர்வாகம் இக்கோயிலை இடிக்க முயன்றது. அதன் பிறகு 2022 டிசம்பர், 2024 டிசம்பர், 2025 ஜனவரி 3, ஜனவரி 22, ஜனவரி 27, பிப்ரவரி 3, பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் கோயிலை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது.

ஆனால் ஒவ்வொரு முறையும் அரசியல் தலையீடு, காவல்துறை பாதுகாப்பு கொடுக்க தாமதம், மாநகராட்சி ஊழியர்கள் பற்றாக்குறை என எதாவது ஒரு காரணத்தால் இடிக்க முடியாமல் போனது. இறுதியாகக் கடந்த 16ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வர இருந்தது.

உடனே சுதாரித்துக்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் அன்று காலையில் பலத்த பாதுகாப்புடன் வந்து கோயிலை இடிக்க ஆரம்பித்தனர்.

வழக்கு விசாரணை மதியம் மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதற்குள் பெரும்பாலான பகுதி இடிக்கப்பட்டுவிட்டது.

மும்பை உயர் நீதிமன்றம் கோயிலை இடிக்கத் தடை விதித்து உத்தரவிட்டது.

மகாராஷ்டிரா பா.ஜ.க மும்பை மாவட்ட பொறுப்பு அமைச்சர் பி.லோதா கோயில் இடிக்கப்பட்டதால் மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டார்.

சிவசேனா எம்.பி. மிலிந்த் தியோரா இது குறித்து அளித்த பேட்டியில், 'வழக்கு நிலுவையில் இருக்கும்போது கோயில் இடிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என்றும் எதிர்பாராதது என்றும் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் போராட்டம்

ஆதித்ய தாக்கரே இது குறித்து அளித்த பேட்டியில், ''மும்பை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? மாநகராட்சி நிர்வாகம் அவர்களால் ஆளப்படுகிறது.

அந்த மாநகராட்சிதான் கோயிலை இடித்து ஜெயின் சமுதாய மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி இருக்கிறது. ஆனால் மாவட்ட பொறுப்பு அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கோயில் இடிக்கப்பட்டதை எதிர்த்து அப்பகுதி மக்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி உதவி கமிஷனர் ஸ்வப்னஜா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.