பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. தபயா ராம் தற்போது ஹரியாணாவின் ரத்தன்கார் கிராமத்தில் குல்ஃபி, ஐஸ்கிரீம் விற்று தனது குடும்பத்தை பராமரிக்கிறார். அவரது குடும்பத்தில் 34 பேர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதில், 6 பேருக்கே இந்தியக் குடியுரிமை கிடைத்துள்ள நிலையில், மீதமுள்ள 28 பேர் இன்னும் விண்ணப்ப நிலையில் உள்ளனர்.
பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானியர்கள் நாடு திரும்ப வேண்டும் என உத்தரவு வந்தபோதும், காவல்துறை விசாரணையின் பின்னர் தபயா ராம் இந்தியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பஞ்சாபில் 1945ல் பிறந்த தபயா ராம், மத அழுத்தத்தால் தமது குடும்பத்துடன் பாகிஸ்தானிலேயே நிர்பந்திக்கப்பட்டார். மத மாற்றத்துக்கு எதிராக போராடியதற்காக, அவரின் வாழ்க்கை கடினமானதாக அமைந்தது. 1988ல் லோஹியா தொகுதியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், குடும்ப தகராறால் அந்த பதவியை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.
2000ல் பாகிஸ்தானை விட்டுப் புறப்பட்ட அவர், ஹரியாணா மாநிலத்தில் ஒரு மாத விசாவில் வந்து பின்னர் தங்கிவிட்டார். தற்காலிக வாழ்விடம் நிரந்தரமானதாக்கி, குடும்பம் பெரிதாகியதால், பிழைப்புக்காக சிறிய வியாபாரத்தில் இறங்கினார்.
தபயாவின் 7 வாரிசுகள் உறவினர்களையே திருமணம் செய்துகொண்டுள்ளனர்; அவர்களுக்கும் பிள்ளைகள் பிறந்துள்ளனர். இப்போது அவருடைய கனவு – அனைவருக்கும் இந்தியக் குடியுரிமை கிடைக்கச் செய்வது.