ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகில் உள்ள ஜெகத்புரா பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் சுமித், குடும்ப பிரச்னையில் தனது மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டு தற்கொலை செய்வதற்காக புறப்பட்டுச் சென்றார். அவர் அங்குள்ள ரயில்வே கிராஸிங்கில் அமர்ந்து கொண்டு தனது உறவினர் ஒருவருக்கு வீடியோ கால் செய்து, தான் அமர்ந்திருந்த இடத்தை காட்டி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். மேற்கொண்டு தகவல்களை கேட்டு பெறுவதற்குள் சுமித் போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து அந்த நபர் இது குறித்து சுமித்தின் 15 வயது மகள் நிஷா மற்றும் சுமித்தின் அண்ணன் கணேஷ் ஆகியோருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார். உடனே அவர்கள் இரண்டு பேரும் ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடினர்.
ரயில்வே கிராஸிங் ஒன்றில் சுமித் அமர்ந்திருப்பதை இருவரும் பார்த்து அவரிடம் சென்றனர். இருவரும் பேசி சமாதானப்படுத்தி ரயில் தண்டவாளத்தில் இருந்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர். ஆனால் சுமித் சம்பவ இடத்தில் இருந்து வர மறுத்தார். ஆனாலும் இருவரும் சேர்ந்து சுமித்தை அங்கிருந்து வரும்படி கேட்டு கெஞ்சினர். அதற்குள் தூரத்தில் ரயில் ஒன்று வந்தது. ரயில் அவர்களை நெருங்கியபோதும்கூட கடைசி முயற்சியாக சுமித்தை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் நிஷாவும், கணேஷும் ஈடுபட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் மீது ஹரித்வார் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிச்சென்றது. இதில் சம்பவ இடத்தில் மூவரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் உடைந்து கிடந்த மொபைல் போனை வைத்து அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.