இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட ’பெகாசஸ்’ எனும் உளவுத்தொழில்நுட்பம், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், நீதிபதிகள் ஆகியோரின் மொபைல் போன்களை ரகசியமாக கண்காணித்ததாக எழுந்த புகார்கள், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த உளவு விவகாரம் தொடர்பான மனுக்களை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என். கோடீஸ்வர் சிங் இன்று விசாரித்தனர். விசாரணையின் போது, ’தேசிய பாதுகாப்புக்காக தேசவிரோதிகளின் செயல்கள் கண்காணிக்கப்படுவது தவறு இல்லை’ என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால், சாதாரண குடிமக்கள் அல்லது அரசியல் விரோதிகளின் மீது இதுபோன்ற தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்பட்டால், அது பெரும் கவலையை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் சொன்னார்கள்.
இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ஷ்யாம் திவான் மற்றும் தினேஷ் திவேதி ஆகியோர், பெகாசஸ் விசாரணைக்குழுவின் அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என கோரினர். ஆனால், தேசிய பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களால் பாதிக்கப்படக்கூடியதால், அந்த அறிக்கையை வெளியிட முடியாது என்று நீதிபதிகள் மறுத்தனர்.
முடிவில், யார் யாரது மொபைல்கள் ஹேக் செய்யப்பட்டன என்பதை தெளிவுபடுத்தும் தகவல்களை பெகாசஸ் குழுவிடம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. பொதுமக்களின் தனிநபர் உரிமை பாதிக்கப்பட்டிருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் உறுதியளித்தது.
Edited by Siva