ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பிறகு பல காணொளிகள் வெளியாகின. அதில் ஒரு வைரல் வீடியோவில் குஜராத்தை சேர்ந்த ஷீதல் கலாதியா இருந்தார். அவரது கணவரான சைலேஷ்பாய் கலாதியாவும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் சிஆர் பாட்டில் அவருடைய குடும்பத்தைக் காண சூரத் சென்றார். அவர் முன்பு ஷீத்தல் கட்டுப்படுத்த முடியாமல் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்.
"உங்களுக்கு நிறைய விஐபி கார்கள் உள்ளன. வரி செலுத்தும் மக்களின் நிலை என்ன? அங்கு எந்த வீரர்களும் மருத்துவக் குழுவும் இல்லை" என்று ஷீதல் தெரிவித்தார்.
ஆங்கில நாளிதழான தி இந்து, இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்த மகாராஷ்டிராவை சேர்ந்தவரான பராஸ் ஜெய்னிடம் பேசியது. இந்தத் தாக்குதல் 25-30 நிமிடங்கள் நீடித்ததாக அவர் தெரிவித்தார். அங்கு எந்த காவல்துறையினரும் ராணுவ வீரர்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார் பராஸ்.
இந்தத் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் (சிஆர்பிஎஃப்) முகாம் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபல்ஸ் பிரிவினரின் முகாம் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்தினரும் நாட்டு மக்களும் மீண்டு வருகின்ற நிலையில், மறுபுறம் இதுகுறித்துப் பல கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
தற்போது வரை இந்தக் கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கவில்லை.
அதில் மிக முக்கியமான கேள்வி, பஹல்காமின் மிகவும் பிரபல சுற்றுலாத் தளமாக இருக்கும் பைசரனில் ஏன் எந்தப் பாதுகாப்பும் இருக்கவில்லை என்பதுதான்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் பாதுகாப்பு சார்ந்த வல்லுநர்களுடன் பேசி இந்தக் கேள்விகளுக்கு விடை காண பிபிசி முயன்றது. வல்லுநர்களின் கருத்துகளைத் தெரிந்து கொள்வோம்.
பைசரனில் ஏன் எந்தப் பாதுகாப்பும் இல்லை?பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தப் பிரபலமான சுற்றுலாத் தளத்தில் ஏன் எந்தப் பாதுகாப்பும் இல்லை என்கிற கேள்விதான் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டு வருகிறது.
பத்திரிகையாளரும் காஷ்மீர் விவகார வல்லுநரான அனுராதா பாசின், ஜம்மு காஷ்மீரில் எப்போதுமே கடுமையான ராணுவ வீரர்களின் இருப்பைப் பார்த்ததாக நினைவு கூர்கிறார்.
"கடந்த 1990களில் இருந்து பாதுகாப்பு இல்லாத எந்தப் பொது இடத்தையும் என்னால் நினைவுகூர முடியவில்லை. எல்லா இடங்களிலும் சில பாதுகாப்பு வீரர்கள் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்க்க முடியும். எனவே இந்த இடத்தில் பாதுகாப்பு இருக்கவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது" என்கிறார் பாசின்.
அவர் மேலும் சில கேள்விகளை எழுப்பினார். தாக்குதல் நடந்த சில மணிநேரங்களில் எவ்வாறு தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்கள் பொதுவெளிக்கு வந்தன? இது மட்டுமில்லை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் மனதை ரணமாக்கும் புகைப்படங்கள் எவ்வாறு பொதுவெளிக்கு வந்தன?
"பாதுகாப்புப் படைகள் அங்கு வந்து சேர்வதற்கு நேரம் ஆனது. ஆனால் ஒரு சில மணிநேரங்களில் தாக்குதல் நடத்தியவரின் புகைப்படங்கள் அவர்களிடம் இருந்தன. எவ்வாறு இந்த முடிவுக்கு வந்தார்கள்? இந்த விசாரணை நம்பகத்தன்மை கொண்டதாகத் தெரியவில்லை. இது போல விசாரணை மீது கேள்வி எழுப்பப்பட்ட பல சம்பவங்கள் இருக்கின்றன. எனக்குள்ள சில கேள்விகள் இவைதான்" என்கிறார் பாசின்.
