Pahalgam Attack: "அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும்" - அண்ணாமலை சொல்வதென்ன?
Vikatan April 24, 2025 12:48 AM

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 28 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் நாடு முழுவதிலும் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாத தாக்குதல்கள் குறித்து பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

Pahalgam Attack அரசின் பதிலடி முக்கியம்

அவர், "பிரதமர் சவுதி அரேபியாவில் இருந்தபோது, அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியாவில் இருக்கும்போது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்த தாக்குதலை கண்டிப்பதை விட, நம் அரசு கொடுக்கக் கூடிய பதிலடி மிக முக்கியமானதாக இருக்கும்.

இந்த நேரத்தில் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் ஆக்ரோஷமான பதிவுகளைப் போடுவது தேவையில்லாதது. அரசு என்ன செய்ய வேண்டுமோ அதைத் தகுந்த நேரத்தில் செய்யும்.

காஷ்மீர் காஷ்மீர் செல்லுங்கள்!

மக்கள் அச்சப்பட தேவையில்லை. இந்த நேரத்தில் காஷ்மீர் பயணம் திட்டமிட்டுள்ளவர்கள் நிச்சயமாக செல்ல வேண்டும். ஜூலையில் அமர்நாத் யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் செல்ல வேண்டும்.

இந்த கோழைத்தனமான தாக்குதல்களுக்கு பயந்து நாம் நம்முடைய பணிகளை நிறுத்திவிடக் கூடாது. அவர்களது தவறுக்கு அரசு நிச்சயம் பதிலடி கொடுக்கும்" என்றார்.

அமித் ஷா பதவி விலக வேண்டும்?

தாக்குதலுக்குப் பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் எனக் கூறப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, "அரசியல் பேசுபவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற அன்றே ஒரு தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. அவர்களைப் பொறுத்தவரை (பாகிஸ்தான், ஐ.எஸ்.ஐ.எஸ்) இந்தியாவில் அமைதியைக் குலைக்கவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்களை நடத்துகின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் காஷ்மீரைப் பொறுத்தவரையில் ஆர்டிகள் 370 எடுக்கப்பட்ட பிறகு நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். நம் தலைவர்கள் எல்லோரும் அரசியல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்." என்று பேசியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.