சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபுவின் மகள் 06 வயது. கடந்த 2017 பிப்ரவரி 05-ஆம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை அதேபகுதியை சேர்ந்த தஷ்வந்த் என்ற இளைஞர் வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொலை செய்தார்.
தமிழகத்தை அதிரவைத்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் கடந்த 2017 டிசம்பர் 02-ஆம் தேதி தனது தாய் சரளாவை படுகொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பிச்சென்றான். அவனை போலீசார் கைது செய்தனர்.
அதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட தஷ்வந்திற்கு, சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் 46 ஆண்டுகள் சிறை தண்டனையும், தூக்கு தண்டனையும் செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டது. ஆனால், குறித்த தூக்கு தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து, தஷ்வந்த் சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்நிலையில், தனது தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டுள்ளான். தந்தை பிழற்சாட்சியாக மாறியதால் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தஷ்வந்தை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. தாயை கொலைசெய்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டபோதும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்த் தொடர்ந்து சிறையில் இருப்பான் என கூறப்பட்டுள்ளது.