கடந்த 2019ஆம் ஆண்டில் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகும்கூட காஷ்மீரில் பெரிதாக இல்லையென்றாலும், இதுபோன்ற சம்பவங்கள், நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்கிறார் பாசின். உலகின் மிகவும் ராணுவமயமாக்கப்பட்ட ஓரிடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுதான் பல கேள்விகளையும் எழுப்புவதாகக் கூறுகிறார் பாசின்.
"கடந்த ஐந்து ஆண்டுகளில் சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆயுதப் போராட்டம் முடிந்ததாகச் சொல்ல முடியாது. இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசும்போது பாதுகாப்புத் துறை அதிகாரிகளும்கூட 'கட்டுப்படுத்தப்பட்ட' போன்ற வார்த்தைகளையே பயன்படுத்துகின்றனர்.
ஆயுதப் போராட்டத்தின் 'முடிவு' என்பது போன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவதில்லை. ஆயுதப் போராட்டம் முடிந்தது என்பது ஒரு விதமான அரசியல் பேச்சுதான். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைதி எதுவென்றாலும் அவை ராணுவக் கட்டுப்பாட்டின் மூலமே ஏற்பட்டுள்ளன" என்கிறார் அனுராதா பாசின்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரத் துறையில் பணியாற்றும் பேராசிரியர் அமிதாப் மட்டூ சர்வதேச மோதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வல்லுநரும்கூட.
பாசினின் கேள்விக்குப் பதிலளிக்கையில், "கடந்த சில ஆண்டுகளாக பிரபலமான சுற்றுலாத் தளங்களில் கடுமையான அளவில் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்படுவதைத் தவிர்க்கும் போக்கு உள்ளது" என்றார் அமிதாப்.
மேலும் அவர், "இந்த யுக்தி திறம்பட இருந்தது, ஆனால் மிகவும் வெளிப்படையாக இல்லை. என்ன இருந்தாலும் இது பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தவறு" என்றார்.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் காவல்துறை தலைவர் எஸ்பி வெய்த் பிபிசியிடம் பேசியபோது, "சுற்றுலாப் பயணிகள் தொலைதூரப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதால் காவல்துறையினர் அங்கு நிச்சயம் இருந்திருக்க வேண்டும்" என்றார்.
அங்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருந்திருக்க வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டார். "காவல்துறை அல்லது துணை ராணுவப் படையினர் அங்கு இருந்திருக்க வேண்டும். அவர்கள் இருந்திருந்தால் தீவிரவாதிகளைச் சமாளித்திருப்பார்கள். அதேநேரம் காவல்துறையினர் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதும் உண்மைதான். வளங்களும் குறைவாக உள்ளன. ஆனால் சுற்றுலாப் பயணிகள் தொலைவில் இருக்கும் ஓரிடத்திற்குச் செல்கிறார்கள் என்றால் நிச்சயம் அங்கு காவல்துறையினர் இருந்திருக்க வேண்டும்" என்றார்.
ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலான சதிஷ் துவா நீண்ட காலம் ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்துள்ளார். "அனைத்து உட்புறப் பகுதிகளிலும் ராணுவம் மற்றும் தேசிய ரைஃபல்ஸ் இருக்க முடியாது. அவர்கள் தீவிரவாதிகளைச் சமாளிக்க எல்லைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காவல்துறையைப் பற்றிப் பார்க்கும்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு 120 கிலோமீட்டர் நீளமும் 38 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. எல்லா இடங்களிலும் காவல்துறையினரை பணியில் வைப்பது சாத்தியம் இல்லை" என்றார்.
