கர்நாடகாவில் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் மங்களூரு நகரின் புறநகரில் உள்ள குடுப்பு கிராமத்தில் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட தகராறில் 25க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பலால் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் ஏப்ரல் 27 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் பத்ரா கல்லூர்டி கோயிலுக்கு அருகில் நடந்ததாக தெரிகிறது. இளைஞரை அடித்துக் கொலை செய்து விட்டு மயங்கி விழுந்து உயிரிழந்ததாக சக நண்பர்கள் நாடகமாடியுள்ளனர். பிரேத பரிசோதனையில் உண்மை தெரியவரவே 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
முதலில் கோயில் மைதானத்திற்கு அருகில் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ஏப்ரல் 28 ஆம் தேதி நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், பல காயங்கள் இருந்தததால் கொலை நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் மங்களூரு கிராமப்புற காவல் நிலையத்தில், குடியிருப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கொண்ட குழுவால் கொலை செய்யப்பட்டதாக கருதப்படும் பாரதிய நியாய சன்ஹிதா, 2023 இன் பிரிவு 103(2) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 பேரை போலீசார் தேடி வருகின்றனார்.