குன்றத்தூர் அருகே தாயை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை குற்றவாளி தஷ்வந்தை விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரது மகள் ஹாசினி (வயது 6). கடந்த 2017-ஆம் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி திடீரென மாயமானாள். இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தியதில் அதே குடியிருப்பில் வசித்து வந்த சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்த் (24) என்பவர் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் உடலை ஒரு பையில் எடுத்துச்சென்று அனகாபுத்தூர் அருகே தீ வைத்து எரித்துள்ளார். இதையடுத்து தஷ்வந்தை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் குன்றத்தூர், சம்பந்தம் நகர், ஸ்ரீராம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தஷ்வந்த் தனது தந்தை சேகர், தாயார் சரளா ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2018 ஜனவரி 2-ந் தேதி செலவுக்கு பணம் கொடுக்காததால் தஷ்வந்த் தனது தாயார் சரளாவை கொடூரமாக கொலை செய்து அவா் அணிந்து இருந்த 25 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை தனியாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 2017 டிசம்பர் 5-ந் தேதி முதல் நடந்து வந்தது. சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அறிவித்து தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இந்நிலையில் தஷ்வந்த் தனது தாயை கொலை செய்தாக தந்தை சேகர் அளித்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அரசு தரப்பு மற்றும் தஷ்வந்தின் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா உத்தரவிட்டார். அதன்படி இன்று மாலை 3-மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தஸ்வந்த் ஆஜரானார்.
தொடர்ந்து நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா தஸ்வந்தை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கு விசாரணையின் போது தஷ்வந்தின் தந்தை சேகர் பிறழ் சாட்சியாக மாறி உள்ளார். தஷ்வந்த் தனது தாய் சரளாவை கொலை செய்ததை யாரும் பார்க்காததாலும், தஷ்வந்த் தனது தாய் சரளாவை கொலை செய்யவில்லை எனவும், மாங்காடு காவல் நிலையத்தில் தன்னிடம் இரண்டு புகார்களை காவல்துறையினர் பெற்றுள்ளதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் தஷ்வந்தை தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகை பணத்தை திருடி சென்ற வழக்கில் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். மேலும் சிறுமி ஹாசினியை கொலை செய்த வழக்கில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வழங்கிய நிலையில் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்தார். அதில் தஷ்வந்திற்க்கு தூக்கு தண்டனை வழங்கியது சரியானது என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். தொடர்ந்து தஷ்வந்த் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.