குமாரபாளையம் நகர திமுக கோஷ்டி பூசல் காரணமாக கிளை செயலாளர் அலுவலக அறையில் இருந்த தமிழக முதல்வரின் புகைப்படத்தை இளைஞர் அணியைச் சார்ந்த அலெக்ஸ் என்ற நபர் காலால் உதைத்து உடைக்கும் வீடியோ வைரல் ஆனதால் திமுகவினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி பகுதி 33 வார்டுகளை கொண்ட பகுதியாகும். இந்த நகராட்சி பகுதியை குமாரபாளையம் நகர திமுகவினர் வடக்கு தெற்கு என பிரிக்கப்பட்டு இரண்டு நகரச் செயலாளர் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் வடக்கு நகரப் பகுதியில் குமாரபாளையம் நகர மன்ற தலைவர் விஜய கண்ணன் என்பவர் நகர செயலாளர் உள்ளார். இவர் தனது பகுதியில் கட்சியில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வரும் நிர்வாகிகளை நீக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களை இணைப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக குமாரபாளையம் திமுகவில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. கடந்த வாரம் 14 வது வார்டு செயலாளராக உள்ள விஸ்வநாதன் என்பவரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், விஜய கண்ணின் ஆதரவாளர், கிளை செயல்வீரர்கள் கூட்டம் போட்டதால் மோதல் ஏற்பட்டது. இதனை கேட்ட கிளைச்செயலாளர் விஸ்வநாதனை விஜய கண்ணன் ஆதரவாளர்கள் அடித்ததால் காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் வடக்கு நகர செயலாளரும், நகர மன்ற தலைவருமான விஜய கண்ணனின் ஆதரவாளரான அலெக்ஸ் என்ற இளைஞர் அணியை சேர்ந்த இளைஞர், விஸ்வநாதன் அலுவலகத்தில் இருந்த தமிழக முதல்வரின் புகைப்படத்தை காலால் எட்டி உதைத்து உடைக்கும் வீடியோ காட்சி தற்பொழுது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதனுடன், அந்த அலெக்ஸ் என்பவர் விஜய கண்ணனின் தீவிர ஆதரவாளர் என்று கூறுவதுடன், அவருடன் நெருங்கி உள்ள புகைப்படங்களும் தற்பொழுது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவதால், குமாரபாளையம் திமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 14 வது வார்டு கிளை செயலாளர் விஸ்வநாதன் குமாரபாளையத்தில் நிலவிவரும் திமுகவின் அவல நிலையை திமுகவின் நிர்வாகி ஒருவருக்கு அலைபேசியில் மனக்குமுறலுடன் பேசும் ஆடியோவும் தற்பொழுது இணையதளத்தில் பகிரப்பட்டு வருவதால் குமாரபாளையம் நகர திமுகவினர் வருங்காலங்களில் தாங்கள் எவ்வாறு செயல்படுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி தின்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவங்கள் காரணமாக குமாரபாளையம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றன.