படப்பிடிப்பு பணிகளில் தலையிட பெப்சிக்கு தடை விதிக்க வேண்டும்; தமிழ் திரைப்பட சங்கம் வழக்கு..!
Seithipunal Tamil April 30, 2025 06:48 AM

தமிழ் திரைப்பட சங்கம் பெப்சிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் பெப்சிக்கு எதிராக தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒரு புதிய சங்கத்தை துவங்கி இருப்பதாக கூறி பெப்சி குற்றம் சாட்டியது.

அத்துடன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும் எனவும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்றும் பெப்சி அமைப்பில் உறுப்பினர்களுக்கு பெப்சி கடந்த 02-ஆம் தேதி கடிதம் எழுதியது.

இதன் காரணமாக படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டதாக கூறி , தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தொழிலாலர் சம்மேளனத்திற்கும், திரைப்பட தயாரிப்பு சங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறி, பெப்சி நிறுவனம் ஒத்துழைப்பு அளிக்க மறுத்திருப்பது சட்ட வீரோதமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த 08-ஆம் தேதி முதல் திரைப்பட தயாரிப்பு பணிகள் முடங்கி பெரிய அளவில் நிதியிழப்பு எற்பட்டுள்ளது. ஒப்பந்தபடி படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகளை எந்த வித இடையூறும் இல்லாமல் முடித்துகொடுக்கும் படி பெப்சி அமைப்பிற்கு உத்தரவிட வேண்டும். படப்பிடிப்பு பணிகளில் தலையிட பெப்சி நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு , மே 07-ஆம் தேதிக்குள் இந்த மனுவிற்கு பதிலளிக்கும் படி பெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.