புதுவை திப்புராயப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் குடியிருப்புக்கு இலவச பட்டா வழங்க மாவட்ட ஆட்சியருடன் எம்எல்ஏ அனிபால் கென்னடி ஆய்வு செய்தார்.
புதுச்சேரி உப்பளம் தொகுதி திப்புராயப்பேட்டை லாசர் கோவில் வீதியில் உள்ள நிக்கோல் துரியோ குடியிருப்பில், கடந்த 48 ஆண்டுகளாக லெப்ரசி மாற்றுத்திறனாளிகள் சார்ந்த 16 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இன்று வரை பட்டா பெறாமல் உள்ளனர்.
பட்டா வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பொதுமக்கள் உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர். கடந்த 25 ஆண்டுகளாக எந்தவொரு பராமரிப்பும் இல்லாத இந்த குடியிருப்பைச் சுற்றியுள்ள சுமார் 1500 குடும்பங்களும் அதேசமயம் வசித்து வருகின்றனர்.
இதையடுத்து, MLA அனிபால் கென்னடி அவர்கள் நகராட்சி, பொதுப்பணி துறை, கடலோர அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அலுவலகம், தாலுகா அலுவகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு தடையில்லா சான்றிதழ்கள் பெற்று வந்தார்.
சர்வே இயக்குநர் செந்தில் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட மனுவுக்கான பதிலில், இது கடற்கரையிலிருந்து 27.5 மீட்டர் தொலைவில் இருப்பதனால், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பட்டா வழங்க முடியாது எனக் கூறப்பட்டது.இதையடுத்து, மாநில திமுக அமைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சிவா அவர்களுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்த அனிபால் கென்னடி, பொதுமக்களுடன் நேரில் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், நில அளவை இயக்குநர் செந்தில் குமார், நகராட்சி ஆணையர் கந்தசாமி, வட்டாசியர் பிரிதிவி ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடியுடன் இணைந்து அந்த இடத்தை பார்வையிட்டு, மக்களிடம் நேரில் பேசி ஆய்வு செய்தனர்.
இக்குடியிருப்பு பின்புறம் அரசால் கட்டப்பட்ட இரு சாலைகள், சுற்றிலும் வசிக்கும் 1500 குடும்பங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ அனிபால் கென்னடி அவர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.