பஹல்காம் தாக்குதலில் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டது தொடர்பாகவும் கேள்விகள் எழுகின்றன. வேறு எந்தத் தாக்குதலிலும் இல்லாத ஒரு முறையை இப்போது தீவிரவாதிகள் பின்பற்றியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் காவல்துறையினரோ ராணுவ வீரர்களோ அல்லாமல் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டுள்ளார்கள். ஜம்மு காஷ்மீரிலோ அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதியிலோ இவ்வளவு பெரிய அளவில் பொது மக்கள் குறிவைக்கப்படும் சம்பவம், நீண்ட காலம் கழித்து முதல் முறையாக நிகழ்கிறது.
ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதிஷ் துவா இதை விவரமாக விளக்குகிறார்.
"கடந்த ஐந்து ஆண்டுகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள நிலைமை முன்னேறியுள்ளது மற்றும் ஒரு நேர்மறையான மாற்றம் உள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கினர். சுற்றுலாத் துறையும் மிக வேகமாக வளரத் தொடங்கியது. தீவிரவாதிகள் எப்போதும் சுற்றுலாத் தலங்களைக் குறிவைக்க மாட்டார்கள். காஷ்மீரில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே இதுதான் உண்மை.
ஏனென்றால் தீவிரவாதிகள் அவ்வாறு செய்தால் உள்ளூர் காஷ்மீரிகளின் வாழ்வாதாரத்தைக் குறிவைப்பார்கள். அவர்கள் உள்ளூர் மக்களிடம் இருந்து ஆதரவை எதிர்பார்க்கிறார்கள். இது அவர்களின் ஆதரவை முடித்துவிடும். இதனால்தான் உள்ளூர் பகுதிகளில் தீவிரவாதிகள் பொது மக்களைக் குறிவைக்க மாட்டார்கள் என்கிற புரிதல் நமக்கு உள்ளது" என்கிறார் துவா.
"நான் படைத் தளபதியாக இருந்தபோது காஷ்மீருக்கு சுற்றுலா வரலாமா என என்னிடம் கேட்பார்கள். நான் அவர்களிடன் கண்டிப்பாக வாருங்கள். நீங்கள் தால் ஏரிக்கு அருகில் அமரலாம் அல்லது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லலாம். ஏனென்றால் இந்த இடங்களில் எந்தத் தாக்குதல்களும் இல்லை என்றுதான் எப்போதும் கூறுவேன்" என்றார்.
இந்தத் தாக்குதலில் பொதுமக்களைக் குறிவைத்தற்கான காரணம் தொடர்பான கேள்விகளை எழுப்புகிறார் பேராசிரியர் அமிதாப் மட்டூ.
"ஏன் தீவிரவாதக் குழுக்கள் பொதுமக்களைக் குறிவைக்கத் தொடங்கினார்கள்? முன்னர் அவர்கள் ராணுவ நிலையங்களைத்தான் குறிவைப்பார்கள். இந்த முறை காஷ்மீர் மக்களின் உணர்வுகளை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. இது இயல்புநிலை என்கிற எண்ணத்தை நிராகரிக்கும் வழியா?" என்கிறார்.
மேலும் அவர், "முன்னர் ராணுவ இலக்குகள் மற்றும் உள்ளூர் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் இலக்குகள் இடையே வேறுபடுத்துவதுதான் உத்தியாக இருந்தது. இப்போது அந்த வேறுபாடு மறைந்துள்ளது. அது தவிர இந்த முறை அவர்கள் இந்துக்களை குறிவைத்துள்ளனர்" என்றார்.
நாடு முழுவதும் உணர்வுகளைத் தூண்ட வேண்டும் என்பதும் பொது மக்களைக் குறிவைத்ததற்கான ஒரு காரணம் என துவா நம்புகிறார்.
