'ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்!'
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. அதில், ராஜஸ்தானை சேர்ந்த 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
ஐ.பி.எல் வரலாற்றில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதம் இது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு ராஜஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் வைபவ் பற்றி பேசியிருந்தார்.
'பேட்டிங் பயிற்சியாளர் கருத்து!'
அவர் பேசுகையில், 'நாங்கள் நான்கு மாதங்களுக்கு முன்பு ட்ரையல்ஸில்தான் முதல் முறையாக வைபவ்வை சந்தித்தோம். அப்போதே ஒரு சிறப்பான வீரரைக் கண்டடைந்துவிட்டோம் என்கிற நிறைவு கிடைத்தது. வைபவ் சூர்யவன்ஷி ஆடியிருப்பது ஸ்பெசலான இன்னிங்ஸ். நாங்கள் கடந்த சில மாதங்களாக அவரை கவனித்து வருகிறோம்.
வலைப்பயிற்சியிலும் இதே மாதிரிதான் ஆடினார். ஆனால், அதற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இத்தனை பேருக்கு முன்பாக ஒரு தரமான பௌலிங் யூனிட்டுக்கு எதிராக அவர் இப்படியொரு இன்னிங்ஸை ஆடியிருப்பது ஸ்பெசலான விஷயம்தான்.
வைபவ்வை சச்சினோடு ஒப்பிடாதீர்கள். வைபவ் இப்போதுதான் ஆட வந்திருக்கிறார். வைபவ் மாதிரியான சிறுவரின் மீது இந்த ஒப்பீடை சுமத்துவது அநீதியாகும். அவர் சச்சின் அல்ல. அவர் ஒரு புதிய சூர்யவன்ஷி.' என்றார்.