கோவையில் சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழப்பு!
Dinamaalai April 29, 2025 11:48 PM

 

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனச்சரக பகுதியில் உடல்நலக்குறைவுடன் சுற்றி வந்த ஆண் யானை இன்று காலை உயிரிழந்தது.

கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகம் கூத்தாமண்டி பகுதியில் வன எல்லையை ஒட்டி 17 வயது மிக்க ஒற்றை ஆண் யானை கடந்த ஏப்.22ம் தேதி  உடல்நலக்குறைவுடன் நின்று கொண்டிருந்தது. 

இது குறித்து தகவலறிந்து வனச்சரகர் மனோஜ் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர்.

ஆனால் உடல்நலக்குறைவால் யானை அதே பகுதியில் சுற்றித் திரிந்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின்படி முதலுதவி வழங்கப்பட்டு யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தர்பூசணி மற்றும் வாழைப்பழம் மூலமாக ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள், குடற்புழு மாத்திரைகள் மற்றும் கல்லீரல் புத்துணர்வு வைட்டமின் டானிக் ஆகியவற்றை வழங்கி வந்தனர்.

வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை ஆண் யானையை வனப்பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தொடர்ந்து 7 நாட்களாக கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் உடல்நலக்குறைவுடன் காணப்பட்ட ஆண் யானை இன்று காலை உயிரிழந்தது. இதை தொடர்ந்து வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.