"தீவிரவாதிகள் என்ன செய்தார்கள்? அவர்கள் இந்து ஆண்களை தனிமைப்படுத்திக் கொன்றுள்ளனர். இதன் நோக்கம், பெண்கள் அவர்களின் ஊர்களுக்குச் சென்று இந்தக் கதையைச் சொல்ல வேண்டும் என்பதுதான். பெண்களின் அழுகுரலுக்கு அனைத்து இடங்களிலும் தாக்கம் உண்டு. இதன் மூலம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உணர்வுகளைத் தூண்டலாம். நாம் இந்த வலையில் விழமாட்டோம் என்பதை இந்தியா முடிவு செய்ய வேண்டும்" என்கிறார் துவா.
அவரைப் பொறுத்தவரை, இது 2023ஆம் ஆண்டில் நடந்த ஹமாஸ் தாக்குதலைப் போன்றதுதான்.
"அவர்கள் இஸ்ரேலின் நோவா இசை நிகழ்ச்சியில் ஹமாஸ் செய்ததைப் போன்ற வழிமுறையைத் தேர்வு செய்துள்ளார்கள். பாதுகாப்புப் படையினரைக் கொல்வதைவிட அப்பாவி மக்கள், குறிப்பாக சுற்றுலாப் பயணிகளைக் கொல்வது மக்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே காரணம்" என்றார்.
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் ஈடுபாடு பற்றித் தனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்கிறார் அமிதாப் மட்டூ. அதேவேளையில், இது உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வியா என்கிற கேள்வியும் எழுகிறது.
"பாகிஸ்தானில் உள்ள அரசியல் மற்றும் ராணுவ அமைப்புகள் இடையே எவ்வளவு உடன்பாடு இருக்கிறது எனத் தெரியவில்லை. ராணுவம், ஐஎஸ்ஐ, லஷ்கர்-இ-தைபா போன்ற அமைப்புகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது பாகிஸ்தான் அரசுக்குத் தெரியுமா? இதில் பாகிஸ்தானின் ஈடுபாடு பற்றிச் சிறிதளவுகூட நான் சந்தேகிக்கவில்லை." என்றார்.
"இது உளவுத்துறையின் தோல்வி. நமக்கு ஏன் இந்தத் தாக்குதலை ஊகித்து முறியடிக்கக்கூடிய எந்த மின்னணுத் தகவலும் கிடைக்கவில்லை?" என்கிறார் மட்டூ.
உளவுத்துறை தோல்வி என்பது ஒரு மிகப்பெரிய தவறு என நம்புகிறார் சதிஷ் துவா.
"நாம் எதையாவது சிறப்பாகச் செய்திருக்க முடியுமா? ஆம். நான் எந்தத் தவறுகளுமே இல்லை எனச் சொல்லவில்லை. நாம் சிறப்பாக உளவுத் தகவல்களைச் சேகரித்திருக்கலாம். இந்தச் சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில் அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் பற்றிப் பேசியிருந்தார்.
இந்தச் சமிக்ஞையை நாம் புரிந்திருக்க வேண்டும். எந்த பெரிய தீவிரவாதத் தாக்குதலுக்கும் மேலிடத்தில்தான் ஒப்புதல் வழங்கப்படுகின்றன. பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு தான் என்ன செய்கிறோம் என்பது தெரியும். எனவே இந்த மாதிரியான விஷயங்கள் மீது நாம் கவனமுடன் இருந்திருக்க வேண்டும். நாம் களத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும்." என்கிறார் துவா.
மேலும் அவர், "இந்த நாடு மனித உளவுக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். நாம் தற்போது மின்னணு உளவு அமைப்பை அதிகம் சார்ந்திருக்கிறோம். இது இரண்டும் சேர்ந்த சிறந்த அமைப்பாக இருக்க வேண்டும்" என்றார்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கையில் இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு எல்லை கடந்து தொடர்பு இருப்பதாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார். இது மட்டுமில்லை, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் அட்டாரி எல்லையை மூடியது, விசாக்களை ரத்து செய்தது மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததும் அடங்கும். பல பாகிஸ்தான் அதிகாரிகளும் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு