வட மாநிலத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தங்கி சாலையில் கிடக்கும் காகிதம், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பொறுக்கி அதனை கடையில் விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
அதே பிளாட்பாரத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த குமார்(42) என்பவர் தங்கி குப்பை பொறுக்கி பிழைப்பு நடத்தி வருகிறார். மேலும் வடமாநில நபரும்- குமாரும் சேர்ந்து வேலை முடிந்து பின் இருவரும் ஒன்றாக மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சைக்கிளில் டீ விற்பனை செய்து வரும் சேகர் என்பவர் பெரிய மேடு நேரு ஸ்டேடியம் பின்புறத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரத்த காயங்களுடன் கிடப்பதை பார்த்து உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.. தகவலின் பேரில் பெரியமேடு போலீஸார் விரைந்து சென்று காயங்களுடன் மயங்கி கிடந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநில நபர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து வடமாநில வாலிபர் எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உயிரிழந்த நபரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.. இதனை அடுத்து போலீஸார் கொலையுண்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குமாரை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சுற்றி திரிந்த போது பிடித்து வந்து விசாரணை நடத்தியதில் சம்பவத்தன்று வடமாநில வாலிபரும் இவரும் ஒன்றாக மது அருந்தியதும் அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த குமார் இரும்பு ராடால் வடமாநில வாலிபரை அடித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீஸார் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.