பயங்கரவாதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தான் பயிற்சி அளித்தது உண்மைதான் என அந்நாட்டு அமைச்சர் ஒப்புக் கொண்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று இந்தியா பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வரும் நிலையில், பாகிஸ்தான் அதனை மறுத்து வருகிறது. மேலும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசே ஊக்குவிக்கிறது என்றும், பயிற்சி அளிக்கிறது என்றும் இந்தியா குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் பெஹல்காமில் நடந்த தாக்குதலை அடுத்து, "பயங்கரவாதிகளுக்கு பயிற்சி மற்றும் ஆதரவு என்ற மோசமான வேலையை நாங்கள் செய்தது உண்மைதான். கடந்த 30 ஆண்டுகளாக இதை நாங்கள் அமெரிக்காவுக்காக செய்து வந்தோம். பிரிட்டன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்காகவும் செய்தோம்" என்று பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆசிப் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறு என்றும், இதனால் பாகிஸ்தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் "பெஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் சம்பந்தமில்லை" என்றும் அவர் கூறினார்.
Edited by Siva