கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது வரும் மே 6 மற்றும் 7ம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அன்று தெரிவித்தது.
குஜராத் மாநிலம் கோத்ரா அருகே கடந்த 2002 ஆண்டு ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 59 பயணிகள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் குற்றவாளிகளாக 31 பேரை அறிவித்த சிறப்பு நீதிமன்றம் 11 பேருக்கு மரண தண்டனையும், மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோன்று குற்றவாளிகளும் அவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் தண்டனை விவாகரங்கள் குறிப்பிட்டும், தற்போது அவர்கள் தரப்பில் உள்ள வாதங்களை குறிப்பிட்டும் மே மாதம் 3-ம் தேதிக்குள் திருத்தப்பட்ட மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதேபோன்று மாநில அரசு தரப்பில் இது போன்ற விபரங்களுடன் திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் இந்த வழக்கில் இரண்டு வார காலத்துக்கு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது.
எனவே முதல் கட்டமாக மே 6, 7 தேதிகளில் நாள் முழுவதும் இந்த வழக்கு மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அந்த நாளில் வேறு எந்த வழக்குகளும் இந்த அமர்வில் விசாரிக்கப்படாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.