ஓசூர் சோதனைச்சாவடியில் கணக்கில் வராத ரூ.2.41 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜுஜுவாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதாக, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்குப் புகார்கள் வந்தன. அந்தப் புகாரின் படி டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீஸார் நேற்று அதிகாலை ஜூஜுவாடி சோதனைச் சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு கணக்கில் வராத ரூ.2.41 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் போலீஸார், அங்கு பணியில் இருந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் உதவியாளர் காயத்ரி மற்றும் ஊழியர்களிடம் பணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.